Monday

18 மாதம்... ரூ. 3,60,000 ரூபாய்... ''இனிப்பான வருமானம் தரும் இயற்கை இலைவாழை’!

18 மாதம்... ரூ. 3,60,000 ரூபாய்...
''இனிப்பான வருமானம் தரும் இயற்கை இலைவாழை’!
அன்றாடம் தேவைப்படும் தக்காளி, வெங்காயம் போன்ற அத்தியாவசிய விளைபொருட்களில் வாழை இலையும் ஒன்று. கோயில் விழாக்கள், குடும்ப விழாக்கள்... என எந்த விசேஷமாக இருந்தாலும் சரி, கண்டிப்பாக அங்கே வாழை இலைக்கு முக்கிய இடமுண்டு. இத்தகைய சந்தை வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு இலைக்காகவே வாழை சாகுபடி செய்பவர்கள் பலர் உண்டு. அவர்களில் ஒருவராகத் தொடர்ந்து இயற்கை முறையில் இலை வாழை சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார், ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் அடுத்துள்ள பெரியவீரச்சங்கிலி கிராமத்தைச் சேர்ந்த நல்லசிவம்.
பயிற்சிக்குப் பின் இயற்கை!
அறுவடை செய்யப்பட்ட வாழை இலைகளை மனைவி சொர்ணாவுடன் இணைந்து கட்டுக் கட்டிக் கொண்டிருந்த நல்லசிவம், அப்படியே நம்மிடமும் பேச ஆரம்பித்தார்.
''எனக்கு ரெண்டு ஏக்கர் நிலம் இருக்கு. எங்க பகுதி கடுமையான வறட்சிப் பகுதி. கிணத்துத் தண்ணியை வெச்சுதான் வெள்ளாமை. அந்தத் தண்ணியும் ஒரு ஏக்கருக்குதான் பாயும். அதனால இறவையில மஞ்சள், மரவள்ளி, வாழைனு மாத்தி மாத்தி சாகுபடி பண்ணிக்குவோம். மீதி நிலத்துல மானாவாரியா கடலை, எள், ஆமணக்குனு வெள்ளாமை வெப்போம்.
ஆரம்பத்துல நானும் ரசாயன விவசாயம்தான். 'பசுமை விகடன்' படிக்க ஆரம்பிச்சப்பறம்தான் இயற்கை விவசாயத்து மேல ஆர்வம் வந்தது. ஈரோடுல நடந்த 'ஜீரோ பட்ஜெட்’ பயிற்சி வகுப்பு, 'இனியெல்லாம் இயற்கையே’ களப்பயிற்சி ரெண்டுலயுமே கலந்துக்கிட்டு பயிற்சி எடுத்துருக்கேன். இப்போ மூணு வருஷமா முழு இயற்கை விவசாயம்தான் செஞ்சுக்கிட்டு இருக்கோம்'' என்று மகிழ்ச்சி பொங்க முன்னுரை கொடுத்தவர்,
''போன போகத்துல தக்காளி போட்டிருந்தோம். 30 டன் மகசூல் கிடைச்சுது. அதை அழிச்சிட்டு புரட்டாசிப் பட்டத்துல இலைவாழை நடவு செஞ்சோம். தை மாசத்துல இருந்து அறுவடை பண்ணிக்கிட்டுஇருக்கோம்.
நாமே வேலை செய்தால்... கூடுதல் லாபம்!
இயற்கை முறையில் சாகுபடி செய்யுறதால தளதளனு நல்லாவே வளர்ந்திருக்கு வாழை. ஒரு ஏக்கர்ல மட்டுமே வெள்ளாமை பண்றோம். மருந்தடிக்க, உரம் வெக்கனு இந்த வேலைகளுக்கெல்லாம் ஆளுங்கள வெக்கிறதில்ல... நாங்களேதான் பாத்துக்குறோம். வாழையைப் பொறுத்தவரைக்கும் உழவுக்கு, நடவுக்கு, களை எடுக்குறதுக்கு மட்டும்தான் வெளியாட்கள். அறுவடையெல்லாம் நாங்க ரெண்டு பேரே பாத்துக்குவோம். இதனால எங்களுக்குக் கூடுதல் லாபம்தான்'' என்ற நல்லசிவம், ஒரு ஏக்கருக்கான இலை வாழை சாகுபடிப் பாடத்தை ஆரம்பித்தார்.
ஆடியில் சணப்பு... புரட்டாசியில் வாழை!
''புரட்டாசி மாதத்தில் வாழை நடவு செய்ய வேண்டும் என்பதால், ஆடி மாதத்திலேயே நிலத்தை நன்கு உழுது, 35 கிலோ சணப்பு  விதைகளை ஏகத்துக்கும் விதைத்து, வாரம் ஒரு தண்ணீர் விட்டுவர வேண்டும். 40 நாட்கள் கழித்து அதை மடக்கி உழவு செய்ய வேண்டும். பிறகு, 10 டன் தொழுவுரத்தைக் கொட்டி இறைத்து ஓர் உழவு செய்ய வேண்டும்.
ஐந்தடி இடைவெளி!
பிறகு... வரிசைக்கு வரிசை, பக்கத்துக்குப் பக்கம் ஐந்தடி இடைவெளி விட்டு குழிகள் எடுக்க வேண்டும் (வழக்கமாக வாழைக்கு அதிக இடைவெளிவிட வேண்டும். ஆனால், இலைக்காக சாகுபடி செய்யும்போது குறைந்த இடைவெளி இருந்தாலே போதுமானது. இலைகளை அடிக்கடி அறுவடை செய்வதால், இந்த இடைவெளியிலேயே தேவையான சூரியஒளி மற்றும் காற்றோட்டம் வாழைக்குக் கிடைத்து விடும்). ஒவ்வொரு குழியும் அரை அடி ஆழம் மற்றும் அகலத்துடன் இருக்க வேண்டும். மண்வெட்டி மூலமே குழி எடுத்து விடலாம். இந்த இடைவெளியில் குழி எடுக்கும்போது நிலத்தின் வாகைப் பொறுத்து 1,700 குழிகள் வரை எடுக்க முடியும் (இவர் 1,600 குழிகள் எடுத்திருக்கிறார்). பிறகு சொட்டு நீர்ப்பாசனம் அமைத்துக்கொள்ள வேண்டும்.
நாட்டுரக வாழைக் கன்றுகளை நடவு செய்ய வேண்டும் (இவர் பூவன் ரகக் கன்றுகளை நடவு செய்திருக்கிறார்). நாம் குழிகளை எடுத்து நிலத்தைத் தயார் செய்து வைத்துவிட்டால், கன்று விற்பனை செய்யும் வியாபாரிகளே நடவு செய்து கொடுத்து விடுவார்கள். பிறகு, நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். தொடர்ந்து நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்து பாசனம் செய்தால் போதுமானது.
மாதம் ஒரு முறை ஜீவாமிர்தம்!
நடவு செய்த 20ம் நாளில் களையெடுத்து, 200 லிட்டர் வடிகட்டிய ஜீவாமிர்தக் கரைசலை சொட்டுநீருடன் கலந்துவிட வேண்டும். தொடர்ந்து மாதத்துக்கு ஒரு முறை ஜீவாமிர்தத்தை இதேபோல சொட்டுநீருடன் கலந்துவிட வேண்டும். 40ம் நாள் தழை, மணி, சாம்பல் சத்துக்கள் அடங்கிய ஆர்கானிக் உரத்தை, கன்றுக்கு 60 கிராம் வீதம் அடிப்பகுதியில் வைத்து நீர்ப்பாசனம் செய்ய வேண்டும் (ஏக்கருக்கு 100 கிலோ உரம் தேவைப்படும்).
ஐந்தாம் மாதத்திலிருந்து அறுவடை!
60ம் நாள் மீண்டும் ஒரு முறை களையெடுத்து மண் அணைத்துவிட வேண்டும். 90ம் நாள் 1,600 கிலோ மண்புழு உரத்துடன் 2 கிலோ சூடோமோனஸ் மற்றும் 2 கிலோ டிரைக்கோடெர்மாவிரிடி ஆகியவற்றைக் கலந்து ஒவ்வொரு கன்றுக்கும் அடிப்பகுதியில் ஒரு கிலோ அளவுக்கு இட்டு பாசனம் செய்ய வேண்டும். தொடர்ந்து ஒவ்வொரு கன்றுக்கும் 100 கிராம் வேப்பம் பிண்ணாக்கை வைக்க வேண்டும்.
நடவு செய்த ஐந்தாம் மாதத்தில் இருந்து இலைகளை அறுவடை செய்ய ஆரம்பிக்கலாம். தொடர்ந்து 13 மாதங்கள் வரை அறுவடை செய்யலாம். ஏழாம் மாதம் தேவைப்பட்டால், சாம்பல்சத்து அடங்கிய ஆர்கானிக் உரத்தைக் கொடுக்க வேண்டும். அதேபோல பயிர் ஊட்டம் குறைந்து காணப்பட்டால், 3 லிட்டர் பஞ்சகவ்யா அல்லது 5 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை             100 லிட்டர் தண்ணீரில் கலந்துத் தெளிக்க வேண்டும்.
இலைவாழைக்கு இரண்டு தழைவுகள்!
அறுவடையைத் தொடங்கும் ஐந்தாம் மாதத்திலேயே பக்கக்கன்றுகளும் முளைத்து வந்து விடும். இவற்றில் தரமானக் கன்றுகளை விட்டுவிட்டு மற்றவற்றைக் கழித்துவிட வேண்டும். பக்கக் கன்றுகளிலும் ஐந்து மாதத்துக்குப் பிறகு இலைகளை அறுவடை செய்யலாம். தாய் மரங்களில் அறுவடை முடிந்த ஐந்து மாதங்கள் வரை பக்கக் கன்றுகளில் அறுவடை செய்யலாம். அதன்பிறகு, மொத்தமாக எல்லா மரங்களையும் அழித்துவிட வேண்டும். பழங்களுக்காக வாழை சாகுபடி செய்யும்போது மூன்று அல்லது நான்கு தழைவு வரை பக்கக் கன்றுகளை விடுவார்கள். ஆனால், இலைக்காக சாகுபடி செய்யும்போது இரண்டாம் தழைவோடு நிறுத்தி விட வேண்டும்.
இயற்கை முறையில் சாகுபடி செய்யும்போது மரங்கள் நல்ல வலிமையாக இருப்பதோடு வெயில், மழை ஆகியவற்றையும் தாண்டி நிற்கும். இலைகளும் தடிமனாக இருப்பதால் அதிகமாகக் கிழியாது.’
இரண்டரை லட்ச ரூபாய் லாபம்!
சாகுபடிப் பாடத்தை நல்லசிவம் முடிக்க, மகசூல் மற்றும் வருமானம் பற்றி ஆரம்பித்தார் அவருடைய மனைவி சொர்ணா.
''வாரத்துக்கு இரண்டு முறை இலைகளை அறுக்கலாம். ஆரம்பத்துல கம்மியாத்தான் கிடைக்கும். கொஞ்சம் கொஞ்சமா மகசூல் கூடும். அறுப்புக்கு 1,300 இலைகள் வீதம் மாசத்துக்கு 10,000 இலைகள் சராசரியா கிடைக்கும்.                 18 மாசத்துக்கு இப்படி தொடர்ந்து அறுவடை பண்ணலாம். இயற்கை முறையில விளைவிக்கறதால ரெண்டு, மூணு நாள் வரைக்கும்கூட எங்க இலைகள் வாடாம இருக்குனு வியாபாரிங்க சொல்வாங்க. அதனால, இலைக்கு பத்து பைசா கூடுதலாவும் கொடுக்கறாங்க. இலைக்கு ரெண்டு ரூபாய் வரைக்கும் விலை கிடைக்குது. எப்படிப் பாத்தாலும், மொத்தத்துல ரெண்டரை லட்ச ரூபாய்க்குக் குறையாம லாபம் கிடைக்கும்'' என்றார் மகிழ்ச்சியாக.  
படங்கள்: வெ. பாலாஜி
 தொடர்புக்கு
எஸ். நல்லசிவம், அலைபேசி: 98422-48693.
'பசுமைத்தாய் உழவர் மன்றம்!’
நல்லசிவம், தன்னுடைய பகுதியில் இருக்கும் 13 விவசாயிகளை ஒன்றிணைத்து தோட்டக்கலைத்துறை உதவியுடன் 'பசுமைத்தாய் உழவர் மன்றம்’ என்ற அமைப்பை உருவாக்கியிருக்கிறார். இதன் மூலம், இயற்கை விவசாயம், கருவிகள் பயன்பாடு போன்றவற்றைப் பற்றி  பயிற்சி முகாம்கள் நடத்துவதோடு பசுமைச் சுற்றுலாவுக்கும் ஏற்பாடுகள் செய்து வருகிறார்.
Source:pasumaivikatan

No comments: