Monday

வாழையில் மகசூல் கூட்டும் ஊட்டமேற்றிய தொழுவுரம்

வாழையில் மகசூல் கூட்டும் ஊட்டமேற்றிய தொழுவுரம்

வாழையில மட்டைக்காய்ச்சல், வாடல், இலைப்புள்ளினு ஏகப்பட்ட நோய்கள் தாக்கி, படாதபாடு பட்டுக்கிட்டிருந்தேன். ஆனா, 'ஊட்டம் ஏத்தின தொழுவுரம்' பயன்படுத்த ஆரம்பிச்சதுக்கு அப்பறம் எந்த நோயும் வர்றது இல்லை. ஆறு வருஷமா நிம்மதியா விவசாயம் பார்த்துக்கிட்டிருக்கேன். உண்மையிலேயே இந்தத் தொழுவுரம், விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்தான்'' என்று சிலாகித்து
பேசுகிறார் திருச்சி மாவட்டம், குளித்தலை பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார்.
''எனக்கு 10 ஏக்கர் நிலமிருக்கு. எங்க பகுதியில பெரும்பாலும் வண்டல் மண்தான். ஒரு ஏக்கர் நிலத்துல மட்டும் எப்பவும் நெல் சாகுபடிதான். மீதி 9 ஏக்கர் முழுக்க வாழைதான். வாழையை ஒரு முறை நடவு செஞ்சா... மூணு வருஷம் வரைக்கும் மறு தழைவுக்கு விட்டுடுவேன். மூணு தடவை வாழையில மகசூல் எடுத்த பின்ன, ஒரு போகம் நெல் போட்டுட்டு பசுந்தாள் உர விதைகளை விதைச்சு மடக்கி உழுது, திரும்பவும் வாழை போட்டுடுவேன்.
வாழை சாகுபடியே சவால்தான்!
ஆரம்பத்துல ரசாயன உரம் போட்டுதான் சாகுபடி செய்துட்டு இருந்தேன். யூரியா, பொட்டாஷ், சூப்பர்-பாஸ்பேட், ஜிப்சம்னு வருஷத்துக்கு ஏக்கருக்கு 1 டன் உரம் போட்டுடுவேன். ஆனாலும், திடீர் திடீர்னு ஏதாவது நோய் தாக்கிடும். தார் போடுறப்போ, ஒவ்வொரு மரத்துலயும் 14 மட்டை வரைக்கும் இருந்தாத்தான், தார் நல்ல தரமா திரட்சியா வரும். ஆனா, மட்டைக்காய்ச்சல் நோய் வந்து மட்டையெல்லாம் காய்ஞ்சு போறதால, காய்களும் சூம்பிப் போயிடும். இதைவிட மோசமானது வாடல் நோய். இது வந்தா அவ்வளவுதான்... மொத்த மரமும் காய்ஞ்சி சருகாயிடும். நோய்களோட தொல்லை ஒருபக்கம்னா... கூன்வண்டு, வேர்ப்புழுனு பூச்சித் தொல்லை வேற. என்ன மருந்தடிச்சாலும், இதையெல்லாம் கட்டுப்படுத்தவே முடியாம, வாழை சாகுபடியே சவாலான விஷயமா ஆகிப்போச்சு எனக்கு.
ரசாயனத்தைக் குறைத்தால் நோய்கள் தாக்குவதில்லை!
அப்பறம்தான் இயற்கை விவசாயம் பத்திக் கேள்விப்பட்டு ரசாயனங்களைக் குறைக்க ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல நவதானியங்களை விதைச்சு, மடக்கி உழுது வாழையை நடவு செஞ்சேன். மூணாம் மாசம், அஞ்சாம் மாசம், ஏழாம் மாசம்னு மூணு தடவை உரம் கொடுக்கறது வழக்கம். அதேமாதிரி அந்த வருஷம் ஏக்கருக்கு 750 கிலோ ரசாயன உரத்தோட, 6 டன் தொழுவுரத்தையும் கலந்து, மூணு தடவையா பிரிச்சுக் கொடுத்தேன். அந்த வருசம் ஓரளவுக்கு நோய், பூச்சித் தாக்குதல் குறைஞ்சுது.
தனித்தனியாக இட்டால் நல்ல பலன்!
அடுத்த வருஷம் தொழுவுரத்தையும் ரசாயனத்தையும் ஒண்ணா கலக்காம, தனித்தனியாக்குழி எடுத்து அதுல போட்டேன். அந்த வருஷம் நல்ல மாற்றம் தெரிஞ்சது. பூச்சி, நோய் ரொம்பவே குறைஞ்சுருந்துச்சு. மண்ணுலயும் நிறைய நுண்ணுயிரிக பெருகுச்சு. அப்போதான் தொழுவுரத்தோட அருமையைக் கண்கூடா உணர்ந்தேன்.
ஊட்டம் ஏற்றினால், செலவு குறையும்!
என்கிட்ட 4 மாடுகதான் இருக்கு. அதனால 9 ஏக்கர் வாழைக்கும் போடுற அளவுக்கு தொழுவுரம் கிடைக்காததால... வெளிய விலைக்கு வாங்கித்தான் போட்டேன். அதுக்கு நிறைய செலவாச்சு. அப்போதான் 'தொழுவுரத்தை ஊட்டம் ஏத்திப் போடலாம்’கிற யோசனை தோணுச்சு. அதுக்கு நானே ஒரு முறையையும் கண்டுபிடிச்சேன். அப்படி ஊட்டம் ஏத்திப் பயன்படுத்தினப்போ... நுண்ணுயிரிகள் அதிகமா பெருகி, தொழுவுரத்தோட வீரியம் அதிகமாச்சு. நல்ல பலனும் கிடைச்சது. மண் வளமாகிட்டதால, கொஞ்சம் கொஞ்சமா தொழுவுரத்தோட அளவையும் குறைச்சிக்கிட்டேன்.
இரண்டு முறை உரமிட்டால் போதும்!
சாதாரணமா ரசாயன உரம் போட்டா... ஒரு ஏக்கருக்கு ஒரு டன் போட வேண்டியிருக்கும். அதாவது, ஒரு வாழைக்கு ஒரு கிலோ ரசாயன உரம். இதுக்கு 12 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். இதுவே தொழுவுரம்னா ஏக்கருக்கு 6 டன் தேவைப்படும். ஒரு டன் தொழுவுரம் 400 ரூபாயாகுது. வண்டி வாடகை, நெலத்துல இறைச்சு விடுற கூலி இதையெல்லாம் கணக்குப் போட்டா... ஒரு டன் 750 ரூபாய் வந்துடும். ஆறு டன்னுக்கு 4,500 ரூபாய் ஆகும்.
ஊட்டம் ஏத்தின தொழுவுரம்னா.... 2 டன் மட்டுமே போதுமானதா இருக்கு. இதுக்கான தொழுவுரத்தை வெளியில வாங்கினாகூட, மொத்தச் செலவும் 2,205 ரூபாய்க்குள்ள முடிஞ்சுடும்.
நம்மகிட்டேயே மாடு இருந்தா... 700 ரூபாய்க்கு மேல ஆகாது. ஊட்டம் ஏத்தின தொழுவுரத்தை வருஷத்துக்கு ரெண்டு தடவை... அதாவது, மூணாம் மாசமும் அஞ்சாம் மாசமும் மட்டும் கொடுத்தாலே போதுமானதா இருக்கு.
நடவு செஞ்சு 6 மாசத்துலயே மரத்தோட தூர் நல்லா பெருத்துடுது. இலையில அதிக பச்சை வந்தா... பூச்சி அடிச்சுடும். வெளுப்பா இருந்தா மகசூல் இருக்காது. இப்போ தேவையான அளவுக்கு மட்டும்தான் இலை பச்சை கட்டுது.
இப்போலாம் தார் போடுறப்போ 14 மட்டைக்கு மேல இருக்குது. காயும் நல்லா திரட்சியா காய்க்குது. பூவன் பழத்தார் 21 கிலோ வரை இருக்குது. நாட்டு ரஸ்தாளி 15 கிலோ வரை எடை வருது' என்ற செந்தில்குமார் நிறைவாக, 'இப்போ ஒரு ஏக்கருக்கு 2 டன் ஊட்டம் ஏத்துன தொழுவுரத்தோட, 400 கிலோ ரசாயன உரத்தைப் போட்டுக்கிட்டிருக்கேன்.
அடுத்த வருசம் சுத்தமா ரசாயன உரத்தையே நிறுத்திடலாம்னு இருக்கேன். அப்போ இன்னும் அதிக மகசூல் கிடைக்கும்னு எதிர்பாக்குறேன்'' என்றார் சந்தோஷமாக.
 தொழுவுரத்தை ஊட்டம் ஏற்றுவது எப்படி?
 தொழுவுரத்தை ஊட்டமேற்ற ஒரு முறையைத் தானே வடிவமைத்திருக்கும் செந்தில்குமார், அதைப் பற்றி விவரித்ததை இங்கே தொகுத்திருக்கிறோம்.
'மாடுகளிடமிருந்து நமக்கு தினமும் கிடைக்கின்ற ஈர சாணத்தை, நிழல்பாங்கான இடத்தில் பரப்பி, 3 மாதங்கள் வரை உலர்த்த வேண்டும். பிறகு, 10 கிலோ நாட்டு மாட்டுச் சாணம், 3 கிலோ கடலைப் பிண்ணாக்கு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, தேவைப்படும் அளவு தண்ணீர் கலந்து, இரண்டு நாட்கள் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு... 3 லிட்டர் பால், 3 லிட்டர் தயிர், 5 லிட்டர் மாட்டுச் சிறுநீர், 20 அழுகிய வாழைப்பழங்கள் ஆகியவற்றைக் கலந்து, மண்பானையில் இட்டு துணியால் வேடு கட்டி வைத்து, தினமும் காலை, மாலை கலக்கிவிட வேண்டும். 10 நாட்களுக்குப் பிறகு, இந்தக் கரைசலை, 150 லிட்டர் தண்ணீரில் கலந்தால்... இதுதான் ஊட்டமேற்றும் கரைசல்.
ஏற்கெனவே நாம் உலர்த்தி வைத்திருக்கும் சாணத்தை, ஒரு மண்வெட்டியால் கிளறிக்கொண்டே அதனுள் இந்த ஊட்டமேற்றும் கரைசலை ஊற்றவேண்டும். பிறகு, புட்டு பதத்துக்கு வரும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து பிசைந்து, இரண்டு பங்காக பிரித்து குவித்து, வைக்கோல் அல்லது ஈரச்சாக்கைப் போட்டு மூடி வைக்க வேண்டும். அதிலிருந்து 20-ம் நாள் மற்றும் 40-ம் நாட்களிலும் இதேபோல ஊட்டமேற்றும் கரைசலைத் தயார் செய்து, ஏற்கெனவே உருட்டி வைத்துள்ள இரண்டு உருண்டைகளையும் உடைத்து, அதில் இந்தக் கரைசலை ஊற்றி, ஏற்கெனவே செய்ததுபோல புரட்டி எடுத்து, திரும்பவும் ஒன்றாகச் சேர்த்து, ஈரச்சாக்கைப் போட்டு 50 நாட்கள் வரை மூடி வைக்க வேண்டும். அதன்பிறகு, 'பொலபொல’வென ஆகிவிடும். அதை எடுத்து வயலுக்குப் பயன்படுத்தலாம்.'

'வளம் தரும் தென்னைநார்க் கழிவு!'
'மாதம் 1 லட்சம்... நிறைவேறிய இயற்கை சபதம்!’ என்ற தலைப்பில் கடந்த 25.9.11-ம் தேதியிட்ட இதழில் கட்டுரை வெளியாகியிருந்தது. திருச்சி, உத்தமர்சீலி கிராமத்தில், வாழை சாகுபடிக்கு ஏற்றதாக இல்லாதிருந்த தன்னுடைய நிலத்து மண்ணை, தென்னைநார்க் கழிவு கொண்டு, வளமான மண்ணாக மாற்றி, வாழை சாகுபடியில் சாதித்துக் கொண்டிருக்கும் ரஃபீக் பற்றி அதில் எழுதியிருந்தோம்.
கட்டுரை வெளியான பிறகு, அவரைத் தொடர்பு கொண்ட விவசாயிகள், அவருடைய சாகுபடித் தொழில்நுட்பங்கள் பற்றிக் கேட்டறிந்ததோடு, ''நிலத்தில் எவ்வளவு தென்னை நார்க்கழிவு  கொட்ட வேண்டும்?'’ என்பதையும் கேட்டிருக்கிறார்கள். இதைப் பற்றி நம்மிடம் பேசிய ரஃபீக், 'அந்தக் கட்டுரையில் இந்த விஷயம் விடுபட்டு போய்விட்டது. அதனால்தான் எல்லோருமே அதை என்னிடம் கேட்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் விளக்கமாக அதை சொல்லி வருகிறேன்'' என்றார்.
மற்றவர்களும் தெரிந்து கொள்வதற்காக, இங்கே இடம் பெறுகிறது அந்தத் தொழில்நுட்பம்-
'ஒரு ஏக்கர் நிலத்தை நன்றாக உழுது, பத்து டிராக்டர் தொழுவுரம் அடித்துப் பரப்பி, இன்னொரு உழவு ஓட்ட வேண்டும். பிறகு, மண்ணுக்கு மேல் நான்கு அங்குல உயரத்துக்கு தென்னை நார்க்கழிவைக் கொட்டிப் பரப்ப வேண்டும். பிறகு, வரிசைக்கு வரிசை 8 அடி, மரத்துக்கு மரம் 5 அடி இடைவெளி என்கிற அளவில் குழிகள் எடுத்து நாட்டு ரக வாழைகளை நடவு செய்ய வேண்டும் (ரஸ்தாளி, மொந்தன், பூவன், கற்பூரவல்லி, ஏழரசி...போன்ற நாட்டு ரக வாழைகளைத்தான் நடவு செய்திருக்கிறார் ரஃபீக்).
  படங்கள்: ஜெ. வேங்கடராஜ்

1 comment:

Unknown said...

hi anna i need some details from u pls update your phone number