Monday

கூடுதல் லாபம் + இயற்கை உரம்... ஊடுபயிர் தரும் இனிய வரம்!

கூடுதல் லாபம் + இயற்கை உரம்...
ஊடுபயிர் தரும் இனிய வரம்!
 ''மண்ணையும் வளமாக்கி, மரத்தையும் செழிப்பாக்கும் கோகோவைவிட, தென்னைக்கு சிறந்த ஊடுபயிர் எதுவும் இல்லை. கோகோவுல இருந்து அதிகளவுல இலைகள் உதிர்ந்துகிட்டே இருக்கறதுனால, மண்ணுல தழைச்சத்தும் நுண்ணூட்டமும் அதிகமாகுது'' என்று சான்றிதழ் கொடுக்கிறார் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள வேப்பங்குளத்தைச் சேர்ந்த விவசாயி இளங்கோவன். இவர், வழக்கறிஞரும்கூட!

''இந்தத் தென்னந்தோப்போட மொத்தப் பரப்பு 20 ஏக்கர். ஏழரை ஏக்கர்ல மட்டும் ஊடுபயிரா கோகோ சாகுபடி செஞ்சிருக்கேன். தென்னந்தோப்பில் தலா 25 அடி இடைவெளியில் ஒரு ஏக்கருக்கு 75 தென்னை மரங்கள் இருக்குது. முன்னயெல்லாம் ஒரு தென்னையில இருந்து ஒரு வெட்டுக்கு 30 காய்தான் கிடைக்கும். கோகோ சாகுபடி செஞ்ச பிறகு, 34 காய் வரைக்கும் கிடைக்குது.
முதல்ல... தென்னைக்கு இடையில, வாழையைத்தான் ஊடுபயிரா செஞ்சுக்கிட்டு இருந்தேன். விளைச்சலும் நல்லாத்தான் இருந்துச்சு. ஆனா, லாபமான விலை கிடைக்கல. 'வேற என்ன செய்யலாம்?'னு யோசிச்சிக்கிட்டு இருந்தப்பதான், தோட்டக்கலைத்துறையில வேலைப் பார்க்குற என் நண்பர் சுகுமார், 'தோட்டக்கலைத்துறையில கோகோ கன்னுகளை இலவசமா கொடுக்கறாங்க. முதல் மூணு வருஷத்துக்கு இடுபொருட்களையும் இலவசமா கொடுக்குறாங்க. கோகோவுக்குத் தேவையான குளிர்ச்சியான சூழலும், நிழலும் இந்த தென்னந்தோப்புல இருக்கறதுனால, கண்டிப்பா நல்ல மகசூல் கிடைக்கும். விற்பனையைப் பத்தியும் கவலைப்பட வேண்டியதில்லை’னு நம்பிக்கைக் கொடுத்தார். அதனால கோகோவை நடவு செஞ்சேன்.
தென்னைக்கு மிகக்குறைவான அளவு ரசாயன உரங்களைக் கொடுத்துக்கிட்டு இருக்கேன். அதேமாதிரி ரசாயன முறையிலயே கோகோவை சாகுபடி செய்யலாம்னுதான் நினைச்சிருந்தேன். ஆனா, இந்தப் பகுதியைச் சேர்ந்த முன்னாள் வேளாண்மை அலுவலர் வீரப்பன், 'இதை இயற்கை முறையில செஞ்சுப் பாருங்க'னு ஆர்வமா சொன்னதோட, இயற்கை விவசாயத்தைப் பத்தியும் தெளிவா எடுத்துச் சொன்னார். அதேமாதிரியே செஞ்சேன், அருமையா வளர்ந்திருக்கு'' என்றவர், கோகோ சாகுபடி பற்றி சொன்னதை பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.
10 அடி இடைவெளி!
'மணற்பாங்கான நிலங்களைத் தவிர, அனைத்து வகையான மண்ணிலும் கோகோ நன்றாக விளையும். வளமான தண்ணீர் வசதி தேவை. தென்னந்தோப்பில் இரண்டு சால் உழவு ஓட்டிய பிறகு, இரண்டு தென்னை மர வரிசைக்கு இடையில் மற்றும் மரங்களுக்கு இடையில் என கோகோ நடவு செய்யலாம். தென்னை மர வரிசைக்கு நடுவில், பத்தடி இடைவெளியில், ஒன்றரை அடி நீள, அகல, ஆழத்தில் வரிசையாகக் குழியெடுக்க வேண்டும். இரண்டு தென்னை மரங்களுக்கு இடையிலும் இதே அளவில் குழிகள் எடுக்க வேண்டும். 25 அடி இடைவெளியில் உள்ள தென்னந்தோப்பில் மொத்தம் 200 குழிகள் வரை எடுக்கலாம் (இவர் 200 குழிகள் எடுத்து செடிகளை நட்டிருக்கிறார்).
ஒரு வாரம் வரை குழிகளை காய விட்டு, ஒவ்வொரு குழியிலும் 5 கிலோ தொழுவுரம், 200 கிராம் வேப்பம்பிண்ணாக்கு, தலா 50 கிராம் பாஸ்போ-பாக்டீரியா, அசோஸ்பைரில்லம், சூடோமோனஸ் ஆகியவற்றை இட்டு, கன்றுகளை நடவு செய்து, குழிகளை மூடி, உடனடியாக உயிர்த் தண்ணீர் கொடுக்க வேண்டும். மூன்றாவது நாள் மறுபடியும் தண்ணீர் கொடுக்க வேண்டும். பிறகு, வாரம் ஒரு முறை தண்ணீர் கொடுக்க வேண்டும். கோடைக் காலத்தில் நான்கு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கொடுக்க வேண்டும்.
மூன்று மாதத்திலேயே கன்று வேகமாக வளரத் தொடங்கிவிடும். 90-ம் நாள் களை எடுத்து, ஒவ்வொரு செடியின் மையத்தில் இருந்து ஒன்றரையடி தள்ளி, மண்ணை லேசாக பறித்து, மேலுரம் இட வேண்டும். இந்த மேலுரத்தை நாமே தயாரித்துக் கொள்ளலாம் (பார்க்க, பெட்டிச் செய்தி). நடவிலிருந்து மூன்று ஆண்டுகள் வரை மூன்று மாதத்துக்கு ஒரு முறை களையெடுக்க வேண்டும். ஒவ்வொரு களையின் முடிவிலும் மேலுரம் வைக்க வேண்டும்.
நடவிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, நான்கு மாதங்களுக்கு ஒரு முறை கவாத்து செய்ய வேண்டும். பூச்சி, நோய்த் தாக்குதல் ஏற்படுவதும் இல்லை. இதற்கென தனியாக தண்ணீர் பாய்ச்ச தேவையில்லை. தென்னைக்குப் பாசனம் செய்யும்போது, இதற்கும் தண்ணீர் கிடைத்து விடும்.
கிலோ  165... ஆண்டுக்கு  20 ஆயிரம்!
நடவிலிருந்து 4-ம் ஆண்டு மகசூல் கிடைக்கும். காய்கள் நன்கு பழுத்து, மஞ்சள் நிறத்துக்கு மாறியதும், பழங்களை அறுவடை செய்து, நிழலில் குவியலாக வைக்க வேண்டும். ஒரு மரத்திலிருந்து ஆண்டுக்கு 72 பழங்கள் வரை கிடைக்கும். அறுவடை செய்த பழங்களை ஒரு வாரம் கழித்து உடைத்து, உள்ளே இருக்கும் விதைகளை தனியாக எடுத்து, மூங்கில் கூடையில் வைக்க வேண்டும். இரண்டு செங்கல் வைத்து, அதன் மீது மூங்கில்கூடையை வைத்து, வாழைஇலையால் மூடவேண்டும். இலையின்மீது, ஈரச் சாக்கை விரித்து, அதற்கு மேலாக, இரண்டு செங்கல்லை வைக்க வேண்டும். தினமும் விதைகளைக் கிளறிவிட்டு, உடனே மூடி விட வேண்டும். ஒரு வாரத்துக்குப் பிறகு, விதைகளை வெளியில் எடுத்து, மூன்று நாட்கள் வெயிலில் காய வைக்க வேண்டும். அதன் பிறகு விற்பனை செய்யலாம்.
நம்மிடம் ஒரு கிலோ விதை இருந்தால்கூட, நம் இடத்துக்கே வந்து, 'கேட்பரீஸ்' நிறுவனத்தினர் கொள்முதல் செய்து கொள்கிறார்கள். ஒரு பழத்தில் இருந்து 30 கிராம் விதை வீதம், ஒரு மரத்திலிருந்து ஆண்டுக்கு சுமார் இரண்டு கிலோ விதைகள் கிடைக்கும். ஏக்கருக்கு 400 கிலோ வரை மகசூல் கிடைக்கும். ஒரு கிலோ விதையை 165 ரூபாய்க்கு எடுத்துக் கொள்கிறார்கள். சராசரியாக 100 ரூபாய்க்கு விற்பனையாகும். அந்த வகையில் ஆண்டுக்கு 40 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். செலவு போக ஏக்கருக்கு 20 ஆயிரம் லாபமாகக் கிடைக்கும்.
சாகுபடி பாடம் முடித்த இளங்கோவன், ''முதல் மூணு வருஷத்துக்குத் தேவையான செடி, இடுபொருள் அனைத்தையும் தோட்டக்கலைத் துறை கொடுக்குறதால, பெருசா செலவு ஒண்ணும் இருக்காது, 4-ம் வருஷத்துல இருந்து ஏக்கருக்கு 12 ஆயிரம் செலவாகும். எல்லாச் செலவும் போக 20 ஆயிரம் ரூபாய்க்கு லாபம் கிடைக்கும். அதையெல்லாம் விட, தென்னையோட வளர்ச்சிக்கு, கோகோ ரொம்பவே உறுதுணையா இருக்கு. அதிகளவுல இலைகள் தரையில விழுந்துகிட்டே இருக்கும். கிட்டத்தட்ட வருஷத்துக்கு ஒரு ஏக்கர்ல 400 கிலோ அளவுக்கு இயற்கை உரம் இதன் மூலம் கிடைச்சுடும். இந்த இலைகள் தரையில மூடாக்கு மாதிரி ஆயிடுறதுனால, தென்னைக்கு களையெடுக்குற செலவும் மிச்சம்'' என்றார்.­­­
10 ஏக்கர் வரை மானியம்!
 கோகோ சாகுபடி தொடர்பாக பேசிய தஞ்சாவூர் மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தின் தொழில்நுட்ப அலுவலர் தங்கராஜ், ''ஊடுபயிராக கோகோ சாகுபடி செய்ய விரும்பும் தென்னை விவசாயிகள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகங்களை அணுகலாம். மானியத் திட்டத்தின் மூலம் ஒரு ஏக்கர் முதல் 10 ஏக்கர் வரை ஊடுபயிராக கோகோ சாகுபடி செய்யலாம்'' என்ற தகவலைச் சொன்னார்.
தொடர்புக்கு, அலைபேசி: 94433-59288
 விலை ஏறும்!
'கேட்பரீஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தின் கோகோ சாகுபடி தொழில்நுட்ப அலுவலர் முருகேசன், ''காய்ப்புக்கு வந்த பிறகு, விவசாயிகள் எங்கள் நிறுவனத்தோடு கொள்முதல் ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம். கோகோவின் சந்தை விலை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே போகிறது. வரும் ஆண்டுகளிலும் இதன் தேவை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கும். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிலோ கோகோவின் விலை வெறும் 50 ரூபாய். தற்போது 165 ரூபாய்க்கு விற்பனையாகிறது. விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருக்கிறது'' என்கிறார்.
 இப்படித்தான் தயாரிக்கணும் மேலுரம்!
ஒரு ஏக்கருக்கு மேலுரம் தயாரிக்க, மட்கிய தொழுவுரம்-400 கிலோ, வேப்பம் பிண்ணாக்கு-20 கிலோ, அசோஸ்பைரில்லம், சூடோமோனஸ், பாஸ்போ-பாக்டீரியா-தலா 20 கிலோ. எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, நிழலில் வைத்து தினமும் தண்ணீர் தெளித்து வந்தால்... நுண்ணுயிர்கள் பல்கிப் பெருகும். ஒரு வாரத்துக்குப் பிறகு இந்தக் கலவையை ஒவ்வொரு செடியைச் சுற்றிலும் இரண்டரை கிலோ அளவுக்கு இட வேண்டும்.
 படங்கள்:கே. குணசீலன்
தொடர்புக்கு
இளங்கோவன், அலைபேசி: 94437-84151
(பிற்பகல் 3 மணிக்கு பிறகு தொடர்பு கொள்ளவும்).
Source: pasumaivikatan

No comments: