Saturday

முருங்கை -ஆண்டுக்கு 50 டன் மகசூல்...

ஜீரோ பட்ஜெட் முருங்கை
ஜில்லுனு ஒரு லாபம்... ஆண்டுக்கு 50 டன் மகசூல்...



செம்மண் நிலம் ஏற்றது.
ஜீரோ பட்ஜெட்டில் குறைவான செலவு.
ஆண்டுக்கு ரூ. 3.லட்சம் லாபம்.

குழம்பு, வெஞ்சனம், அவியல் என அனைத்து வகையான உணவுகளுக்கும் பயன்படும் வெங்காயம், தக்காளி, தேங்காய் போன்ற காய்கறிகளில் முருங்கையும் ஒன்று. அதனால்தான் ஆண்டு முழுவதுமே அதற்கு சந்தையில் கிராக்கி. அதுவும் முகூர்த்த நாட்கள், விரத காலங்களில் சொல்லவே வேண்டியதில்லை. அவ்வளவு உச்சத்திலிருக்கும் முருங்கையின் விலை.

இத்தகையச் சந்தை வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு தொடர்ந்து முருங்கை சாகுபடி செய்து வரும் விவசாயிகள் பலர் உண்டு. அவர்களில் ஒருவர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த அரவிந்தன்.
முருங்கையைப் போட்டவன்... வெறுங்கையா நின்னதுல்ல!
''உழுதவன் கணக்குப் பார்த்தா உழக்குகூட மிஞ்சாதுனு சொல்லுறதெல்லாம் மத்த பயிர்களுக்கு வேணும்னா பொருந்தலாம். முருங்கைக்குப் பொருந்தாது. 'முருங்கையைப் போட்டவன் வெறுங்கையா நின்னதுல்ல’னுதான் நாங்க சொல்வோம். அதனால எங்க பகுதி முழுக்க முருங்கை சாகுபடி செஞ்சுக்கிட்டிருக்கோம்'' என்று முருங்கைக்குக் கட்டியம் கூறுகிறார், அரவிந்தன்.
ஆம், சாத்தான்குளம் பகுதியில் திரும்பிய திசைகளிலெல்லாம் முருங்கைதான். இப்பகுதியில் பெரும்பாலானோர் ரசாயன முறையில் சாகுபடி செய்ய, அரவிந்தன் மட்டும் ஜீரோ பட்ஜெட் முறையில் சாகுபடி செய்கிறார் என்பது கூடுதல் சிறப்பு.
ஜீவன் தந்த ஜீவாமிர்தம்!
''எங்களுக்குச் சொந்தமா கிணறோட நாலு ஏக்கர் நிலமிருக்கு. செம்மண் பூமிதான். அதுல எங்கப்பா காலத்துல இருந்தே ரெண்டரை ஏக்கர்ல யாழ்ப்பாணம், குருஷ், சாகவச்சேரி, பி.கே.எம்1 இப்படி மரமுருங்கை, செடிமுருங்கைனு பல ரகங்கள்ல 500 முருங்கை மரங்கள் இருக்கு. ஒன்றரை ஏக்கரில் வாழையும் இருக்கு. முருங்கை மரங்களுக்கு இப்போ பதினெட்டு வயசாகுது. நான் விவசாயத்துக்கு வந்தப்போ ரசாயன முறையிலதான் ஆரம்பிச்சேன். ரெண்டு வருஷத்துக்கு முன்ன தற்செயலா பசுமை விகடனைப் படிக்கற வாய்ப்பு கிடைச்சது. அதிலிருந்தே தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். அப்படித்தான் ஜீரோ பட்ஜெட் எனக்கு அறிமுகம்.
'அப்படி என்னதான் அதுல இருக்கு’னு தெரிஞ்சக்கணும்னு ஆசைப்பட்டு நாட்டுமாடு ஒண்ணை வாங்கினேன். சாணம், கோமூத்திரத்தை வெச்சு ஜீவாமிர்தம் தயாரிச்சு வாழை, முருங்கைனு கொடுத்தேன். ரெண்டு தடவை ஜீவாமிர்தம் கொடுத்ததுமே பயிர்ல செழுமை கூடி நல்ல வித்தியாசம் தெரிஞ்சது. அந்த நிமிஷமே ரசாயனங்களுக்கு விடை கொடுத்துட்டேன். தொடர்ந்து ஜீவாமிர்தம் பாய்ச்சுனப்போ பூச்சிகளோட தாக்குதலும் குறைவா இருந்ததும், நான் இயற்கை விவசாயத்துக்கு மாறினதுக்கு ஒரு காரணம். என் தோட்டத்து முருங்கை மரங்கள்ல பூச்சிகள் தாக்காம இருக்கறதைப் பக்கத்து விவசாயிகளெல்லாம் ஆச்சரியமா பாக்குறாங்க.
விளையாட்டா ஆரம்பிச்சது இன்னிக்கு எனக்கு வருமானத்தை அள்ளிக் கொடுத்துட்டு இருக்குது. நான் செடிகளா எந்த முருங்கையையும் வைக்கல. என் தோட்டத்துல இருக்கற மரங்கள்ல இருந்து கிளைகளை ஒடிச்சித்தான் நட்டேன்'' என்று முன்னுரை கொடுத்தவர் சாகுபடி பாடத்தைச் சொல்ல ஆரம்பித்தார். அதை அப்படியே தொகுத்திருக்கிறோம்.
ரகத்துக்கு ரகம் இடைவெளி மாறும்!
மர முருங்கைக்கு செம்மண் மிகவும் ஏற்றது. மழைக் காலங்களில் முருங்கை நடவு செய்யும்போது 'முருங்கைப் போத்து’ (முருங்கைக் கிளை) அழுகி விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, வெயில் காலங்களில் (மார்ச் மாதம்) நடவு செய்வது நல்லது. அதிகமாக நீர் பாய்ச்சுவதும் தேவையில்லாத வேலை என்பதால், சொட்டுநீர்ப் பாசனம் அமைத்துக் கொள்வது நல்லது. நடவுக்கு இரண்டரை அடி நீளமுள்ள முருங்கைப் போத்துக்களை தரமான தாய்மரத்தில் இருந்து சேகரிப்பது அவசியம். மர முருங்கையைப் பொறுத்தவரை ஒவ்வொரு ரகத்துக்கும் நடவுக்கான இடைவெளி வேறுபடும்.
யாழ்ப்பாணம் மற்றும் பி.கே.எம்1 ஆகிய ரகங்களுக்கு 15 அடி இடைவெளி தேவை. குருஷ் ரகத்துக்கு 20 அடியும், சாகவச்சேரிக்கு 25 அடியும் இடைவெளி தேவை. பொதுவாக 15 அடிக்கு மேல இடைவெளி இருந்தால்... முருங்கை மரங்களில் நல்ல காய்ப்பு இருக்கும். ஒவ்வொரு ரகங்களில் கிடைக்கும் மகசூலும் வேறுபடும் என்பதால், இடைவெளி அதிகரிக்கும்போது மரங்களின் எண்ணிக்கை குறைவதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. சராசரி மகசூல் ஏறத்தாழ ஒன்றாகவே இருக்கும். தேர்வு செய்யும் ரகத்துக்கேற்ற இடைவெளியில் ஒரு கன அடி அளவுக்கு குழி எடுத்து, குழியின் நடுவில் முருங்கைக் கிளையை நடவு செய்து மண்ணை நன்கு அழுத்திவிட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
அதிக தண்ணீர் ஆபத்து!
இரண்டரை அடி நீளக் கம்பில் ஒரு அடி மண்ணுக்குள்ளும் ஒன்றரை அடி குழிக்கு மேலும் இருக்கும். வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். அதிகமாக தண்ணீர் பாய்ச்சினாலும் கம்பு அழுகி விடும் வாய்ப்பு இருப்பதால், காய்ச்சலும் பாய்ச்சலுமாக இருக்க வேண்டும். ஜீரோ பட்ஜெட் முறை என்பதால், பெரிய அளவில் பராமரிப்புக்கானத் தேவை இருக்காது.
கவாத்து அவசியம்!
பத்து நாட்களுக்கு ஒரு முறை, பாசன நீருடன் மரத்துக்கு அரை லிட்டர் என்ற கணக்கில் ஜீவாமிர்தத்தைக் கலந்துவிட வேண்டும். அதிகமாகக் கொடுத்தாலும் பிரச்னையில்லை. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு மரத்தின் அடியிலும் சிறிய பள்ளம் எடுத்து மரத்துக்கு பத்து கிலோ தொழுவுரத்தை இட்டுக் குழியை மூடிவிட வேண்டும். வருடத்துக்கு ஒரு முறை மரங்களின் பக்கக் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். காய்ப்பு அதிகம் இல்லாத ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கவாத்து செய்வது நல்லது.

முருங்கையில் பொதுவாக நூற்புழுத் தாக்குதல் இருக்கும். இலை, பூ, காம்புகளை இப்புழு சாப்பிட்டுவிடும். இதேபோல கங்கணம் பூச்சி, முருங்கையின் வேரைத் தாக்கி மரத்தையே அழித்து விடும். முருங்கையின் இன்னொரு முக்கிய எதிரி தேயிலைக் கொசு. இவை மொத்தமாகப் படையெடுத்து வந்து மரத்தில் உள்ள அனைத்து இலைகளையும் சாப்பிட்டு மரத்தையே மொட்டையடித்து விடும். இவை தாக்கினால் இயற்கைப் பூச்சிவிரட்டிகளை உபயோகப்படுத்தி கட்டுப்படுத்தலாம். பொதுவாக ஜீரோ பட்ஜெட் விவசாயத்தில் பூச்சித் தாக்குதல் அவ்வளவாக இருக்காது.
ஆண்டுக்கு 60 டன் மகசூல்!
நடவு செய்த நான்காம் மாதத்தில் இருந்தே மரங்கள் காய்க்கத் தொடங்கி விடும். ஆனால், இரண்டாம் வருடத்தில் இருந்துதான் அதிகளவில் காய்கள் கிடைக்கும். வருடத்துக்கு எட்டு மாதங்கள் வரை கிடைக்கும். அதிக மழை பொழியும் நேரங்களில் காய்க்காது.
இரண்டரை ஏக்கரில் ஆண்டுக்கு 60 டன் அளவுக்கு மகசூல் கிடைக்கும். சரியான முறையில் கவாத்து செய்து பராமரித்து வந்தால், பல ஆண்டுகள் வரை மரங்கள் காய்த்துக் கொண்டிருக்கும். அதிக வயதாகி மகசூல் குறையும் காலங்களில் மரங்களை அழித்து புதிதாக நடவு செய்து கொள்ளலாம்.
சாகுபடி பாடம் முடித்த அரவிந்தன் நிறைவாக வருமானம் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.  

  ''சாத்தான்குளத்தில் போலையர்புரம் பகுதியில் முருங்கைக்காய் கொள்முதல் செய்யுறதுக்கு ஏகப்பட்ட கடைக இருக்கு. தினமும் ஏகப்பட்ட விவசாயிகள் டூ வீலர்ல, ஆட்டோனு முருங்கைக் காய்களை கொண்டுபோய் கொடுப்பாங்க. இங்க இருந்து வெளிநாடுகளுக்கெல்லாம் ஏற்றுமதியாகுது. ஆனா, நான் திருநெல்வேலிச் சந்தையிலதான் காய்கள விக்கிறேன். எனக்குத் தெரிஞ்சு கிலோ எட்டு ரூபாய்க்கு குறைஞ்சு வித்ததில்லை. நல்ல சீசன் நேரங்கள்ல கிலோ நாற்பது, ஐம்பது ரூபாய் வரைகூட போகும். சராசரியா வருஷத்துக்கு 50 டன் காய்களுக்கு குறைந்தபட்ச விலையா எட்டு ரூபாய்னு வெச்சுக்கிட்டாலே 4 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். செலவெல்லாம் போக கண்டிப்பா 3 லட்ச ரூபாய்க்கு மேல லாபம் கிடைக்கும்'' என்று மகிழ்ச்சியுடன் சொன்னவர்,

''ரசாயன முறையில செஞ்சப்ப ஆன செலவைவிட, இப்போ வருஷத்துக்கு முப்பதாயிரம் ரூபாய் வரைக்கும் செலவு குறைஞ்சிருக்கு. அதேசமயம், கொஞ்சம் கொஞ்சமா மகசூல் கூட ஆரம்பிச்சிருக்கு. அதில்லாம காய்கள் நல்லா திரட்சியா இருக்கறதால கழிவுகள் அதிகமா வர்றதில்லை.
தோட்டம் முழுவதும் மூடாக்குப் போட்டு, சொட்டுநீர்ப் பாசனத்தைத் தெளிப்பு நீர்ப்பாசனமா மாத்தலாம்னு இருக்கேன். அதேமாதிரி இன்னமும் ஜீவாமிர்தத்தை அதிகப்படுத்தி மழைக் காலங்கள்லயும் காய்களைக் காய்க்க வைக்கிறதுக்கு முயற்சி பண்ணிட்டு இருக்கேன். அதையெல்லாம் பண்ணிட்டா... இன்னும் அதிகமான மகசூல் கிடைக்கும்னு எதிர்பாக்குறேன்'' என்றார்!
தொடர்புக்கு, அரவிந்தன், 

அலைபேசி: 99412 -04063 

படங்கள்: ஏ. சிதம்பரம் 
Source: pasumaivikatan

No comments: