Thursday

புத்தர் சாப்பிட்ட ‘காலா நமக்’ பாரம்பரிய அரிசி: ராமநாதபுரத்தில் சாகுபடி செய்யும் விவசாயி

‘காலா நமக்’ நெல் வயலில் விவசாயி தரணி முருகேசன். புத்தர் சாப்பிட்ட காலா நமக்பாரம்பரிய நெல்லை ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் சாகுபடி செய்து வருகிறார்.


பாரம்பரிய நெல் விதைகள் என்பது பழமையான நெல் விதை ரகங்களைக் குறிக்கும். அன்னமழகி, அறுபதாங்குறுவை, பூங்கார், குழியடிச்சான், குள்ளங்கார், குடவாழை, காட்டுயானம், காட்டுப்பொன்னி, வெள்ளைக்கார், கருப்பு சீரகச்சம்பா, கட்டிச்சம்பா, குருவிக்கார், கம்பஞ்சம்பா, காட்டுச்சம்பா, கருங்குறுவை, சீரகச்சம்பா, கருத்தக்கார், காலா நமக் என இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான பாரம்பரிய நெல் வகைகள்
இருந்துள்ளன. ஆனால், பசுமைப்புரட்சியின் விளைவாக பெரும்பாலான பாரம்பரிய நெல் ரகங்கள் அழிந்துவிட்டன.

கர்ப்பிணிகளுக்கு ஏற்ற ரகம், தாய்மார்களுக்கு ஏற்ற ரகம், சாதத்துக்கு ஏற்ற ரகம், பழைய சாதத்துக்கு ஏற்ற ரகம் என பாரம்பரிய நெல் ரகம் ஒவ்வொன்றுக்கும் தனித்தன்மை வாய்ந்த குணம் உண்டு. தற்போது இயற்கை வழிமுறையில் வேளாண் செய்யும் விவசாயிகள், இப்படிப்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை தேடிப்பிடித்து பயிர் செய்வதில் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

அந்த வகையில் சிறுநீரகப் பிரச்சினை, புற்றுநோய், தோல் சம்பந்தமான நோய்கள் எதிர்ப்புத் தன்மைகொண்ட காலா நமக்எனப்படும் பாரம்பரிய நெல் ரகத்தை சாகுபடி செய்து வருகிறார் ராமநாதபுரம் மாவட்டம், எட்டிவயல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தரணி முருகேசன்.

ஒருங்கிணைந்த பண்ணையம்

ராமநாதபுரத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது எட்டிவயல் கிராமம். கிராமத்தைச் சுற்றி கருவேல மரங்கள் சூழ்ந்திருக்க, அதன் நடுவே 54 ஏக்கர் பரப்பளவில், பசுமைத் தீவுபோல காட்சி தருகிறது தரணி முருகேசனின் இயற்கை விவசாயப் பண்ணை. இங்கு விவசாயத்துடன், கறவை மாடு, கோழி, மீன் வளர்ப்பு, முயல் வளர்ப்பு என உபதொழில்களையும் இணைத்து ஒருங்கிணைந்த பண்ணையம் செய்து முன்மாதிரி விவசாயியாகத் திகழ்ந்து வருகிறார்.

விவசாயி தரணி முருகேசன் தான் பயிரிடும் காலா நமக்பற்றி `தி இந்துசெய்தியாளரிடம் கூறியது: காலா என்றல் கருப்புஎன்றும், ‘நமக்என்றால் உப்புஎன்றும் சமஸ்கிருத மொழியில் அர்த்தம். புத்தர் இந்த நெல் அரிசியில் செய்த உணவைச் சாப்பிட்டதாக வரலாறு கூறுகிறது.

புத்த பிட்சுகளின் உணவு

பொதுவாக, இயற்கை உணவுகளை 3 வகையாகப் பிரிக்கலாம். அவை 1. சாத்வீகம், 2. சக்தி விரய உணவுகள், 3. சக்தி விரயம் ஆகாத உணவுகள்.

காலா நமக்அரிசி சாத்வீக குணத்தை ஏற்படுத்தக் கூடியது. எனவே, உலகெங்கும் உள்ள புத்தபிட்சுகள் காலா நமக்நெல்லில் சமைத்த உணவுகளைத்தான் சாப்பிடுகின்றனர். மேலும் சிறுநீரகப் பிரச்சினை, மூளை நரம்பு இயங்காமை, புற்றுநோய், தோல் சம்பந்தமான நோய்கள், ரத்த சம்பந்தமான நோய்கள் என பல வியாதிகள் இந்த ரக அரிசியை தொடர்ந்து சாப்பிட்டால் கட்டுப்படும்.

ரூ. 40 ஆயிரம் லாபம்


ராமநாதபுரம் மாவட்டம் போன்ற வறட்சி பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் வறட்சியை தாங்கி காலா நமக்நன்கு வளரக்கூடியது. காலா நமக் நெல்லை 120 நாட்களில் அறுவடை செய்யலாம். 90-ம் நாளில் கதிர் பிடிக்கத் தொடங்கும். 105-ம் நாளுக்கு மேல் கதிர் முற்றத் தொடங்கும். 110-ம் நாள் தண்ணீர் கட்டுவதை நிறுத்தி, 120-ம் நாளில் அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கருக்கு 20 மூட்டை வரையில் நெல்லும், ஏக்கருக்கு ரூ. 40,000 ஆயிரம் வரையிலும் லாபமும் கிடைக்கும் என்றார்.

2 comments:

The Way To Truth said...

where is kalanamak seed available?
S.A. Mohamed.9597281341

மணவை ஜெயராம் இயற்கை ஆர்வலர் said...

Pl.post Tharani Murugesan cell no for Kala Nanak paddy seed