Friday

தென்னையில் பல்லடுக்கு சாகுபடிக்கான பாக்கு

கை கொடுக்கும் காசு மரம் !

நேரடி விதைப்பே சிறந்தது.
நீர்வளம்,வடிகால் வசதி முக்கியம்
ஒரு மரத்தில் 1.5 கிலோ முதல் 2.5 கிலோ
"தென்னைச் சாகுபடி பற்றி முழுமையாகப் பார்த்தோம். அடுத்ததாக, தென்னையில் பல்லடுக்கு சாகுபடிக்கான பாக்கு, மிளகு, காபி, வெனிலா ஆகிய பயிர்களைச் சாகுபடி செய்வது பற்றிப் பார்ப்போம். முதலில் நாம் எடுத்துக் கொள்வது பாக்கு.
காசு மரம்!
இந்தியா உட்பட பல நாடுகளில் தாம்பூலம் தரிக்கும் பழக்கம் இருந்து வருகிறது. தாம்பூலத்துக்கு பாக்கு முக்கியமான கூட்டுப் பொருள். இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 1,50,000 டன்னுக்கு மேல் பாக்கு உற்பத்தியாகிறது. இது பணப்பயிர் வரிசையில் உள்ளது. சில இடங்களில் இதை 'காசு மரம்' என்று கூட அழைக்கின்றனர்.
பாக்கு, பருவகால சூழ்நிலையைப் பொறுத்து உயரமாக வளரக்கூடிய, கிளை இல்லா மர வகையைச் சேர்ந்த, வெப்ப மண்டலப் பயிர். கடல் மட்டத்திலிருந்து 1,000 மீட்டர் வரை உயரம் உள்ள பகுதிகளில், 15 டிகிரி முதல் 38 டிகிரி சென்டிகிரேட் வரையான வெப்பநிலை நிலவும் இடங்களில் இம்மரம் நன்கு வளரும். வடிகால் வசதியுள்ள அனைத்து வகை மண்ணிலும் வளரக்கூடிய இப்பயிருக்கு, கொஞ்சம் நிழல் அவசியம். அதனால் தென்னையில் ஊடுபயிராக பயிரிடுவது மிகவும் சிறந்தது. ஏறத்தாழ பாக்கு மரத்தின் இலைகள், தென்னை மரத்தின் இலைகளைப் போலவே இருக்கும்.
நேரடி விதைப்பே நல்லது!
பாக்கு மரத்தைப் பொருத்தவரை நாற்றுகளை வாங்கி வந்து நடுவது அவ்வளவாக நல்லதல்ல. நேரடி விதைப்பு செய்வதுதான் சிறந்தது. நாற்பது வயதுள்ள, நல்ல முறையில் வளர்ச்சியடைந்துள்ள தரமான மரத்தைத்தான் தாய்மரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலிருந்து நன்கு முதிர்ந்து தரையில் உதிரும் விதைகளை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு விதையும் 40 கிராமுக்கு மேல் இருக்க வேண்டும். அப்படிச் சேகரித்த விதைகளை நீரில் போட்டு எந்தெந்த விதைகளின் காம்புகள் மேல் நோக்கி இருக்கின்றனவோ, அந்த விதைகளை மட்டும் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இவைதான் நடவுக்கேற்ற தரமான விதைகள்.
சேகரித்து வைத்திருக்கும் விதைகளை 20 நாட்கள் வரை நிழலில் காயவைத்து, மாட்டுச்சிறுநீர், கொஞ்சம் நீர், நாட்டுப் பசுஞ்சாணம் ஆகியவற்றோடு சேர்த்து... சேறு போல் பிசைந்து நிழலில் வைத்துவிட வேண்டும். இரண்டு மாதங்களில் விதைகள் முளை விட்டுவிடும். முளை விடாத விதைகளை நீக்கிவிட்டு, மற்றவற்றை மீண்டும் ஒரு முறை நிலத்து மண், சாணம், நீர் ஆகியவற்றோடு கலந்து நிழலில் வைத்து, ஈர வைக்கோலை மூடாக்காகப் போடவேண்டும்.
நிழலுக்கு துவரை!
நிலத்தில் தென்னைக்கு இடையில் இரண்டு சென்டி மீட்டர் அளவுக்கு குழி தோண்டி, குருத்து மேல் நோக்கி இருக்குமாறு விதைகளை நடவு செய்ய வேண்டும். அதற்கு முன் பீஜாமிர்தத்தில் விதைநேர்த்தி செய்ய வேண்டியது அவசியம். இரண்டு மரங்களுக்கு இடையில்
9 அடி இடைவெளி இருக்க வேண்டும். விதைத்த பிறகு, குழியில் ஆற்றுமணலைப் போட்டு அழுத்தி-விட்டு, ஜீவாமிர்தத்தைத் தெளிக்க வேண்டும். பின், அது வளர்ந்து வரும் வரை அதைச் சுற்றியுள்ள களைகளை அகற்ற வேண்டும். அருகில் துவரை விதைகளைத் தூவி விட்டால்... பாக்குக்குத் தேவையான நிழல் கிடைக்கும். களைகளையும் கட்டுப்படுத்தி விடலாம்.
நேரடி விதைப்பில்லாமல் நாற்று நடவு செய்ய விரும்புபவர்கள், நாற்றங்கால் அமைத்து நாற்று உற்பத்தி செய்து கொள்ளலாம். ஆனால், வியாபார ரீதியாக இல்லாமல் சொந்தத் தேவைக்கு மட்டும் நாற்றுகளை உறபத்தி செய்து கொள்ளுங்கள்.
நாற்றங்கால்!
பாக்கு நடவு செய்யப்போகும் நிலத்துக்கு அருகில், அதேசமயம் நீர் ஆதாரம் உள்ள பகுதியாகப் பார்த்து நாற்றங்காலை அமைக்க வேண்டும். மணற்பாங்கான நிலமாகவும், நல்ல சூரிய வெளிச்சம் கிடைக்கும் இடமாகவும் இருக்க வேண்டும். நேரடியாக வெயில் படாமல், சூரிய ஒளி கசிந்து வருவது போல மரங்களுக்கிடையில் நாற்றங்காலை அமைக்கலாம். மரங்கள் இல்லையென்றால், இலை, தழைகளை வைத்து பந்தல் போட்டுக் கொள்ளலாம். வடிகால் வசதியோடு கூடிய தளர்வான மண் உள்ள நிலத்திலும் நாற்றங்கால் அமைக்கலாம்.
நிலத்தைத் தேர்வு செய்தவுடன் மரக்கலப்பை கொண்டு அதனை உழுது மட்கிய வைக்கோலை நிலத்தில் பரப்ப வேண்டும். தொடர்ந்து மணல் மற்றும் சலித்த பண்ணை எரு ஆகியவற்றைக் கலந்து தூவவேண்டும். அதன் மேல் காய்ந்த வேப்பிலைகளைப் பரப்ப வேண்டும். பிறகு, இவை அனைத்தும் நிலத்தின்
மேல்மண்ணோடு நன்கு கலக்குமாறு நிலத்தை சமப்படுத்தி ஜீவாமிர்தக் கரைசலைத் தெளிக்க வேண்டும். அதன் மீது, சலித்த பண்ணை எருவைத் தூவி விட வேண்டும்.
பிறகு, முளை கட்டிய பாக்கு விதைகளை பீஜாமிர்தத்தில் நனைத்து, வரிசைக்கு வரிசை அரை அடியும், விதைக்கு விதை கால் அடியும் இருப்பது போல 2 செ.மீ. ஆழத்தில் நடவு செய்ய வேண்டும். விதைகளைச் சுற்றி மணலை இட்டு அழுத்தி ஜீவாமிர்தக் கரைசலைத் தெளிக்க வேண்டும். தொடர்ந்து ஜீவாமிர்தம் கலந்த நீரைப் பாசனம் செய்ய வேண்டும். மாதத்துக்கு இரு முறை மேல்தெளிப்பாகவும் கொடுக்க வேண்டும். மூன்று மாதத்துக்குள் முளைப்பு எடுத்து ஒன்றரை வருடத்தில் நாற்று தயாராகி விடும்.
பெரியக் குழி வேண்டாமே!
தென்னை நடவு செய்யும்போதே அவைகளுக்கு இடையில் 9 அடி இடைவெளியில் பாக்கு நாற்றுகளையும் நடவு செய்து விடலாம். நாற்றுக்குத் தேவையான அளவு குழியைத் தோண்டினால் போதுமானது. பெரியக் குழிகள் தேவையில்லை. ஜூன் மாதம் நடவுக்கேற்றது. நடவு செய்து எரு, ஆற்று மணல் ஆகியவற்றைக் கலந்து நாற்றுக்களைச் சுற்றி இட்டு அழுத்தி விட வேண்டும். தொடர்ந்து தென்னைக்குச் செய்வது போலவே ஜீவாமிர்தம் கலந்த நீரைப் பாசனம் செய்ய வேண்டும். ஜீவாமிர்தத் தெளிப்பும் அவசியம். முதல் இரண்டு ஆண்டுகள் வரை நாற்றுகளுக்கு நிழல் தேவை. அதனால் கிளரிசீடியா, துவரை ஆகியவற்றை பாக்கு நாற்றில் இருந்து இரண்டடி இடைவெளிவிட்டு நடவு செய்யலாம். நாற்றுகளைச் சுற்றி நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நாற்று நடவு செய்த ஆறு முதல் எட்டு ஆண்டுகளில் காய்க்கத் துவங்கும். காய்கள் ஆரம்பத்தில் பச்சை நிறத்திலிருக்கும். பின் முற்றி, ஆரஞ்சு கலந்த பழுப்பு நிறத்துக்கு மாறிவிடும். ஒன்றிரண்டு காய்கள் கீழே விழுந்தால் அறுவடைக்குத் தயாராகி விட்டது என்று அர்த்தம். ஒரு மரத்தில் 3 முதல் 4 குலைகள் இருக்கும். ஒரு குலையில் 250 முதல் 300 காய்கள் காய்க்கும். ஒரு மரத்திலிருந்து ஆண்டு-தோறும், ஒன்றரை முதல் இரண்டரை கிலோ வரை பாக்கு கிடைக்கும். சந்தை-யின் தேவைக்கேற்றவாறு பச்சையாகவோ, பாதி உலர்த்தியோ அல்லது முழுவதும் உலர்த்தியோ விற்பனை செய்யலாம்.
-Source: pasumaivikatan

No comments: