Monday

குறும்புடலை சாகுபடி... குதூகல வரும்படி!

குறும்புடலை சாகுபடி... குதூகல வரும்படி!
குறும்புடலை சாகுபடி.... குதூகல வரும்படி!....
நாட்டுரகத்தில் நச் லாபம்....
அம்மணி இந்த விவசாயமெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது... ஆளை விடு!' என்று தலைதெறிக்க ஓடிய கணவன், கோழிப்பண்ணையிலேயே அடைந்துவிட, 'ஒரு கை பார்த்துவிடுகிறேன்' என்று விவசாயத்தில் களமிறங்கிய அந்த அம்மணி... இன்றைக்கு புகுந்த வீடே போற்றும் பொன்மகளாக உருவெடுத்திருக்கிறார். அவருக்குக் கைகொடுத்தது... புடலை.
கோவை மாவட்டம், பல்லடம் அடுத்துள்ள எம்.ஊத்துக்குளி கிராமத்தில் சாதனைப் பெண்ணாக நின்று, குறும்புடலை விவசாயத்தில் வெற்றிப்பந்தல் போட்டு வரும் அந்த அம்மணி... கௌசல்யா. தோட்டத்தில் வேலைக்காரப் பெண்களோடு களை எடுத்துக் கொண்டிருந்தவரைச் சந்தித்தோம். 
‘‘வீட்டுக்காரர் சுப்பிரமணியம் கோழிப்பண்ணை நடத்தறார். எங்களுக்கு விவசாய நிலம் நிறைய இருக்கு. பருத்தி, புகையிலை, வெங்காயம்னு பல பயிர்களைப் போட்டுப் பார்த்தோம். முட்டுவளிச் செலவு எகிறிப் போனதுதான் மிச்சம். எங்களது கிணற்றுப்பாசன விவசாயம். போதுமான தண்ணி இருந்தாலும், ஆள் பற்றாக்குறையால தாக்குப் பிடிக்க முடியாம திணறினோம். இதனாலேயே அவருக்கு விவசாயத்து மேலிருந்த ஈடுபாடு குறைஞ்சி, ‘எனக்கு கோழிப்பண்ணைத் தொழிலே போதும்’னு ஒதுங்கிட்டார். வளமான நிலத்தை தரிசா விட எம்மனசு கேட்கல. 
எங்க அம்மா வீடு கோயமுத்தூர் பக்கத்துல இருக்கற பாப்பம்பட்டி. அந்த ஊர்ல ஆயிரம் ஏக்கருக்கும் மேல் பந்தல் விவசாயம்தான். புடலை, பாகல், பீர்க்கன், அவரைனு பரபரப்பா நடக்கும். வேலை ஆட்களும் அதிகமா தேவைப்படாது. காய்கறி தேவை பெருகிக்கிட்டே இருக்கறதால நல்ல வருமானமும் அவங்களுக்குக் கிடைக்குது. இதையெல்லாம் நேர்ல பார்த்திருக்கறதால, பந்தல் விவசாயத்துல தைரியமா இறங்கிட்டேன்.
நாலு ஏக்கர் பந்தல்ல... புடலை, பாகல்னு விளைஞ்சி தொங்குது. அதைவெச்சி தினந்தோறும் வருமானம் பார்க்கிறேன். ஒவ்வொரு விவசாயியையும் முழி பிதுங்க வைக்கறது முட்டுவளிச் செலவுதான். அதைக் குறைச்சாலே பாதி வெற்றிங்கறதை தெரிஞ்சுக்கிட்டு மண்புழு உரத் தயாரிப்பைக் கத்துக்கிட்டு நானே உற்பத்தி செய்றேன். இப்போ என்னோட வீட்டுக்காரரே அசந்து போய் நிக்கறாரு. அவரோட கோழிப்பண்ணை வருமானத்தைவிட, என்னோட விவசாயத்துல லாபம் அதிகமா வருது. அவரு மட்டுமில்ல.. மொத்தக் குடும்பமுமே பெருமையா என்னைத் தாங்கிப் பிடிக்குது’’ என்று பூரிப்புப் பொங்கப் பேசிய கௌசல்யா, சாகுபடி விவரங்களை எடுத்து வைத்தார். அது-
குறும்புடலை என்று சொல்லப்படும் இந்தப் புடலை அதிகபட்சம் ஒரு அடி நீளம்தான் வளரும். சிலர் வரிப்புடலை என்றும் கூறுவார்கள். இது நாட்டு ரகத்தைச் சேர்ந்தது. ஒரு ஏக்கரில் பந்தல் அமைக்க சுமார் 70 ஆயிரம் ரூபாய் வரை பிடிக்கும். 8 அடி உயரம் கொண்ட கல்தூண்களை 10 அடி இடைவெளியில் நிலத்தைச் சுற்றிலும் ஒன்றரை அடி ஆழம் குழி எடுத்து நடவேண்டும் (சுமார் 200 தூண்கள்). அதன்மீது கம்பி வலைப் பந்தல் அமைக்க வேண்டும் (ஒரு டன் கம்பிகள்). ஒரு தடவை பந்தல் போட்டாலே... 25 ஆண்டுகளுக்கும் மேல் தாங்கும். அதன் பிறகு கம்பிகளை மாற்றினால் போதும்.
ஏக்கருக்கு ஏழு லோடு தொழுஉரத்தை மண்வெட்டி யால் பரவலாக இறைக்க வேண்டும். தொடர்ந்து ஏர்க்கலப்பை கொண்டு நன்றாக உழவு செய்ய வேண்டும். சொட்டுநீர்ப் பாசனம் அமைத்தால் நல்லது. இதற்குப் பதினைந்தாயிரம் ரூபாய் செலவு பிடிக்கும். அரசு மானியம் போக, ஏழாயிரம் ரூபாய் கையிலிருந்து போடவேண்டும் (கௌசல்யா சொட்டு நீர்ப்பாசனம் அமைத்துள்ளார்). வழக்கமான வாய்க்கால் பாசனம் மூலமாகவும் செய்யலாம். அடுத்து, 30 செ.மீ. நீள, அகல மற்றும் ஆழமுள்ள குழிகளை 2.5 மீட்டர் இடைவெளியில் வட்டபாத்தி போன்று மாற்றி அமைத்து, சொட்டுநீர்க் குழாய் பொருத்த வேண்டும்.
ஒரு குழிக்கு 2 கிலோ மண்புழு உரம் மற்றும் தழை, மணி, சாம்பல் சத்துக்கள் அடங்கிய கலப்பு உரம் 100 கிராம் ஆகியவற்றை அடியுரமாகத் தரலாம். ஒரு ஏக்கரில் 1,300 குழிகள் வரை இருக்கும். 400 கிராம் விதைகள் தேவைப்படும் (விவசாயிகளே விதைகளை உற்பத்தி செய்வதால் பஞ்சமில்லாமல் கிடைக்கிறது). சுத்தமான பசு மாட்டு மோரில் ஒரு நாள் முழுதும் விதைகளை ஊறவைத்து... விதை நேர்த்தி செய்வது நல்லது. இதனால் முளைப்புத்திறன் கூடும். குழிக்கு மூன்று விதைகள் வீதம் ஊன்ற வேண்டும். பிறகு தண்ணீர் விடுவது அவசியம்.
ஏழு முதல் பத்து நாட்களில் முளைவிடத் தொடங்கும். தொடர்ந்து, 2 நாட்களுக்கு ஒரு தண்ணீர் தேவை. 20-ம் நாளில் ஒரு களை எடுக்க வேண்டும். 30-ம் நாளில் தழை, மணி, சாம்பல் சத்துக்கள் கொண்ட ஒரு மூட்டை உரத்தை குழிக்கு 40 கிராம் வீதம் போடலாம். 50-ம் நாளில், ஒவ்வொரு குழியிலும் வளர்ந்திருக்கும் செடிகளில் இரண்டை மட்டும் வைத்துக்கொண்டு, மற்றொன்றை அப்புறப்படுத்த வேண்டும். 6 அடி உயரம் கொண்ட நீளக்குச்சிகளை குழிகளில் நட்டு, வாழை நார் கொண்டு கொடிகளைக் கட்டி பந்தலில் படர விடலாம். 55-ம் நாளில் கொடிகளில் வளர்ந்துள்ள பக்கக் கிளைகளை ஒடித்து கவாத்து செய்வது முக்கியம். 120 நாட்கள் வரை மொத்தம் நான்கு களைகளை எடுக்கவேண்டும். கொடிகள் பந்தலில் பரவிவிட்ட பிறகு, நிழல் காரணமாக களைகள் அதிகம் வளர வாய்ப்பில்லை.

60-ம் நாளில் கடலைப் புண்ணாக்கு உரம் 50 கிலோவை தூளாக்கி, சம அளவில் ஒவ்வொரு குழியிலும் இடலாம். தேவைப்பட்டால் 10 கிலோ யூரியாவையும் கலந்துகொள்ளலாம். இதனால் காய்கள் சீரான வளர்ச்சியில் பந்தல் முழுக்க இருக்கும். 75-ம் நாளில் ஜிலுஜிலுவென அழகுக் காட்டி குறும்புடலைகள் பந்தலில் தொங்கியபடி... நம்மை அறுவடைக்கு அழைக்கும். இது முதல் அறுவடை. அதைத் தொடர்ந்து, 85-ம் நாளில் பொட்டாஷ் உரத்தை குழிக்கு 40 கிராம் வீதம் கொடுக்கவேண்டும் (90-ம் நாளில் இருந்து 15 நாட்களுக்கு ஒருமுறை குழிக்கு அரை கிலோ வீதம் மண்புழு உரம் கொடுக்கலாம்). முதல் அறுவடை நடந்த 75-ம் நாளில் இருந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் காய்களைப் பறிக்கலாம். மொத்த சாகுபடி காலம் 165 நாட்கள். இதில் 90 நாட்கள் மகசூல் காலமாகும். 45 பறிப்புகள் மூலம் 20 டன் மகசூல் கிடைக்கும்.
குறும்புடலை விவசாயத்துக்கு பட்டம் கிடையாது என்பதால் ஆண்டு முழுவதும் பயிரிடலாம். 165 நாள் மகசூல் முடிந்த பிறகு, கொடிகளை அப்புறப் படுத்திவிட்டு... பழைய குழிகளில் இருந்து அரை அடி தள்ளி புதிய குழி அமைத்து விதையிட்டால் சிறந்தது. பழைய குழிகளில் தொடர்ந்து சாகுபடி செய்தால் மகசூல் குறையும்' என்று சாகுபடிக் குறிப்புகளைக் கொடுத்த கௌசல்யா,
''காய்களைப் பறிச்சி திருப்பூர் மார்க்கெட்டுக்கு அனுப்புறேன். இப்போதைக்கு கிலோ எட்டு ரூபாய் வரை விலை போகுது. 6 ரூபாய்க்கு குறைஞ்சி போனதே இல்ல. சீசன்ல கிலோ 10 ரூபாய்கூட விலை கிடைக்கும். வேன் வாடகை, சுங்கம், கூலி எல்லாம் சேர்த்து கிலோவுக்கு 70 பைசாதான் செலவு. மொத்த வருமானம் ஒரு லட்சத்து அறுபது ஆயிரம் ரூபாய்'' என்று சொல்லி நிறுத்தியதோடு, தனக்குள் இருக்கும் ஆதங்கம் ஒன்றையும் வெளியிட்டார். அது-
''இப்போதைக்கு ரசயான உரம், பூச்சிக்கொல்லி மருந்துங்களைத்தான் போடுறேன். இதையெல் லாம் சுத்தமா குறைச்சிட்டு, முழுமையான இயற்கை விவசாயினு பேர் எடுக்கணும்கிறதுதான் என்னோட ஆசை.''
நோய் விரட்ட....

புடலையில் பச்சைக் காய்ப் புழுக்கள் துளையிட்டு காய்களைச் சேதமாக்கும். இதற்கு 250 மில்லி மோனோ குரோட்டோபாஸ் திரவ பூச்சிக்கொல்லி மருந்தை, 100 லிட்டர் நீரில் கலந்து விசைத்தெளிப்பான் கொண்டு தெளிக்கவேண்டும். இதன் மூலம் காய் துளைப்பைக் கட்டுப்படுத்தலாம்.
வெள்ளைச் சாம்பல் நோய் காரணமாக இலைகள் சுருண்டு... வாடி... கீழே விழுந்துவிடும். இதைத் தடுக்க... மெத்தோமில் பவுடர் 250 கிராமை 120 லிட்டர் நீரில் கரைத்து தெளிக்க வேண்டும். மேலும், சிறுசிறு வண்டுகள், பூச்சிகள், குளவிகள் போன்றவை களினாலும் பாதிப்பு உண்டு. இதை கருப்பட்டி இரண்டு கிலோ, அழுகிய பழச்சாறு, வேப்பெண்ணெய் ஆகியவற்றைக் கலந்து, இனக்கவச்சிப் பொறி போன்ற சிறிய டப்பாக்களில் ஊற்றி... பந்தலுக்குள் 15 இடங்களில் கட்டி தொங்கவிட வேண்டும். பூச்சி, வண்டு, குளவிகள் எல்லாம் இந்தப் பொறிக்குள் விழுந்து சமாதியாகும். பதநீர், ஆமணக்கு எண்ணெய் போன்றவற்றையும் பயன்படுத்தலாம. 10 நாட்களுக்கு ஒரு முறை இவைகளை சுத்தம் செய்து, இடம் மாற்றி தொங்கவிட வேண்டும்.

- படங்கள்: தி.விஜய்
ஜல்லிப்பட்டி பழனிச்சாமி
Source: pasumaivikatan

No comments: