Monday

அரை ஏக்கரில் 21 மூட்டை... கில்லி அடிக்கும் கிச்சடி சம்பா..!


அரை ஏக்கரில் 21 மூட்டை...
கில்லி அடிக்கும் கிச்சடி சம்பா..!
'ரசாயன முறை விவசாயம் மற்றும் வீரிய ரக விதைகள் ஆகியவை மட்டுமே உணவுப் பொருள் உற்பத்தியைப் பெருக்கக்கூடியவை.
இவற்றில் மட்டுமே அதிக விளைச்சல் சாத்தியம்’ என்று திரும்ப திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், விவசாய விஞ்ஞானிகள் பலர்.
அதேசமயம், 'வீரிய ரக மகசூலுக்கு எந்த வகையிலும் சளைத்ததில்லை... பாரம்பரிய ரகங்களின் விளைச்சல்' என்று இன்னொருப் பக்கம் நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், விவசாயிகள். இதோ... இந்த அருண்கூட அத்தகையோரில் ஒருவர்தான்!
தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அருகேயுள்ள ஜங்காலஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி அருண். கடந்த கார்த்திகை மாதத்தில் அரை ஏக்கரில் கிச்சடி சம்பா நெல்லை நடவு செய்தார். அப்போதைக்கு, அதைப் பார்த்து சந்தேகத்தோடு பேசிய மற்ற விவசாயிகள், தற்போது அவருக்குக் கிடைத்த மகசூலைப் பார்த்து ஆச்சரியத்தில் வாயடைத்துக் கிடக்கின்றனர். அருண்... 2009-ம் ஆண்டு, அக்டோபர் 25-ம் தேதியிட்ட 'பசுமை விகடன்' இதழில் 'கேழ்வரகிலும் வந்தாச்சு... ஒற்றை நாற்று நடவு!’ என்ற செய்தி மூலமாக ஏற்கெனவே வாசகர்களுக்கு அறிமுகமானவர்தான்!
''கொஞ்ச வருஷத்துக்கு முன்ன வரை நான் ஒரு ரசாயன விவசாயி. பொழுது விடிஞ்சா, வேளாண் பல்கலைக்கழகத்துக்கு போன் பண்ணி பக்குவம் கேட்டுத்தான் விவசாயம் செய்வேன். ஒரு சந்தர்ப்பத்துல 'பசுமை விகடன்’ அறிமுகமாச்சு. அடுத்து நம்மாழ்வார் அய்யாவின் தொடர்பும் கிடைச்சுது. இந்த ரெண்டு சக்திகளும்தான் என்னை இயற்கை விவசாயத்தின் பக்கம் தீவிரமா திருப்பிடுச்சு. அதுக்குப் பிறகு எனக்கிருக்கும் ஆறு ஏக்கர் நிலத்தில் ஒரு குண்டுமணி ரசாயனம்கூட விழுந்ததில்லை. மஞ்சள், வாழை, நிலக்கடலை, சாமந்தி, நெல்லுனு சுழற்சி முறையில சாகுபடி செய்யுறேன்.
பொதுவாவே, எங்க ஏரியா மண்ணுல நெல் விளைச்சல் சுமாராத்தான் இருக்கும். இந்த நிலையில நான் கிச்சிடி சம்பா நெல்லை நடறதுக்கு முடிவெடுத்தப்போ... என்னோட நண்பர்கள் சிலர் சலனப்படுத்தினாங்க. அதோட, 'ஆடிப்பட்டம்தான் சம்பா நெல்லுக்குப் பொருத்தமான சீசன். இப்போ விளைச்சல் சிறப்பா இருக்காது’னு பயமுறுத்தினாங்க. ஆனாலும், எனக்குள் ஒரு வெறி. பழைய நெல் ரகங்கள், நவீன ரகங்களுக்கு ஈடுகொடுத்து விளையாதுங்கிற இமேஜை உடைக்கணும்னு நினைச்சேன். அதுக்காகவே தீவிரமா களத்துல இறங்கி, இப்போ சாதிச்சும் காட்டியிருக்கேன்'' என்ற அருண், தொடர்ந்தார்.....
இதுதான் தற்சார்பு விவசாயம் !
''எங்க பகுதியில இருக்கற கீரைப்பட்டி விவசாயி கோவிந்தராஜ்கிட்ட, 15 கிலோ விதைநெல்லை வாங்கி வந்து நாத்து விட்டேன். நடவுக்கு 25 சென்ட் அளவு கொண்ட ரெண்டு வயல்களை எடுத்துக்கிட்டேன். ஒரு வயல்ல கிளரிசீடியா மாதிரியான தழைகளையும், மண்புழு உரத்தையும் மட்டும்தான் போட்டேன். இன்னொரு வயல்ல பல தானியச் செடிகளை மடக்கிச் சேர்த்து சேறடிச்சேன். ரெண்டு வயலிலும் சாரி (வரிசை) நடவு முறையில, சாரிக்கு சாரி ஒரு அடி இடைவெளியில நடவு போட்டேன்.
தற்சார்பு விவசாயம் !
பூச்சிகளைக் கட்டுப்படுத்த வயல்ல அங்கங்க பறவைத் தாங்கிகளை அமைச்சேன், வரப்புல உளுந்து நடவு போட்டேன். இதுபோக, ஒட்டுப் பொறிகளையும் சில இடத்துல அமைச்சேன். ரெண்டு முறை மூலிகைப் பூச்சிவிரட்டி, ஒருதடவை மோர்-தேங்காய்ப்பால் கரைசல்னு தெளிச்சேன். ஒரு தடவை கோனோ வீடர் உருட்டி களைகளை அமுக்கி விட்டேன். இவ்வளவுதான் நெல்லுக்கு நான் செஞ்ச பராமரிப்பு. இப்படி தற்சார்பு முறையில விவசாயம் செஞ்சதால... எனக்குப் பெருசா செலவு எதுவும் இல்ல. மண்புழு உரத்தைக்கூட நானே தயார் செஞ்சுகிட்டேன்.
ஒரு கிலோ அரிசி 70 ரூபாய் !
50 சென்ட் நிலத்துல 21 மூட்டை (80 கிலோ மூட்டை ) விளைஞ்சுது. அதாவது 1,680 கிலோ நெல். இதுல 100 கிலோவை அறுவடை செஞ்சவங்களுக்குக் கூலியா கொடுத்துட்டேன். விதைநெல்லுக்காக
120 கிலோ நெல்லை இருப்பு வெச்சுருக்கேன். 160 கிலோவை விதைநெல்லுக்காக கிலோ
25 ரூபாய் வீதம் வித்துட்டேன். மீதி 1,300 கிலோ நெல்லை, அரிசியாக்கினதுல 650 கிலோ கிடைச்சுது. வீட்டுத்தேவைக்கு 300 கிலோ அரிசியை வெச்சுக்கிட்டு மீதியை, கிலோ
70 ரூபாய் விலையில வித்துட்டேன். ஆக, மொத்தத்துல அரை ஏக்கர்ல செலவு போக 40 ஆயிரத்துக்கு மேல லாபம் கிடைச்சுது.
பொதுவா நெல் சாகுபடி நஷ்டம்னு சொல்வாங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் நெல் சாகுபடி லாபமாத்தான் இருக்கு. இது என்னோட அனுபவத்துல பார்த்த உண்மை'' என்ற அருண் நிறைவாக,
''அடுத்ததா, பாரம்பரிய ரகமான தூயமல்லி நெல்லை நடவு போட்டு, இதேமாதிரி விளைச்சல் எடுக்கணும்னு தயார் பண்ணிட்டு இருக்கேன். இந்த சந்தர்ப்பத்துல ரசாயன ஆதரவாளர்களுக்கு நான் விடுற ஒரே கோரிக்கை... 'நவீன ரக நெல்லைப் போல் பாரம்பரிய நெல் ரகங்கள் விளையாது'னு தயவு செஞ்சு பொய் பிரசாரத்தைப் பண்ணாதீங்க'’ என்று சொல்லி விடைகொடுத்தார்.
தொடர்புக்கு, 
அருண், செல்போன்: 98653-19772

எஸ். ராஜாசெல்லம்
படங்கள்: எம். தமிழ்ச்செல்வன்
Source:pasumaivikatan

No comments: