Friday

வீட்டிலேயே செய்யலாம் பிசினஸ் - வருமானத்தை பெருக்கும் வண்ண மீன்கள்

'அத்தியாவசியப் பொருட்களை கையில் எடுத்தால்தான் பிசினஸில் ஜெயிக்க முடியும் என்பதில்லை. மனசுக்கு சந்தோஷம் தருகிற விஷயங்களில் முதலீடு செய்தாலும் முதலாளியாக ஜொலிக்கலாம்'' என்கிற சுபிதா பிரசாத், கலர் மீன்கள் வளர்ப்பு பிசினஸில் அட்டகாச லாபம் சம்பாதிக்கிறார். சென்னை, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த இவர், கடந்த பதினாறு வருடங்களாக இந்தத் தொழிலை செய்து வருகிறார்.
அவருடைய வீட்டின் முன்பாதி முழுக்கக் கடையாக மாறியிருக்க, சுற்றிலும் இருக்கும் தொட்டிகளுக்குள் வண்ண வண்ண மீன்கள் நீந்திக் கொண்டிருந்தன.
அவற்றை ரசித்தபடியே தன் பிசினஸ் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார் சுபிதா..
'எனக்குக் கல்யாணமான புதுசுல என் கணவருக்கு எந்த வேலையுமே சரியா அமையல. 'ஏதாவது பிசினஸ் பண்ணலாமா?'னு அவர் என்கிட்ட கேட்டப்ப எனக்கு உதிச்ச ஐடியாதான் இந்த 'அக்வேரியம் பிசினஸ்'. எங்க வீட்டுலயே சின்னதா ஒரு ரூமை ஒதுக்கி, கடையை ஆரம்பிச்சோம். கிடைச்சிருக்குற வரவேற்பால இப்போ நல்லா டெவலப் ஆகியிருக்கு'' என்றவரிடம், இந்த வரவேற்புக்கான காரணத்தைக் கேட்டோம்..
''முன்னெல்லாம் பெரிய பணக்கார வீடுகள்லதான் கலர் மீன் வளர்ப்பாங்க. இப்ப மிடில் கிளாஸ் குடும்பங்கள்லயும் நிறைய பேர் இதுல ஆர்வமா இருக்காங்க.
தவிர, வாஸ்து மீன்கள் பத்தின நம்பிக்கையும் மக்கள்கிட்ட அதிகமா இருக்கு. அரவானாங்கிற வகை வாஸ்து மீன்கள் ரொம்ப நல்லா போகுது. வீட்டுக்கு வர்ற கெடுதலையெல்லாம் இந்த மீன் எடுத்துக்-கிட்டு, தங்களை ஆபத்துல இருந்து காப்பாத்துறதா நிறைய பேர் நம்புறாங்க. வாஸ்து மீன்லயே பெரிய சைஸ் மீன்கள் ஐம்பதாயிரம் ரூபாய்க்கெல்லாம் போகும்'' என்று இந்தத் தொழில் ஜொலிப்பதன் காரணம் சொன்னவர், மீன் வளர்ப்பைத் தொடங்க என்னவெல்லாம் தெரிந் திருக்க வேண்டும் என்பது பற்றிச் சொன்னார்..
''கிராமப்புறங்கள்ல 'ஆழம் தெரியாம காலை விடாதே'னு ஒரு பழமொழி சொல்வாங்க. அது இந்தத் தொழிலுக்கும் பொருந்தும். மீன் வளர்ப்பு பத்தி 'ஏ டூ இஸட்' விஷயங்களை தெரிஞ்சிக்கிட்ட பிறகுதான் இதை ஆரம்பிக்கணும்.
முதல்ல, எந்த மாதிரி மீன்கள் வாங்கினா நல்லா வியாபாரம் ஆகும்னு தெரியணும். விலை குறைவாவும் தரமாவும் எந்த இடத்துல மீன்கள் கிடைக்கும்னு தெரிஞ்சு, அங்கே கொள்முதல் பண்ணலாம். கோல்டன் ஃபிஷ், மாலிஸ், கப்பீஸ், ரெட் சோட்டல், பிளவரான், சுறா குட்டிகள், டேங்க் கிளீனர் மாதிரியான மீன்களைத்தான் நிறைய பேர் விரும்பி வாங்குறாங்க. இந்த மீன்களோட தன்மை, இது என்ன மாதிரியான சூழல்ல ஆரோக்கியமா வளரும்.. இதுக்கு சாப்பாடு எப்படி தரணும்.. இப்பிடி எல்லா விஷயங்களையும் தெரிஞ்சு வெச்சுக்கணும்..'' என்றவரிடம், இதில் கிடைக்கும் லாபம் பற்றி விசாரித்தோம்..
''சின்ன சைஸ் மீன்கள்னா ஜோடி எட்டு ரூபாய்க்கு வாங்கி, பன்னிரண்டு முதல் பதினஞ்சு ரூபாய் வரைக்கும் விக்கலாம். பெரிய மீன்களா இருந்தா ஜோடி முந்நூறு ரூபாய்ல இருந்து மூவாயிரம் ரூபாய் வரைக்கும் விலை போகும். மீன்களோட நிறம், உடல் அமைப்பு, துறுதுறுப்பு இவற்றைப் பொறுத்து மீன்களோட விலையை அதிகரிக்கலாம்.
இந்தத் தொழில்ல முக்கியமான விஷயமே கஸ்டமர் கேர்தான். மீன் வாங்கறவங்களுக்கு மீன்களைப் பத்தி எதுவுமே தெரியாது. வீட்டுக்கு வாங்கிட்டுப் போனதுமே மீனுக்கு ஏதாவது ஆயிடுச்சுனா, தரமில்லாத மீனை கொடுத்துட்டதா நம்மளைத்தான் குற்றம் சொல்லுவாங்க. அதனால மீன் வாங்கறவங்ககிட்ட, தொட்டியை சுத்தம் பண்றதுல ஆரம்பிச்சு, மீனுக்கான உணவு, அதுக்கு உடல்நிலை சரியில்லாம போனா என்ன பண்ணணும்ங்கிறது உட்பட மொத்த பராமரிப்பு டிப்ஸையும் நாமதான் சொல்லணும்..'' என்றவர், இது சார்ந்த மற்ற வருமானம் பற்றியும் சொன்னார்..
''சிலர் மீன் மட்டும் வாங்குவாங்க. ஆனா, சிலர் மீன்களோட சேர்த்து தொட்டியில வைக்கற மாதிரியான கண்ணாடி கற்கள், செயற்கை புற்கள், கூழாங்கற்கள், முதலை, பாம்பு போன்ற ரப்பர் பொம்மைகள், தண்ணீரை சுத்தம் செய்றதுக்காக தொட்டிக்குள்ள வைக்குற ஃபில்டர்கள், மீன் உணவு, மருந்து, மீன் பிடிக்குற வலைகள்..னு மீன் வளர்ப்புக்குத் தேவைப்படுற எல்லாத்தையும் கேப்பாங்க. அவங்க ரசனைக்கு ஏத்த மாதிரியான பொருட்களை வாங்கி விக்கலாம். வேலைக்கு ஆட்கள் இருந்தா, மீன் தொட்டிகளைக்கூட வீட்டுலயே செய்து விக்கலாம்.
இது தவிர, இன்னொரு சைடு பிசினஸூம் இருக்கு. வீடுகள்லயும் ஆபீஸ்கள்லயும் மீன் தொட்டிகளை சுத்தம் செய்றதுக்கு கான்ட்ராக்ட் எடுக்கலாம். ஒருமுறை கிளீன் பண்றதுக்கு 100 ரூபாய்ல இருந்து 150 ரூபாய் வரை வசூலிக்கலாம். என் கணவர் கூட அந்த கான்ட்ராக்ட்லதான் இப்ப பிஸியா இருக்கார்..'' என்று நம்பிக்கையோடு முடித்தார் சுபிதா பிரசாத்.
மீன் வளர்ப்பு பற்றி இன்னும் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? 9444686288 என்ற எண்ணில் சுபிதாபிரசாத்  தொடர்பு கொள்ளலாம்.
Source: http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=54056

No comments: