Friday

கலங்க விடாத கடலை....அள்ளிக்கொடுக்கும் ஆமணக்கு.... மானாவாரியில் மகத்தான மகசூல் கூட்டணி !

கலங்க விடாத கடலை....அள்ளிக்கொடுக்கும் ஆமணக்கு....
மானாவாரியில் மகத்தான மகசூல் கூட்டணி !
 ''மானாவாரி வெள்ளாமையில எள், உளுந்து, நிலக்கடலைனு தனித்தனியா சாகுபடி செய்யாம... ஊடுபயிரா ஆமணக்கையும் சேர்த்து சாகுபடி செஞ்சா... அருமையான விளைச்சல் பார்க்கலாம்'' என்று தன்னுடைய  அனுபவத்தை சந்தோஷத்தோடு பகிர்ந்து கொள்கிறார், முன்னாள் ஆசிரியரும்... எந்நாளும் விவசாயியுமான கோதண்டராமன்.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இவர், இயற்கை வழி விவசாயத்தில் மானாவாரியாக கடலை விதைத்து, ஊடுபயிராக ஆமணக்கையும் பயிர் செய்திருக்கிறார். நிலக்கடலை அறுவடைப் பணியில் மும்மரமாக இருந்த நேரத்தில்தான் நாம் கோதண்டராமனைச் சந்தித்தோம்.
''பரம்பரையாவே நாங்க விவசாயக் குடும்பம்தான். வாத்தியார் வேலை பார்த்துக்கிட்டே விவசாயத்தையும் கவனிச்சுட்டிருந்தேன். ரிட்டையர் ஆன பிறகு முழுநேரமும் விவசாயம்னு ஆகிப்போச்சு. ஆரம்பத்துல ரசாயன உரம், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தித்தான் விவசாயம் பார்த்தேன். ஏழு வருஷத்துக்கு முன்ன கறிவேப்பிலை நட்டு, இடையில அரைக்கீரை, முளைக்கீரையெல்லாம் போட்டிருந்தேன். அப்போ வந்து பார்த்த சில இயற்கை விவசாயிங்க 'பஞ்சகவ்யா தெளிச்சா... செடி செழிப்பா வளரும்’னு சொல்லி, பஞ்சகவ்யா, அமுதகரைசல் எல்லாம் தயாரிக்கறதுக்கு சொல்லிக் கொடுத்தாங்க.
பிறகு, அமுதக்கரைசலைத் தயாரிச்சுத் தெளிச்சேன். கீரை வேகமா வளர ஆரம்பிச்சுது. அதை சமைச்சுச் சாப்பிட்டப்போ... சுவையாவும் இருந்துச்சு. அதுக்கப்பறம் செஞ்சியில 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வார் நடத்தின இயற்கை விவசாயப் பயிற்சியில பங்கேற்ற பிறகு... முழு இயற்கை விவசாயியா மாறிட்டேன்.
ரசாயன முறையில விளைஞ்ச நெல்லை ஒரு சாக்குல பிடிச்சா... ஒரு மூட்டை நெல்... 75 கிலோதான் இருக்கும். நான் இயற்கை வழி விவசாயத்துக்கு மாறின பிறகு, அதே 75 கிலோ சாக்குல ஒரு மூட்டைக்கு எண்பதுல இருந்து எண்பத்தஞ்சு கிலோ வரைக்கும் நெல் இருந்துச்சு. அந்த அளவுக்கு நெல்லோட எடை கூடி இருக்கு இயற்கை விவசாயத்துல.
2005-ம் வருஷம் ரிட்டையர் ஆன பிறகு... முழு மூச்சா விவசாயத்துல இறங்கிட்டேன். இப்ப என் கைவசம் 7 ஏக்கர் 80 சென்ட் நிலம் இருக்கு. அதுல ஒரு ஏக்கர்ல நெல்லி; ஒரு ஏக்கர்ல சப்போட்டா; மூணு ஏக்கர்ல கரும்பு; ஒரு ஏக்கர்ல நெல்; ஒரு ஏக்கர்ல துவரைனு போட்டிருக்கேன். 80 சென்ட்ல மானாவாரியா கடலையையும் ஆமணக்கையும் போட்டிருக்கேன்'' என்ற கோதண்டராமன்... நிலக்கடலை ஆமணக்கு சாகுபடி பற்றி வகுப்பெடுக்க ஆரம்பித்தார்.
விதைநேர்த்தி முக்கியம் !
'நிலக்கடலை சாகுபடி செய்ய... வடிகால் வசதியுடைய செம்மண் மற்றும் மணற்பாங்கான மண்வகைகள் ஏற்றது. மானாவாரியில் சாகுபடி செய்ய ஆடிப்பட்டம்தான் சிறந்தது. நிலத்தை குறுக்கு-நெடுக்காக இரண்டு சால் உழவு செய்து... மண்ணை பொலபொலப்பாக்க வேண்டும். 80 சென்ட் நிலத்துக்கு 45 கிலோ விதை தேவைப்படும். விதைக்கடலையுடன் 200 கிராம் சூடோமோனஸ் கலந்து விதைநேர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
கடலை விதைத்த மறுநாள் ஆமணக்கு !
பிறகு, நிலத்தில் மண்புழு உரக்கலவையை (500 கிலோ மண்புழு உரம், 10 கிலோ அசோஸ்பைரில்லம், 10 கிலோ பாஸ்போ-பாக்டீரியா,   10 கிலோ ரைசோபியம், 1 கிலோ சூடோமோனஸ், 2 லிட்டர் பஞ்சகவ்யா ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து 24 மணி நேரம் வைத்திருந்தால்... மண்புழு உரக்கலவை தயார். இது 80 சென்ட் நிலத்துக்கு போதுமானது) இட்டு, டிராக்டரில் விதைக் கலப்பையைப் பொருத்தி... முக்கால் அடிக்கு ஒரு விதை வீதம் விதைக்க வேண்டும் (இவர் டி.எம்.வி.-7 ரக விதையை விதைத்துள்ளார், இதன் வயது 105 நாட்கள்).
கடலை விதைத்த மறுநாள், 5 அடி இடைவெளி வரிசையில் 4 அடி இடைவெளியில்... மூன்று மூன்று ஆமணக்கு விதைகளாக ஊன்ற வேண்டும் (இவர் ஜீ.சி.ஹெச்.-5 ரக ஆமணக்கு விதைத்திருக்கிறார், இதன் வயது 6 மாதங்கள்). இப்படி விதைக்கும்போது ஒன்றரை கிலோ விதை தேவைப்படும்.
விதைத்த ஒரு வாரத்தில் நிலக்கடலை முளைப்பு எடுக்கும். ஏழு முதல் பத்து நாட்களுக்குள் ஆமணக்கு முளைப்பு எடுக்கும். நிலக்கடலை விதைத்த 25-ம் நாள், 80 கிலோ ஜிப்சம் உரத்தைத் தூவிவிட்டு, களை எடுக்க வேண்டும். அப்போதே, மூன்று மூன்றாக முளைத்து வரும் ஆமணக்குச் செடிகளில் தரமான ஒன்றை மட்டும் வைத்துவிட்டு, மீதி இரண்டு செடிகளை அகற்றிவிட வேண்டும். மீண்டும் 40-ம் நாளில் களை எடுக்க வேண்டும். அதற்கு மேல் களை எடுக்கத் தேவையில்லை.
மழை... கவனம் !
ஆமணக்கு பயிர் செய்திருப்பதால்... நிலக்கடலையில் பூச்சித்தாக்குதல் அதிகம் இருக்காது. மேலும், புரோடீனியா புழுத்தாக்குதலைக் குறைக்க 30 மற்றும் 60-ம் நாட்களில், 80 லிட்டர் தண்ணீரில் 8 லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டியைக் கலந்துத் தெளிக்க வேண்டும். 35 மற்றும் 50-ம் நாட்களில் 80 லிட்டர் தண்ணீரில் இரண்டரை லிட்டர் பஞ்சகவ்யாவைக் கலந்துத் தெளிக்க வேண்டும்.
50-ம் நாளில் விழுது இறங்க ஆரம்பித்து 85-ம் நாளுக்கு மேல் கடலை முற்ற ஆரம்பிக்கும். 95-ம் நாளில் இருந்து 105-ம் நாளுக்குள் கடலை முற்றியிருப்பதைப் பார்த்து அறுவடை செய்ய வேண்டும். அறுவடை நெருங்கும் சமயத்தில்... நிலத்தில் மூன்று நாட்களுக்கு மேல் தண்ணீர் நின்றால், கடலை முளைக்க ஆரம்பித்து விடும். அதனால், அடைமழைக்கு முன் அறுவடை செய்துவிட வேண்டும்.
புழுக்களுக்கு எண்ணெய் கரைசல் !
ஆமணக்கு 70-ம் நாளில் பூவெடுக்க ஆரம்பித்து, 90-ம் நாளுக்கு மேல் முற்றத் தொடங்கும். 95-ம் நாளில் செடிக்குச் செடி கையால் மண் அணைக்க வேண்டும். அந்த சமயத்தில் புரோடீனியா புழுக்கள் தாக்குதல் இருக்கலாம். வேப்பெண்ணெய், புங்கன் எண்ணெய் ஆகியவற்றில் தலா 450 மில்லி,  100 மில்லி தண்ணீர், 30 மில்லி காதி சோப் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, 100 லிட்டர் தண்ணீரில் கலக்கி, நிலம் முழுவதும் தெளிக்க வேண்டும். 100 நாளுக்கு மேல் அறுவடை செய்ய ஆரம்பிக்கலாம். 15 நாட்களுக்கு ஒரு பறிப்பு என 6 முறை அறுவடை செய்யலாம்.’
80 சென்டில் 45 ஆயிரம் !
சாகுபடிப் பாடத்தை முடித்த கோதண்டராமன், நிறைவாக... ''அறுவடை செய்து, ஆய்ஞ்சு காய வெச்சா 80 சென்ட்ல 10 மூட்டை (45 கிலோ மூட்டை) வரை கடலை கிடைக்கும். மூட்டை 1,800 ரூபாய்னு வித்தா 18,000 ரூபாய் கிடைக்கும்.
80 சென்ட்ல ஒரு டன் ஆமணக்கு கிடைக்கும். சராசரி விலையா கிலோவுக்கு 40 ரூபாய்னு வெச்சுக்கிட்டாலே, 40,000 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். ஆகமொத்தம் 58,000 ரூபாய் வருமானம். அதுல செலவு போக 45,000 ரூபாய் வரைக்கும் லாபம் கிடைக்கும்'' என்றார், உற்சாகமாக.
தொடர்புக்கு 
கோதண்டராமன், செல்போன்: 94421-74460.
Source:pasumaivikatan

No comments: