Wednesday

பசுமைக் குடில் + இயற்கை இடுபொருள்...

பசுமைக் குடில் + இயற்கை இடுபொருள்...
மல்லிகை சாகுபடிக்கு கை கொடுக்கும் 'ஃபாகர்’...
பனிக்காலத்திலும் பணம் பார்க்கலாம்...

'ஊரெல்லாம் செய்ற மாதிரிதான் நானும் விவசாயம் செய்றேன். ஆனா, வருமானம் மட்டும் வர மாட்டேங்குதே’ என்று சொல்லிக்கொண்டிருக்காமல்... 'இருப்பதை வைத்து வருமானம் பார்க்கும் வழி என்ன?’ என யோசித்து, புதுமைகளைப் புகுத்தி சாதனை படைக்கும் விவசாயிகளும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள்.
அந்தவகையில், வழக்கமான விவசாய முறையிலிருந்து கொஞ்சம் மாற்றி சிந்தித்ததால்... மணமான வருமானம் பார்த்து வருகிறார், திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள சிறுநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சுரேஷ்.
நிலக்கோட்டையில் இருந்து அணைப்பட்டி செல்லும் சாலையில் பதினோராவது கிலோ மீட்டரில் இருக்கிறது, சிறுநாயக்கன்பட்டி.
இந்தப்பகுதி முழுக்க, பூ சாகுபடிதான் பிரதானம். மல்லிகை, செண்டு மல்லி, அரளி, சம்பங்கி, கனகாம்பரம்... எனப் பலவிதமான பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. மலர்களின் மணத்தில் காற்றே கிரங்கிப்போய்தான் வீசுகிறது இப்பகுதிகளில். காற்றில் பயணித்து வந்த வாசத்தை ரசித்தபடியே, சுரேஷின் மல்லிகைத் தோட்டத்தை அடைந்தோம். பரந்தவெளி எங்கும் பசுமையாக மல்லிகைச் செடிகள் விரவிக் கிடக்க... அதற்கு நடுவே, சுரேஷின் தோட்டத்தில் பசுமைக் குடிலுக்குள் குலுங்கிக் கொண்டிருக்கின்றன மல்லிகை மொட்டுகள்! அவற்றைப் பறிக்கும் பணியிலிருந்த சுரேஷ், உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார்.
எங்களுக்கான ஏ.டி.எம்... மல்லிகைதான்!
''இங்க மல்லிகைப் பூவைத்தான் அதிகமா சாகுபடி செய்வோம். இதை ஒரு தடவை நட்டு வெச்சா போதும்... 15 வருஷத்துக்குக் குறையாம வருமானம் கொடுத்துகிட்டு இருக்கும். அரை ஏக்கர் நிலம் இருக்குறவங்ககூட மல்லியை நட்டுவெச்சுட்டு, ஈஸியா பொழப்ப ஓட்டிடுவாங்க.
மல்லிகைச் செடியை பொறுத்தவரைக்கும் எவ்வளவு பண்டுதம் பாக்குறமோ அந்தளவுக்கு வருமானம் கிடைக்கும். எதுவும் பண்ணாம விட்டாலும், குறைஞ்ச வருமானம் கியாரண்டி. சுருக்கமா சொல்லணும்னா எங்க பகுதி மக்களோட ஏ.டி.எம் இந்த மல்லிகைதான். தினமும் 4 கிலோ பூ வந்தாலும், 200 ரூபாய் கிடைச்சுடும். சீசன் நேரத்துல தினமும் ஆயிரக்கணக்குல கையில புரளும்.
50 ரூபாய்க்குக் குறையாது!
'ரூபினா ஜெயந்தி விக்டர்’ங்கிறவங்கதான் இந்தத் தோட்டத்தோட சொந்தக்காரங்க. அவங்களோட கணவர் விக்டர் சார்லஸ், ஃபிரான்ஸ்ல இருக்காரு. அங்க பெரிய அளவுல பூ வியாபாரம் செய்றாரு. இந்தத் தோட்டத்தை அவங்க சார்பா நான்தான் பராமரிச்சுட்டு இருக்கேன். விவசாயத்தோட சேர்த்து, நிலக்கோட்டையில பூக்கடையும் வெச்சிருக்கோம். அதை ஸ்ரீதர், நாகேந்திரனு ரெண்டு பேர் பாத்துக்கிறாங்க. விவசாயிங்ககிட்ட பூக்களை வாங்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்றோம். மல்லிக்கு எப்பவும் கிராக்கி இருக்கறதால, எங்களுக்கு ஏற்றுமதி ஆர்டரும் இருந்துக்கிட்டே இருக்கும். எப்பவும் ஒரு கிலோ பூவோட விலை 50 ரூபாய்க்குக் கீழ குறையாது. சீசன் நேரமா இருந்தா, ஒரு கிலோ... ஆயிரம் ரூபாயைத் தாண்டிடும்.
சீசன் இல்லாத நவம்பர், டிசம்பர் மாசங்கள்ல பூ வரத்து இருக்காது. அந்த நேரத்துல என்ன விலை கொடுத்தும் வாங்க வாடிக்கையாளர்கள் தயாரா இருப்பாங்க. ஆனா, பூ இருக்காது. இது எங்களை யோசிக்க வெச்சது.
'விலை கிடைக்கும்போது விளைஞ்சாத்தானே நாலு காசு பாக்க முடியும். அப்ப விளையாம விலையில்லாதப்ப விளைஞ்சு என்ன புண்ணியம்..?’னு யோசிச்சப்பதான் பசுமைக் குடில் தொழில்நுட்பம் (பாலி ஹவுஸ்) பற்றி கேள்விப்பட்டோம். உடனே, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், கம்பெனிக்காரங்ககிட்ட ஆலோசனை செஞ்சோம். அவங்கதான், 'பசுமைக் குடில் அமைச்சா... பனிக் காலத்துலயும் பூ எடுக்கலாம்’னு தைரியம் சொன்னாங்க. அதனால ஆயிரம் சதுர மீட்டர்ல மட்டும் ஒரு பசுமைக் குடிலை அமைச்சோம்.
50% மானியம்! உடனடி வருமானம்!
பொதுவா, பசுமைக் குடில் அமைக்கறவங்க, குடிலை அமைச்ச பிறகுதான் நடவுல இருந்து விவசாயத்தை ஆரம்பிப்பாங்க. அப்படி செஞ்சா மல்லிகை மகசூலுக்கு வர 6 மாசம் ஆகும். ஆனா, அதுவரைக்கும் மகசூலை இழக்க எங்களுக்கு மனசு இல்ல. அதனால ஏற்கெனவே மகசூல்ல இருந்த மல்லிகை செடிக மேலயே பசுமைக் குடிலை அமைச்சோம்'' என ஆச்சர்யப்படுத்தியவர், தொடர்ந்தார்.
''40 சென்ட் நிலத்துல எட்டு வயசான மல்லிகைச் செடிக மேலதான் இந்த பசுமைக் குடில் நிக்குது. ஆயிரம் சதுர மீட்டர் தவிர மத்த செடிக வெட்ட வெளியில நிக்குது. பசுமைக் குடிலுக்குள்ள விவசாயம் செய்ற முடிவுக்கு வந்தவுடனே, இயற்கை முறை விவசாயத்துலதான் மல்லிகையை உற்பத்தி செய்யணும்ங்கிற முடிவு பண்ணிட்டோம். இந்தக் குடிலை அமைக்க ஏழரை லட்ச ரூபா செலவாச்சு. தோட்டக்கலைத்துறையில இருந்து 50% மானியம் கொடுத்தாங்க.
செடிகளைச் செழிக்க வைக்கும் நுண்ணீர்ப் பாசனம் !
இந்தக் குடிலுக்குள்ள சொட்டுநீர்ப் பாசனம், ஃபாகர் (நுண்ணீர்ப் பாசனம்) ரெண்டும் இருக்கு. அதேநேரத்துல வாய்க்கால் வழியாகவும் பாசனம் செய்ற வசதி இருக்கு. பெரும்பாலும், தண்ணி இருக்கும்போது வாய்க்கால் பாசனம்தான் செய்றோம். மழைக்காலத்துல சொட்டுநீரும், வெயில் காலத்துல ஃபாகரும் போட்டுக்குவோம்.
இந்த ஃபாகர் போடுறதால செடிகள் மேல தூறல் மாதிரி தண்ணி விழுறதால செடிகள் செழும்பா இருக்கு. வெளிய என்ன மழை, வெயில், பனி அடிச்சாலும், பத்து நிமிஷம் ஃபாகர் போட்டா போதும், குடிலுக்குள்ள மல்லிகைக்குத் தேவையான குறிப்பிட்ட அளவு தட்பவெப்பநிலை வந்துடும். அதனால, செடிகள் கொள்ளாத அளவுக்கு மொட்டுகள் வெடிக்குது.
குடிலுக்கு வெளியில நிக்குற செடிக்கும் இந்தச் செடிக்கும் ஒரே வயசுதான். ரெண்டுக்கும் ஒரே பராமரிப்புதான் செய்றோம். ஆனா, அந்தச் செடிக்கும் குடிலுக்குள்ள இருக்க செடிக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்களே பாருங்க'' என்ற சுரேஷ், குடிலுக்குள் தளதளவெனவும், வெளியில் சுணங்கியும் இருந்த செடிகளை நம்மிடம் காட்டினார்.
தொழில்நுட்பத்தின் பலன் கண்கூடாகத் தெரிந்தது. நமது வியப்பைப் பெருமையுடன் ரசித்த சுரேஷ், பசுமைக் குடிலுக்குள் இயற்கை முறையில் மல்லிகையை சாகுபடி செய்யும் முறைகளைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார். அதை அப்படியே பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.
நாற்று நடவுதான் சிறந்தது!
'பொதுவாக மல்லிகை அனைத்து மண்ணிலும் வளரும். என்றாலும், செம்மண் நிலங்களில் சிறப்பான மகசூலைக் கொடுக்கும். மல்லிகையை நாற்றுகளாகத்தான் நடவேண்டும். இந்த நாற்றுகள் ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சி மடம் பகுதியில் கிடைக்கின்றன (ஒரு நாற்று இரண்டு ரூபாய்). புதிதாக நடவு செய்பவர்கள், நிலத்தை நன்றாக உழவு செய்து புழுதியாக்கிக் கொள்ள வேண்டும். பிறகு, 5 அடிக்கு 5 அடி சதுரப்பாத்தி எடுத்து, தண்ணீர் பாய்ச்சி... பாத்தி ஈரமானதும் நான்கு மூலையிலும் கையால் சின்னக் குழி எடுத்து, மல்லிகை நாற்றை நடவு செய்ய வேண்டும்.
இப்படி நடவு செய்தால் ஒரு ஏக்கர் நிலத்தில் 1,750 நாற்றுகள் முதல் 2 ஆயிரம் நாற்றுகள் வரை நடலாம். சொட்டுநீர்ப் பாசனம் செய்பவர்கள், ஒவ்வொரு வரிசையிலும் இரண்டு பக்கமும் முக்கால் அடி தூரம் உள்ள மண்ணை அள்ளி, கரை போல அமைத்துக் கொண்டு, அதில் சொட்டுநீர்க் குழாய்களை அமைத்துக் கொள்ளலாம்.
ஊட்டம் கொடுக்கும் ஜீவாமிர்தம்!
பசுமைக் குடிலுக்குள் மல்லிகை சாகுபடி செய்ய நினைப்பவர்கள், தேவையான அளவில் பசுமைக் குடிலை அமைத்துக் கொண்டு, அதனுள் ஐந்தடி இடைவெளியில் மேற்சொன்னபடி செடிகளை நட்டு... சொட்டுநீர், நுண்ணீர்ப் பாசன வசதிகளை அமைத்துக் கொள்ள வேண்டும். ஏற்கெனவே மல்லிகை சாகுபடி செய்பவர்கள், செடிகளுக்கு மேலேயே பசுமைக் குடிலை அமைத்துக் கொள்ளலாம்.
மல்லிகையை நடவு செய்த பிறகு 15 நாட்களுக்கு ஒரு முறை பாசன நீருடன் தேவைக்கேற்ப ஜீவாமிர்தத்தை கலந்துவிட வேண்டும். 3-ம் மாதம் செடிக்கு 100 கிராம் ஆர்கானிக் உரத்தையும், 250 கிராம் மண்புழு உரத்தையும் வைக்க வேண்டும். வாய்க்கால் பாசனம் செய்பவர்கள், 6 மாதம் வரை காய்கறிப் பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். 6-ம் மாதத்தில் அரும்புவிடத் தொடங்கி, அடுத்த 20-25 நாட்களில் பூ வரும்.
அரும்பு கட்டத் தொடங்கும் போது செடிகள் நன்றாக நனையும் வகையில் ஜீவாமிர்தத்தைத் தெளிக்க வேண்டும்.
வருமுன் காப்பது சிறந்தது!
ஒரு முறை அரும்பு எடுக்கத் தொடங்கிய பிறகு, தினமும் புதுப்புது மொட்டுகள் தோன்றிக் கொண்டே இருக்கும். செடியின் அனைத்துப் பகுதிகளிலும் மொட்டுகள் தோன்றியதும் மகசூல் ஒய்ந்துவிடும். இப்படி ஒரு சுற்று மொட்டுகள் தோன்றி ஓய்வதை ஒரு 'கன்னி’ என்பார்கள். ஒரு கன்னி முடிந்தவுடன் செடிகளை, கவாத்து செய்து, ஒவ்வொரு செடிக்கும் 100 கிராம் ஆர்கானிக் உரத்தையும், 250 கிராம் மண்புழு உரத்தையும் வைக்க வேண்டும். அப்போதுதான் புதுப்புதுக் கிளைகள் தோன்றி, அதிக மொட்டுகள் தோன்றும். கவாத்து செய்த 25-ம் நாள் அரும்பு வெளியே வரும். அடுத்த 20 நாட்களில் பூ எடுக்கலாம் (திறந்தவெளி சாகுபடியில் கவாத்துக்குப் பிறகு, பூ எடுக்க 3 மாதங்கள் ஆகும்).
இப்படி ஒவ்வொரு கன்னி முடிந்தவுடனும் கவாத்து, உரம் என தொடர்ந்து பராமரித்து வர வேண்டும். பசுமைக் குடிலுக்குள் சாகுபடி செய்யும் போது, பூச்சிகள் அதிகம் தாக்குவதில்லை. ஒரே தட்பவெப்பநிலை பராமரிக்கப்படுவதால் நோய்களும் தாக்குவதில்லை. இருந்தாலும், ஒவ்வொரு முறை கவாத்து செய்த பிறகும் மூலிகைப் பூச்சிவிரட்டியைத் தெளித்து வந்தால், வருமுன் காத்துக்கொள்ளலாம்''
பனிக் காலத்திலும் பூ!
சாகுபடிப் பாடம் முடித்த சுரேஷ், ''திறந்தவெளியவிட, குடிலுக்குள்ள பராமரிப்புச் செலவு ரொம்ப குறைவு. ஒவ்வொரு கன்னி முடிஞ்ச பிறகும், பசுமைக் குடிலுக்குள்ள திறந்தவெளியில் வர்றதைவிட சீக்கிரமாவே அடுத்த அரும்பு வர ஆரம்பிச்சுடும். காம்பு நல்ல அடர் பச்சை நிறத்துல திடமா இருக்கும். மொட்டும் நல்ல சைஸ்ல இருக்கும். வெளியே பறிக்குற மொட்டுகள் சீக்கிரம் மலந்துடும். ஆனா, குடில்ல பறிக்குற மொட்டுகள், 4 மணி நேரம் கழிச்சுதான் மலரும். இதுல முக்கியமான விஷயம்... திறந்தவெளியில சாகுபடி செய்யுறப்ப, பனிக் காலத்துல (நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்கள்) செடிகள்ல பூ இருக்காது. அந்த மூணு மாசமும் செடிக சும்மாதான் நிக்கும். ஆனா, பசுமைக் குடிலுக்குள்ள அந்த மூணு மாசமும் பூ எடுக்கலாம். இந்த முறை பனிக் காலத்துல ஊர்ல எங்கயும் பூ கிடைக்கல. இதே 40 சென்ட்ல திறந்தவெளியில இருக்க செடிகள்லயும் பூ இல்ல. ஆனா, பசுமைக் குடிலுக்குள்ள எனக்கு பூ கிடைச்சது.
ஆண்டுக்கு 5 லட்சம்!
இந்த ஆயிரம் சதுர மீட்டர் இடத்துல இருக்கற 200 செடிகள்ல இருந்து தினமும் 10-20 கிலோ வரைக்கும் பூ கிடைக்குது. பனிக் காலத்துல தினமும் 8-10 கிலோ பூ கிடைச்சது. அந்த சமயத்துல ஒரு கிலோ பூ, ஆயிரத்து 700 ரூபாய்க்கு வித்துச்சு. சராசரியா மாசம் 200 கிலோ, ஒரு கிலோ ஆயிரம் ரூபாய்னு வெச்சுகிட்டாலும், 2 லட்ச ரூபாய் வருமானம். அந்த மூணு மாசத்துலயே 5 லட்ச ரூபாய் அளவுக்கு வருமானம் பாத்திடலாம்.
மத்த நேரங்கள்ல மாசத்துக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். ஆக மொத்தம் ஆயிரம் சதுர மீட்டர் பசுமைக் குடிலுக்குள்ள மல்லிகை சாகுபடி செய்யும்போது வருஷத்துக்கு 7 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் வருமானமா கிடைக்கும். இதுல, செலவு
2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்னு வெச்சுக்கிட்டாலும், 5 லட்ச ரூபாய் நிச்சய லாபமா கிடைக்கும். வழக்கமா ஒரு ஏக்கர் நிலத்துல மல்லிகை சாகுபடி செஞ்சா... செலவு போக மாசம் 10 ஆயிரத்துல இருந்து 20 ஆயிரம் வரைக்கும் லாபமா கிடைக்கும். இதுவே ஆயிரம் சதுரமீட்டர்ல பசுமைக் குடிலை அமைச்சா, மாசம் 40 ஆயிரத்துக்கு குறையாம லாபம் எடுத்துடலாம்.
எங்க பூ, இயற்கை முறையில விளையிறதால சந்தையில எப்பவும் கிராக்கி இருந்துகிட்டே இருக்கு'' என்று சந்தோஷம் பொங்கச் சொன்னார்.
தொடர்புக்கு, சுரேஷ்,  செல்போன்: 95851-47936



நிலக்கோட்டை மலர்சந்தை!
நிலக்கோட்டை வட்டாரத்தின் வாழ்வாதாரமாக இருப்பது இங்குள்ள மலர் சந்தைதான். இங்கிருந்துதான் சென்னை கோயம்பேடு மலர் சந்தைக்கு அதிகளவு பூக்கள் அனுப்பப்படுகின்றன. தமிழகம் மட்டுமல்லாமல் வடமாநிலங்கள், வெளிநாடுகள் என அனைத்துப் பகுதிகளுக்கும் பூக்கள் அனுப்பப்படுகின்றன. நிலக்கோட்டை பகுதியில் இருந்து, தினமும் 20 டன் அளவுக்கும் மேல் பூக்கள் அனுப்பப்படுகின்றன. சீசன் இல்லாத நேரங்களில் கூட தினமும் ஒரு டன் பூ அனுப்பப்படுகிறது.
வெளிநாட்டு ஆர்டருக்கு ஏற்ற வகையில் மாலையாகக் கட்டியும் வெளிநாடுகளுக்கு அனுப்புகிறார்கள். பசுமைக்குடிலில் பூக்கும் இயற்கை மல்லிகை, பெரும்பாலும் சரமாகத் தொடுத்துதான் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறதாம்.



கவாத்திலும் காசு பார்க்கலாம்!
''மல்லிகைச் செடிகளை கவாத்து செய்ய பல விவசாயிகள், ஆட்களுக்குக் கூலி கொடுத்து செலவு செய்கிறார்கள். ஆனால், அது தேவையில்லை. செலவில்லாமல், அதேநேரத்தில் வருமானத்துடன் கவாத்து செய்ய முடியும்'' என்று சொல்லும் சுரேஷ்,
''ராமநாதபுரம், தங்கச்சி மடத்தில் இருக்கும் மல்லிகை நாத்து வியாபாரிங்களுக்கு பதியன் போடுறதுக்காக குச்சிகள் தேவைப்படும். மூணு, நாலு வருஷமான செடிக நம்மகிட்ட இருந்தா... அவங்களுக்கு தகவல் சொல்லி விட்டா போதும். தேடி வந்து செடிகளைப் பாத்துட்டு, குத்து மதிப்பா ஒரு தொகையைக் கொடுத்துட்டு முறையா கவாத்து பண்ணி குச்சிகளை எடுத்திட்டுப் போயிடுவாங்க.
இதனால் வருஷத்துக்கு ஒரு ஏக்கர்ல இருந்து 15 ஆயிரம் ரூபாயில இருந்து 40 ஆயிரம் ரூபாய் வரைக்கும் வருமானம் கிடைக்கும். செடிகளும் செலவில்லாமலே கவாத்து ஆயிடும்'' என்றார்.
ஆர். குமரேசன் படங்கள்: வீ. சிவக்குமார்
Source:pasumaivikatan

1 comment:

இராவணன் said...

Please give mr.suresh phone number and address. That may help me more.

My name is Rahman Mohideen
From Tirunelveli district.
9715295119