Sunday

120 ஏக்கர்... 50 ஆயிரம் மரங்கள்...

120 ஏக்கர்... 50 ஆயிரம் மரங்கள்...
புவி வெப்பமயமாதல், மழையின்மை, தொடரும் வறட்சி... என அனைத்துக்கும், 'மரம் வளர்க்க வேண்டும்’ என்பதைத்தான் தீர்வாகச் சொல்கிறார்கள். இதனால்தான், தன்னார்வ அமைப்புகள், ஆன்மிக அமைப்புகள், அரசுத் துறைகள் என அனைத்துமே மரம் வளர்ப்பைத் தீவிரமாகச் செய்து வருகின்றன. இந்நிலையில், 120 ஏக்கரில் ஆயிரக்கணக்கான மரங்களை வளர்த்து 'லிட்டில் ஊட்டி’ என்ற பெயரில் ஒரு காட்டையே உருவாக்கி வைத்திருக்கிறார்கள், துரைசாமி-சிவகாமி என்ற டாக்டர் தம்பதியர்.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பச்சைமலை அடிவாரப்பகுதியான காஞ்சேரியில்தான் இருக்கிறது 'லிட்டில் ஊட்டி' பண்ணை. உள்ளே நுழைந்ததுமே மலை வாசஸ்தலத்துக்குச் சென்றது போன்றதொரு குளுமை. திரும்பிய பக்கமெல்லாம் மரங்கள். ஏதோ ஓர் அடர்ந்த காட்டுக்குள் நுழைந்து விட்ட பிரமை.
மரத்தடி சாப்பாடு விதைத்த மரம் வளர்ப்பு!
நமக்காகக் காத்திருந்த துரைசாமி, ''மேகத்தை ஈர்க்குற பசுமை காந்தம்தான், மரங்கள். நாட்டுக்கு மட்டுமில்லை. வீட்டுக்கும் வளம் கொடுக்கும். அதனாலதான், இந்த இடத்தை காடாக்கி இருக்குறோம். நாங்க ரெண்டு பேரும் டாக்டர்கள். எங்கள் பிள்ளைகளும் டாக்டர்கள். பையன் பாபு சென்னையில பிராக்டீஸ் செய்றார். பொண்ணு சுபா சேலத்துல பிராக்டீஸ் பண்றா. தம்மம்பட்டியில் நானும், மனைவியும் மருத்துவமனை வெச்சிருக்கோம். முழுநேரமும் மருத்துவமனையைக் கவனிக்க வேண்டியிருந்ததால, மருத்துவத்தைத் தாண்டி வெளியில வர முடியல. இதுக்கு இடையிலதான் இந்த இடத்தை 87-ம் வருஷத்துல வாங்கிப்போட்டோம். வேலை காரணமா எந்த விவசாயத்தையும் ஆரம்பிக்கல.
15 வருஷத்துக்கு முன்ன மகள் கல்யாண பத்திரிகையைக் கொடுக்கறதுக்காக பொம்மிடியில் இருக்குற சொந்தக்காரர் வீட்டுக்குப் போயிருந்தேன். வீட்டைச்சுத்தி அரை ஏக்கர்ல ஏகப்பட்ட மரங்களை வளர்த்திருந்தாங்க. பாத்ததுமே ரொம்ப பிடிச்சுப் போச்சு. அந்த மரத்தடியிலேயே கட்டில் போட்டு சாப்பாடு பரிமாறினாங்க. அந்த அனுபவத்தை மறக்கவே முடியல. அவங்ககிட்டயே மரங்களைப் பத்தி விசாரிச்சப்போ... மரங்களுக்கு பெரிய அளவுல செலவோ, பராமரிப்போ செய்யத் தேவை யில்லை. வருமானமும் அதிகமா கிடைக்கும்னு தெரிஞ்சுக்கிட்டேன். அதுக்கப்பறம்தான் மரம் வளர்ப்புல ஆசை வந்துச்சு.
ஆலோசனை சொல்லும் ஈஷா!
மதுராந்தகம் பக்கத்துல இருக்கிற பொலம்பாக்கத்துல நாப்பது ஏக்கர்ல மரம் வளர்க்கிற முத்துமல்லா ரெட்டியார் பத்திக் கேள்விப்பட்டு, அவரையும் பாத்துப் பேசினேன். மண் வளம், மழை வளம் இல்லாத பகுதியில் அவர் அவ்வளவு மரங்களை நல்லா வளர்த்திருந்தார். '20 வருஷமா தொடர்ந்து நெல், கரும்பு, மஞ்சள்னு பயிர் செய்றப்போ கிடைக்கிற வருமானத்தைவிட, 20 வருஷம் வளர்த்த மரங்கள்ல அதிக லாபம் கிடைக்கும்’னு கணக்குப் போட்டு காட்டினார். அதிலிருந்து இன்னும் ஆர்வம் அதிகமாயிடுச்சு. அவர்தான் ஒரே வகையான மரங்களா இல்லாம, பல வகை மரங்களை வளர்த்தா மண்வளம் கெடாம இருக்கும்னு சொன்னார். அப்பறம் நடவு செய்றது, கவாத்து பண்றது மாதிரியான விஷயங்களையும் தெரிஞ்சுக்கிட்டு 2000-ம் வருஷத்துல மரம் வளர்ப்புல இறங்கினேன்.
மரக்கன்னுங்க, விதைகள்னு வாங்கி நட்டேன். நல்லா முளைச்சு வந்தாலும், விதைகளைப் போட்டு கன்னு உருவாக்கி, நடறது சிரமமா இருந்துச்சு. பிறகு, 2004-ம் வருஷம் ஈஷா மையத்துலிருந்து தேவையான நாத்துகள் கிடைச்சுது. இவங்ககிட்ட நாம நாத்து வாங்கினா, மூணு மாசத்துக்கு ஒரு தடவை நம்ம தோட்டத்துக்கு வந்து ஆலோசனை சொல்றாங்க. இந்த விஷயம் பிடிச்சிருந்ததால, ஈஷா பண்ணையிலயே 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்னுகளை வாங்கி, நட்டு வளர்த்துட்டு இருக்கேன். கிட்டத்தட்ட 14 வருஷமாச்சு. இன்னமும் மரங்களை நடவு செஞ்சுக்கிட்டே இருக்கேன்'' என்ற துரைசாமி, அந்தக் காட்டை சுற்றிக்காட்டியபடி ஒவ்வொரு மரத்தைப் பற்றியும் விளக்கினார் (பார்க்க, பட்டியல்)
பலன் தரும் பல வகை மரங்கள்!
''செம்மரம், மகோகனி, ரோஸ்வுட், தேக்கு, குமிழ், மலைவேம்பு, நீர்மருது மாதிரியான மரங்களை நிறைய நட்டிருக்கேன். கூடவே 5,000 பனங்கொட்டைகளை வாங்கி விதைச் சிருக்கேன். இது பயன் தர, இன்னும் 10 வருஷங்கள் ஆகும். கன்னு 300 ரூபாய்னு 250 அகர் மரக் கன்றுகளை வாங்கி நட்டிருக்கிறேன். இதுவும் நல்லா வளர்ந்து வருது. வேங்கை, சிசு, பூவரசு, வேம்பு, நாட்டு வாகை, கறிபலா, மூங்கில், சில்வர் ஓக், வாத நாராயணன், எலுமிச்சை, சவுக்குனு ஆயிரக்கணக்குல மரங்கள் இருக்கு. ஆயிரத்துக்கும் மேல சந்தன மரங்கள் இயற்கையாவே இங்க இருக்கு.
மொத்தமா பாத்தா... கிட்டத்தட்ட 50 ஆயிரம் மரங்களுக்கு மேல இருக்கு. முழுக்க சொட்டு நீர்ப்பாசனம் தான். மலையடி வாரங்கிறதால கிடைக்கிற மழையிலேயே மரங்கள் நல்லா செழிப்பா வளருது. வருஷத் துக்கு ஒரு முறை 120 ஏக்கருக்கும் சேர்த்து 6 லாரி ஆட்டு எரு, 4 லாரி கோழி எருவை உரமா போடுறேன். இன்னும் மரங்கள்ல இருந்து வருமானம் எடுக்கல'' என்ற துரைசாமி,
''என்னைப் பொறுத்தவரை சுயநலமாத்தான் மரங்களை நடுறேன். ஆனா, அதுல மறைமுகமா பொது நலம் இருக்கு. இந்தப் பகுதியில இப்போ நல்ல மழை கிடைக்கிறதால நிலத்தடி நீர் அதிகமாகியிருக்கு. வெப்பநிலையும் குறைஞ்சிருக்கு. ஆரம்பத்துல என் குடும் பத்துலயே இதுக்கு நிறைய எதிர்ப்புகள் இருந்துச்சு. இப்போ எல்லாருமே இந்த மாற்றங்களை நேரடியா உணர்றதால, இந்த இடத்தை பொக்கிஷமா பாக்க ஆரம்பிச்சிருக்காங்க'' என்று சொல்லி பெருமிதப் பார்வையை வீசினார்.  
 தொடர்புக்கு, துரைசாமி, செல்போன்: 94432-36912.

-வீ.கே. ரமேஷ் படங்கள்: க. தனசேகரன்
Source: pasumaivikatan

No comments: