Wednesday

வேம்பு... தோப்பாக வளர்த்தால், தப்பாத வருமானம்!

வேம்பு... தோப்பாக வளர்த்தால், தப்பாத வருமானம்!


யோசனை
 பொதுவாக மரம் வளர்ப்புக்கு மாறும் விவசாயிகள்... மரவேலைப்பாடுகளுக்குப் பயன்படக்கூடிய தேக்கு, குமிழ், தோதகத்தி... என்றுதான் தேர்வு செய்வார்கள். ஆனால், நீண்டகாலத்துக்கு உறுதித் தன்மையுடன் திகழக்கூடிய நாட்டு வேப்ப மரத்தை பெரிதாக யாரும் கண்டு கொள்வதில்லை. ஆனால், மிக எளிதாக சாகுபடி செய்யக்கூடிய, எல்லா வகையான மண்ணிலும் சிறப்பாக விளையக்கூடிய மருத்துவ குணமுடைய வேம்புக்கும் நல்ல தேவை உள்ளது என்பதுதான் உண்மை!

இதுபற்றி சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார், மரம் வளர்ப்பில் ஆழ்ந்த அனுபவம்கொண்ட தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டை, வேளாண்மை ஆசிரியர், பாலசுப்ரமணியன். ''இது, வறட்சியைத் தாங்கி வளரும். இலை, காய், பட்டை எல்லாமே மருத்துவ குணம் உடையது. கால்நடைகளுக்குத் தீவனமா பயன்படும். பூச்சித்தாக்குதல்களைச் சமாளிக்க, வேப்பம் பிண்ணாக்கு, வேப்பெண்ணெய், வேப்பிலை அதிகளவுல பயன்படுது. இதையெல்லாம்விட இந்த மரத்துலயும் மர வேலைப்பாடுகள் செய்யலாம். கதவு, நிலை, ஜன்னல் செய்ய இந்த மரம் பயன்படுது.
வேப்ப மரத்தை தோப்பா வளர்த்தா, நிச்சய லாபம்தான். நடவுபோட்ட 6-ம் வருஷத்துல இருந்து வேப்பங்கொட்டைகள் கிடைக்கும். இதை சேகரிச்சு அரைச்சா எண்ணெயும், வேப்பம்பிண்ணாக்கும் கிடைக்கும். 15 வருஷம் வளர்ந்த மரங்களைத்தான் வேலைப்பாட்டுக்குப் பயன்படுத்துவாங்க. அந்தளவு வயசுள்ள மரங்கள் நல்ல விலைக்குப் போகும். குறைவான எண்ணிக்கையில மரங்களை வளர்க்கும்போது கவாத்து செய்ய மாட்டோம். அதனால, பழங்கள் அதிகமா கிடைக்கும். இந்த மரங்கள், வளைஞ்சு, நெளிஞ்சு இருக்கிறதால, குறைவான பகுதியைத்தான் வேலைப்பாடுகளுக்கு பயன்படுத்த முடியும். இதுவே தோப்பா வளர்க்கும்போது கவாத்து பண்றதால பழங்கள் அதிகளவுல கிடைக்காது. ஆனா, மரங்கள் நேரா வளர்றதால வேலைப்பாடுகளுக்குப் பயன்படும்'' என்று யோசனைகளைச் சொன்னார்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம் பக்குடி அருகே உள்ள சூரியவிடுதி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா, விவசாயிகளிடம் இருந்து மரங்களை வாங்கி... கட்டில், பீரோ, மேஜை, நாற்காலி, ஜன்னல் உள்ளிட்ட பொருட் களைத் தயார் செய்து விற்பனை செய்கிறார். இவரிடம் பேசியபோது, ''தரமா வளர்த்தா 6 வருஷத்துல 2 அடி சுற்றளவு 10 அடி உயரத்துக்கு மரம் வளர்ந்துடும். இந்த வயசு மரங்கள்ல ரேகை இருக்காது. அதனால, சின்னச்சின்ன சாமான் செய்யத்தான் உபயோகப்படும். இந்த வயசுல ஒரு மரத்தை 2 ஆயிரம் ரூபாய் வரை விலை வெச்சு வாங்குவோம். 10 வருஷத்துல, 15 அடி உயரம் வரை மரம் வளர்ந்துடும். சுற்றளவு 5 அடி வரைக்கும் இருக்கும். இந்த மரங்கள்ல ரேகை ஓட ஆரம்பிச்சிருக்கும். 15 வருஷத்துல 20 அடி உயரத்துக்கு வளர்ந்து 6 அடி வரை சுற்றளவு இருக்கும். ரேகை நல்லா ஓடியிருக்கும். இந்த மாதிரி மரங்களை கன அடி கணக்குல விலைக்கு வாங்குவோம். ஒரு கனஅடி 400 ரூபாய்ல இருந்து, 600 ரூபாய் வரை விலை கொடுப்போம். வெட்டுக்கூலி, போக்குவரத்துச் செலவையெல்லாம் நாங்களே ஏத்துக்குவோம்'' என்றார், கருப்பையா.
தஞ்சாவூர் வல்லம் பகுதியில் வேப்பம் பிண்ணாக்கு அரைப்பதற்கு என்றே, பிரத்யேக ஆலை நடத்தி வரும் கோவிந்தராஜன், ''நாங்களே 10 வேப்பமரம் வெச்சிருக்கோம். பழங்களைக் காய வெச்சி, அரைச்சி எண்ணெய் எடுக்காத பிண்ணாக்கா கிலோ 18 ரூபாய்னு விற்பனை செய்றோம். மத்தவங்க கொடுக்குற கொட்டைகளையும் கூலிக்கு அரைச்சுக் கொடுக்குறோம். ஆறு வயசு மரத்துல ஒரு வருஷத்துக்கு 100 கிலோவுல இருந்து 150 கிலோ வரை பழங்கள் கிடைக்கும். தொடர்ந்து மகசூல் அதிகரிச்சு, 10 வருஷத்துக்குப் பிறகு, 300 கிலோ பழங்கள் கிடைக்கும். 100 கிலோ வேப்பம்பழத்தை மூணு நாள் வெயில்ல காய வெச்சா... 90 கிலோ காய்ஞ்ச பழம் கிடைக்கும். இதை அரைச்சா... 86 கிலோ எண்ணெய் எடுக்காத வேப்பம்பிண்ணாக்கு கிடைக்கும்'' என்று சொன்னார்.
நிலத்தடி நீரைச் சுத்திகரிக்கும் வேம்பு!
திருச்சி-நாமக்கல் சாலையில் உள்ள மேற்கு நாயக்கன்பட்டி கிராமத்தில் 40 ஏக்கரில் வேப்ப மரங்களை வளர்த்து வரும் சத்திய மூர்த்தி, ''இங்க 3 ஆயிரத்து 500 மரங்கள் வளர்க்கிறோம். ஆசிட் தொழிற்சாலை கழிவால நிலத்தடி நீர் ரொம்ப பாதிச்சிருந்துச்சு. வேப்பந்தோப்பு உருவான பிறகு, நிலத்தடி நீர்ல கலந்திருந்த ரசாயனத் தன்மை கொஞ்சம் கொஞ்சமா குறையுது. ஏராளமான பறவைகள் வந்து போகுது. சுண்ணாம்புத் தன்மை அதிகமா இருக்குற இந்த மண்லகூட
7 வருஷத்துல 20 அடி உயரம் வரை மரங்கள் வளர்ந்துருக்கு. மூணு வருஷமா கடுமையான வறட்சியால மரங்களுக்கு கொஞ்சம் கூட தண்ணீர் கொடுக்க முடியாமப் போயிடுச்சு. ஆனாலும்கூட, மரங்கள் பட்டுப் போகாம, உயிர் புடிச்சி நின்னுட்டு இருக்குது'' என்றார் குஷியுடன்!
இப்படித்தான் சாகுபடி செய்யணும்..!
வேப்ப மரங்களை தோப்பாக சாகுபடி செய்யும்விதம் பற்றி பாலசுப்ரமணியம் விவரித்த விஷயங்கள்...
'வேப்ப மரங்களுக்கு தண்ணீர் தேங்காத நிலமாக இருப்பது நல்லது. வரிசைக்கு வரிசை 10 அடி, செடிக்குச் செடி 10 அடி இருக்குமாறு 2 அடி அகலம், 2 அடி ஆழம் இருக்குமாறு, சதுர வடிவில் குழிகள் எடுக்க வேண்டும். ஒரு ஏக்கரில், சுமார் 440 குழிகள் வரை எடுக்கலாம். அதிக இடைவெளி விடும்போது மரம் நேராக வளராது. பக்கக் கிளைகளும் அதிக அளவில் உருவாகி, மரத்தின் தரம் குறைந்துவிடும். ஒவ்வொரு குழியிலும் 20 கிலோ சாணம், 100 கிராம் வேப்பம்பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து நிரப்பி, கன்றுகளை நடவு செய்ய வேண்டும். மாதத்துக்கு இரண்டு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மழைக்காலங்களில் தண்ணீர் பாய்ச்ச வேண்டியதில்லை.
நடவு செய்த முதல் 3 ஆண்டுகளுக்கு ஊடுபயிர்கள் சாகுபடி செய்யலாம். முதல் ஆண்டு... உளுந்து, தட்டைப்பயறு, பச்சைப்பயறு, கொள்ளு உள்ளிட்ட பயறு வகைகளையும், 2, 3-ம் ஆண்டுகளில் சிறுதானியங்களையும் சாகுபடி செய்யலாம். ஊடுபயிர் சாகுபடி செய்யும் சமயத்தில் வேப்பங்கன்றுகளுக்குத் தனியாக இடுபொருள் கொடுக்கத் தேவையில்லை. ஊடுபயிர் சாகுபடி செய்யவில்லையென்றால், ஆண்டுக்கு ஒரு முறை ஒவ்வொரு மரத்தைச் சுற்றிலும் 10 கிலோ சாணம் இடவேண்டும்.
மரங்கள் ஓரளவுக்கு வளர்ந்ததும், மரத்தின் மொத்த உயரத்தில், மூன்றில் ஒரு பங்கு உயரம் வரை உள்ள கீழ்ப்பகுதி கிளைகளை மட்டும் மரத்திலோ, தண்டுப்பகுதியிலோ காயம் ஏற்படாடதவாறு கவாத்து செய்ய வேண்டும். கவாத்து செய்த பகுதிகளில், நாட்டுப் பசுவின் சாணத்தைப் பூசி வைத்தால் கிருமிகள் தொற்றாது. ஒட்டுண்ணிகள் ஏதேனும் கிளைகளில் படர்ந்தால், கிளையோடு வெட்டி, அப்புறப்படுத்த வேண்டும். மரங்கள் ஓரளவுக்கு வளர்ந்த பிறகு, குறுக்கு நெடுக்குமாக செல்லக்கூடிய கிளைகளை வெட்டிவிட வேண்டும். நேராக செல்லக்கூடிய கிளைகள் மட்டுமே, மரத்தில் இருக்க வேண்டும்.
6-ம் ஆண்டில் ஒன்றுவிட்டு ஒன்று என 220 மரங்களை மட்டும் வெட்டி, விற்பனை செய்ய வேண்டும். 10-ம் ஆண்டில் ஒன்றுவிட்டு ஒன்று என 110-ம் மரங்களை வெட்டி, விற்பனை செய்யவேண்டும். 15-ம் ஆண்டு, மீதியுள்ள 110 மரங்களை விற்பனை செய்யலாம்.
-கு. ராமகிருஷ்ணன் படங்கள்: கே. குணசீலன்
Source: Pasumaivikatan

No comments: