Wednesday

உவர் நிலத்தை விளை நிலமாக்கி சாதனை

உவர் நிலத்தை விளை நிலமாக்கி சாதனை

மதுரை சமயநல்லூரில் இருந்து தோடனேரியை அடுத்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மூலக்குறிச்சி. மண்ணுக்கு வெள்ளையடித்தது போல், "பளிச்' என்று இருந்தது. விளைச்சலுக்கு உதவாது என்று "பிளாட்' ஆக மாற இருந்த நிலத்தை வாங்கி, இன்று விளைநிலமாக மாற்றிக் காட்டியுள்ளார் விவசாயி வி.சி.வெள்ளைச்சாமி.
புல் கூட முளைக்காத நிலத்தில், இன்று மரங்கள் வளர்ந்து நிற்கும் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
பழைய இரும்புத் தொழில் தான் என் வியாபாரம். வயது அறுபதைத் தாண்டிவிட்டது. குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை முடித்து விட்டேன். இனி மண்ணுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து தான் இந்த இடத்தை வாங்கினேன்.
நிலம் வாங்கிய போதே பள்ளமான இடத்தை ஆய்வு செய்து, அதில் மீன்வளர்க்க ஆசைப்பட்டேன். நிலத்தை வாங்கி ஆசையாய் கொய்யா, சப்போட்டா, மா மரக்கன்றுகளை நட்டேன். நட்டதோடு சரி, பாதி செத்துவிட்டது. மீதியிருப்பதும் வைத்த கடனுக்காக நின்றது. நிலம் வாங்கிய போது இங்கு புல், பூண்டு வளரவில்லை. காக்கை, குருவி கூட பறக்கவில்லை.
"அகத்தி மரம் வளர்த்துப் பார்' என்றார்கள். சரியென்று அகத்தி கன்றுகளை நட்டேன். அதன் காற்றை சுவாசித்து சப்போட்டாவும், கொய்யாவும் கூடவே வளர்ந்தன. மரங்கள் மெல்ல வளர்ந்தாலும் பரவாயில்லை என, ரசாயன உரம் பக்கமே போகவில்லை. மாட்டுச்சாணமும், ஆட்டுபுழுக்கையும் தான் உரமாக தந்தேன். மெல்ல மெல்ல புற்கள் வளர்ந்தன. 20 சென்ட் பள்ளமான இடத்தில் இன்னும் சற்று ஆழம் தோண்டினேன். கடந்தாண்டு அக்டோபரில் பெய்த இரண்டு நாட்கள் மழையில், 20 சென்ட் நிலத்திலும் தண்ணீர் நிறைந்தது. கட்லா, சி.சி., மீன்களை வாங்கி விட்டேன்.
அவ்வப்போது பெய்யும் சிறுமழையால் இன்னமும் தண்ணீர் பாதியளவு உள்ளது. இதுவரை 100 கிலோ மீன்களை எடுத்துவிட்டேன். இன்னமும் 150 கிலோ மீன்கள் உள்ளன. சுத்தமான மழைநீரில் மீன்கள் கொழுகொழுவென்று வளர்வதைப் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.
மூன்றரை ஏக்கரில் சப்போட்டா, கொய்யா, நெல்லி, நாவலுக்கு சொட்டுநீர்ப் பாசனம் அமைத்துள்ளேன். பத்தடி நீள, அகல கிணற்று நீர் தான் ஆதாரம். புல்லைத் தாண்டி நெல் விளைந்தது. முதலாண்டில் ஏக்கருக்கு 
5 டன், அடுத்தாண்டு 12 டன், மூன்றாமாண்டு 20 டன் எடுத்தேன். இந்தமுறை மழைஇல்லாததால் வெறுமனே உழுது போட்டிருக்கேன். மழை பெய்தால், மண்ணாவது நல்ல உறிஞ்சும். காய்கறி, பந்தல் காய்கள் பயிரிடுவதற்காக, சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து தயாராக வைத்துள்ளேன்.
அஞ்சு ஆட்டுக்குட்டிகள் வாங்கி விட்டேன். இப்போது அஞ்சும் அடுத்த முறை குட்டிகளை உருவாக்கி விட்டது. அவற்றுக்கு தனியாக மரக்கொட்டில் அமைத்துள்ளேன். ஆட்டின் கோமியமும், புழுக்கையும் ஒன்றாக கலந்தால் நல்ல உரம் என்பதால், கொட்டிலின் கீழே சிமென்ட் சிலாப் அமைத்து, உரத்தை சேகரிக்கிறேன். மாட்டுக்கு தனியிடம் அமைத்து, மாட்டுச்சாணம் வாங்கியும் மண்புழு உரம் தயாரிக்கிறேன்.
என் நிலத்தில் இருந்து ஒரு சொட்டு மழைநீரை வெளியே விட மாட்டேன். அதற்கேற்ப ஆங்காங்கே வரப்பு வெட்டி மீன்குட்டையில் விழுமாறு செய்துள்ளேன். ஒற்றை ஈச்சமரத்தில் ஒரு ஜோடி சிட்டுக்குருவி கூடு கட்டியது. இப்போது 30 குருவிகள் வரை இங்கேயே சுற்றித் திரிகின்றன.
நிலமென்றால் புல், பூண்டு, பாம்பு, பூச்சி, தவளை, மரம், செடி, கொடி, பறவைகளோடு மனிதர்களும் இணைந்திருக்க வேண்டும். மூன்றரை ஏக்கர் தரிசு நிலத்தை ஒருங்கிணைந்த பண்ணையமாக மாற்றி, சாதித்துவிட்டேன். சுற்றிலும் வேலியும், வேலியையொட்டி சவுக்கு கன்றுகளும் நட்டுள்ளேன். இன்னமும் ஒருஏக்கர் நிலம் தரிசாகத் தான் உள்ளது. இதை இனிமேல் தான் புல் விளை விக்க முயற்சி செய்ய வேண்டும், என்றார்.
அனுபவம் பேச: 94431 49166.
-எம்.எம்.ஜெயலெட்சுமி, மதுரை

Source:http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=21402&ncat=7


1 comment:

Unknown said...

சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238