Wednesday

மக்காச் சோளத்தின் மகசூல் பேரணி !

ஏக்கருக்கு 40 குவிண்டால்....
சொட்டுநீர் + இயற்கைக் கூட்டணி... மக்காச் சோளத்தின் மகசூல் பேரணி !
ஜி.பழனிச்சாமி

பாத்தி பிடிக்க தேவையில்லை.

வளர்ச்சியைக் கூட்டும் பஞ்சகவ்யா.
ரசாயனத்தில் 30 குவிண்டால்.
இயற்கையில் 40 குவிண்டால்.

இறவைப் பாசனம் மற்றும் மானாவாரி இரண்டுக்குமே ஏற்றது; அதிக தண்ணீர் மற்றும் பராமரிப்பு தேவையே இல்லை; குறுகிய காலத்தில் மகசூல்; ஓரளவுக்குக் கட்டுபடியான விலை; வில்லங்கமில்லாத விற்பனை என்பது போன்ற பல காரணங்களால், மக்காச்சோளம் பயிரிடுவதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வழக்கமான முறையில் சாகுபடி செய்து, மகசூல் கண்டுவரும் விவசாயிகளுக்கு மத்தியில், விவசாயத்தோடு சொட்டுநீர்ப் பாசனத்தையும் இணைத்து மக்காச்சோளத்தில் கூடுதல் மகசூல் எடுத்திருக்கிறார், கோயம்புத்தூர் மாவட்டம், ஜே. கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த . கோவிந்தராசன்!

மக்காச்சோள அறுவடை தீவிரமாக நடந்து கொண்டிருந்த வேளையில்தான்... கோவிந்தராசன் வயலுக்கு நாம் சென்றோம். அன்போடு வரவேற்றவர் படபடவென பேச ஆரம்பித்துவிட்டார்.
''பரம்பிக்குளம்-ஆழியாறுப் பாசனத் திட்டம் (பி..பி.) மூலமா, ஒரு போகம் விட்டு... ஒரு போகம் பாசனம் கிடைக்கற பகுதி இது. அதாவது, வருஷத்துல நாலு மாசம் மட்டும்தான் தண்ணி கிடைக்கும். அதுவும் ஒரு வாரம் விட்டு ஒரு வாரம்தான்.  இப்படி குறைஞ்ச அளவு நீராதாரத்தை வெச்சு நெல், கரும்பு, மஞ்சள் மாதிரியான நீண்டநாள் பயிருங்கள சாகுபடி செய்ய முடியாது. நிலக்கடலை, மக்காச்சோளம்னு குறுகியகாலப் பயிருங்கதான் சரிப்பட்டு வரும். ரொம்ப காலமா இதன்படிதான் இங்க சாகுபடி நடக்குது. இடையில நல்ல விலை கிடைக்க ஆரம்பிச்சதால... மக்காச்சோளம் மட்டும் முக்கிய வெள்ளாமையா மாறிடுச்சு.

உற்பத்திச் செலவு ரொம்ப குறைச்சல், அதிக உரம், பூச்சிமருந்து தேவைப்படாது, நிறைவான மகசூல், ஒரளவு கட்டுப்படியான விலையும் கிடைக்கறதால என்னை மாதிரி கிணத்துப் பாசனம் செய்ற விவசாயிகளும் இப்ப மக்காச்சோளத்தை அதிகம் பயிரிட ஆரம்பிச்சுருக்காங்க.
சமச்சீர் உரமேலாண்மை முறையில (இயற்கை, ரசாயனம் இரண்டும் கலந்தது) மூணு ஏக்கரும், சொட்டுநீர்ப் பாசனத்தோட முழுக்க இயற்கை முறையில ஒரு ஏக்கரும் சாகுபடி செஞ்சிருக்கேன். வழக்கமா... கொஞ்ச இடத்துல சொட்டுநீர்ப் பாசனத்துல காய்கறி சாகுபடி செய்வேன். கடைசியா, வெங்காயம் போட்டு அறுவடையை முடிச்ச வயல்ல சொட்டுநீர்க் குழாய் அப்படியே கிடந்துச்சு. அந்த ஒரு ஏக்கர்ல மக்காச்சோளத்தை நடவு செஞ்சி பார்ப்போம்னு முயற்சி பண்ணினேன். விளைஞ்சிருக்கறத பார்த்தா... வாய்க்கால் பாசனத்தை விட கூடுதல் மகசூல் கிடைக்கும்னுதான் தோணுது'' என இயற்கை மற்றும் சொட்டுநீர் கூட்டணி மகிமை பேசிய கோவிந்தராசன்,
''அறுவடை முடிஞ்ச பிறகு மகசூல் கணக்கைப் போட்டுச் சொல்றேன். அதுக்கு முன்ன என்னோட சாகுபடி தொழில்நுட்பங்களைச் சொல்லிடறேன்'' என்றபடி சொல்லத் தொடங்கினார், 'சொட்டுநீர்ப் பாசனத்தில் இயற்கை முறையில் மக்காச்சோள சாகுபடி' எனும் பாடத்தை..!
ஏக்கருக்கு 8 கிலோ விதை!
மக்காச்சோளத்தின் வயது 110 நாட்கள். வடிகால் வசதி உள்ள அனைத்து வகை மண்ணிலும் இது வளரும். இறவையில் வருடம் முழுவதும் சாகுபடி செய்யலாம். சாகுபடி நிலத்தை இரண்டு முறை உழவு செய்து, 5 டிராக்டர் அளவு கோழி எருவைக் கொட்டி இறைத்து, மீண்டும் ஒரு உழவு செய்து, நிலத்தை நன்றாக ஆறபோட வேண்டும்.
சொட்டுநீர்ப் பாசனத்தில் சாகுபடி செய்யும்போது பார் மற்றும் வரப்பு எடுக்கத் தேவையில்லை. உழவு ஓட்டிய வயலில் அப்படியே நடவு செய்யலாம். ஏக்கருக்கு 8 கிலோ விதைகள் தேவைப்படும். செடிக்குச் செடி ஒரு அடியும், வரிசைக்கு வரிசை ஒரு அடியும் இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும். ஒன்றரை அடி  லேடரல் குழாய்களை (ஒன்றரை அடி இடைவெளியில் தண்ணீர் சொட்டுவது போல் அமைக்கப்பட்ட குழாய்) அமைக்க வேண்டும். வரிசைக்கு வரிசை 3 அடி இடைவெளியில் இந்தக் குழாய்களை அமைத்தால் போதும்.
அடிச்சாம்பலை விரட்டும் பஞ்சகவ்யா!
நடவு செய்த பிறகு, ஈரத்தைப் பொறுத்து வாரம் இருமுறை பாசனம் செய்ய வேண்டும். மொத்த சாகுபடி காலத்தில் அதிகபட்சம் 40 முறை பாசனம் செய்யலாம். விதைத்த 6-ம் நாள் முளை விடும். வழக்கமான முறையில் 15-ம் நாளில் களை எடுக்க வேண்டும். சொட்டுநீர்ப் பாசன முறையில் பயிருக்கு மட்டுமே பாசனம் நடைபெறுவதால், மற்ற இடங்களில் களை வரும் வாய்ப்பு குறைவு. 15-ம் நாளில், வடிகட்டிய பஞ்சகவ்யா 200 லிட்டரை பாசனநீர் வழியாக கொடுக்க வேண்டும். ஏற்கெனவே வயலில் கொட்டிய கோழி எருவின் சத்துக்களை எடுத்து செடிகளுக்குக் கொடுக்கும் வேலையைச் செய்வதுடன், பயிர் வளர்வதற்குத் தேவையான கூடுதல் தழைச்சத்தையும் பஞ்சகவ்யா கொடுக்கும். 40-ம் நாளில் ஆள் உயரத்துக்கு வளர்ந்து பூக்களோடு பயிர் நிற்கும். அந்தத் தருணத்தில் மீண்டும் ஒரு முறை 200 லிட்டர் பஞ்சகவ்யாவைப் பாசன நீருடன் கொடுத்தால், பக்கவாட்டில் தோன்றும் கதிர்கள், விரைவான வளர்ச்சி அடைவதுடன், அடிச் சாம்பல் நோயும் தாக்காது!
110 நாளில் அறுவடை!
60 மற்றும் 70-ம் நாட்களில் கதிர்கள் ஒரே சீராக வளரத் தொடங்கும். 100-ம் நாளில் கதிர்களை உரித்துப் பார்த்தால், சிவப்பு நிறத்தில், வரிசை கட்டிய தங்கப் பற்கள் போன்று மணிகள் காணப்படும். அறுவடைக்கு 10 நாட்களுக்கு முன்பாகவே பாசனத்தை நிறுத்தி விடவேண்டும். 110-ம் நாளில் தட்டைகள் காய்ந்து நிற்கும். ஆட்களை விட்டு, கதிர்களை மட்டும் ஒடித்து எடுக்க வேண்டும். களத்துமேட்டில் குவித்து, கதிரடிக்கும் இயந்திரம் மூலமாக மணிகளைப் பிரித்துக் கொள்ளலாம்.
சொட்டுநீர் 8 லட்சம்...வாய்க்கால் பாசனம் 18 லட்சம்!
ஒரு ஏக்கருக்கு, சொட்டுநீர்ப் பாசனத்தில் ஒரு முறை பாசனம் செய்ய, 20 ஆயிரம் லிட்டர் நீர் தேவைப்படும். மொத்த சாகுபடி காலமான 110 நாட்களுக்கும் கணக்கிட்டால்... 8 லட்சம் லிட்டர். ஆனால், வாய்க்கால் பாசனத்தில் 18 லட்சம் லிட்டர் வரை நீர் கொடுக்கப்படுகிறது. எனவே, நீர்ப் பற்றாக்குறை உள்ள விவசாயிகளுக்கு சொட்டுநீர்ப் பாசனம் ஒரு வரப்பிரசாதமே! அறுவடை முடிந்த சோளத்தட்டைகளை வெட்டி எடுத்து, மாட்டுத் தீவனத்துக்காகச் சேமித்துக் கொள்ளலாம்'

சாகுபடி பாடம் முடித்த கோவிந்தராசன், ''அறுவடையான மக்காச்சோளத்தை வயலுக்கே வந்து எடை போட்டு வாங்கிக்க நிறைய வியாபாரி கள் இருக்கறாங்க. ஆனாலும், பக்கத்துல இருக்கற ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்குக் கொண்டு போறதுதான் நல்லது.
கட்டுப்படியான விலை கிடைக்கிற வரைக்கும் அங்கேயே இருப்பு வெச்சுக்கலாம். அதோட மதிப்புக்கு ஏத்த மாதிரி, அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும் பொருளீட்டுக் கடன் கொடுக்கறாங்க. அதை வாங்கி, அடுத்தக் கட்ட சாகுபடி உள்ளிட்ட எல்லாச் செலவுகளுக்கும் பயன்படுத்திக் கலாம். இருப்பு வெச்சுருக்கற மக்காச்சோளத்துக்கு நல்ல விலை கிடைக்குறப்ப வித்துட்டு, கடனை அடைச்சுடலாம்.
இப்ப, ஒரு குவிண்டால் மக்காச்சோளம் 900 முதல் 1,000 ரூபாய் வரை விற்பனையாகுது. இது ஓரளவு கட்டுபடியாகுற விலைதான். இதே விலை தொடர்ந்து கிடைச்சா, குறைந்த செலவுல, நிறைஞ்ச லாபம் கொடுக்குற மக்காச்சோளத்துக்கு மகுடம் சூட்டி கொண்டாடுவாங்க விவசாயிங்க'' என்று மலர்ந்த முகத்துடன் சொன்னவர், மகசூல் கணக்கை நாலு நாள் கழிச்சி சொல்றேன்'' என்றபடியே விடை கொடுத்தார்.
அதன்படியே தொடர்பு கொண்டவர், ''ஒரு ஏக்கர்ல 40 குவிண்டால் மகசூல் கிடைச்சிருக்கு.  வழக்கமான முறையில் சாகுபடி செய்தா 30 குவிண்டால்தான் கிடைக்கும். இயற்கை முறை, சொட்டுநீர்ப் பாசனம் அப்புறம் பாத்தி, வாய்க்கால் எதுவும் இல்லாததுனு நிறைய அனுகூலங்கள் இருந்ததால, 10 குவிண்டால் வரை கூடுதல் மகசூல் கிடைச்சுருக்கு. அதேசமயம், செலவோ குறைஞ்சிருக்கு'' என்றார் மகிழ்ச்சியுடன்!
கூடும் செலவு, குறையும் குவிண்டால்!
இயற்கை உரம் மற்றும் ரசாயன உரம் இரண்டையும் கலந்து செய்யப்படும் சமச்சீர் உரமேலாண்மை முறைப்படி, வாய்க்கால் பாசனத்தில் 3 ஏக்கர் மக்காச்சோளம் தனியாக சாகுபடி செய்துள்ளார் கோவிந்தராஜன். அதன் தொழில்நுட்பங்கள் இங்கே இடம் பிடிக்கின்றன-
'உழவு செய்து, பார் கலப்பை மூலம் பார் பாத்தி அமைத்து, விதைகளை நடவு செய்யவேண்டும். பாத்தியில் உள்ள பாரின் அளவு ஒன்றே கால் அடி இருக்க வேண்டும். ஏக்கருக்கு 7 கிலோ விதைகள் தேவைப்படும்.
பாரின் இரு சரிவிலும் ஒரு அடி இடைவெளியில் விதையை ஊன்ற வேண்டும். பின்னர், பார் வரப்பு முழுவதும் நனையும்படி தண்ணீர்ப் பாசனம் செய்ய வேண்டும். பிறகு, வாரம் ஒரு தண்ணீர் கொடுத்தால் போதும். 15-ம் நாளில் களை எடுத்து, 50 கிலோ தழைச்சத்து உரமான யூரியாவை ஏகமாக வயல் முழுவதும் இறைத்துவிட வேண்டும். இந்த யூரியா கோழி எருவில் உள்ள சத்துக்களை விரைவாக செடிகளுக்கு எடுத்துக் கொடுக்க உதவும்..  40-நாளில் 50 கிலோ யூரியாவை  கொடுக்க வேண்டும். 110-ம் நாள்... அறுவடைதான்!
ரசாயன முறையில் ஏக்கருக்கு 19 ஆயிரம் செலவு செய்து,
30 குவிண்டால் மகசூல் கிடைத்தது. அதேசமயம், சொட்டுநீர்ப் பாசனத்தில் இயற்கை முறையில் சாகுபடி செய்தபோது, ஏக்கருக்கு 14 ஆயிரம் ரூபாய்தான் செலவானது. மகசூலோ... 40 குவிண்டால் கிடைத்தது.
வாய்க்கால் பாசனத்தைவிட, சொட்டுநீர்ப் பாசனத்தில் வேலையும் குறைவு. ஆக, குறைந்த செலவு மற்றும் உழைப்பிலேயே பலமான வருமானம் என்பது என் அனுபவ உண்மை! வரும் காலத்தில் அனைத்து இடத்திலும் சொட்டுநீர்ப் பாசனத்தில் முழுக்க இயற்கை விவசாயம் தான்'' என்றார் மகிழ்ச்சியாக.
 

 படங்கள்:தி. விஜய்

தொடர்புக்கு, .கோவிந்தராசன்
அலைபேசி: 94438-90954

Source: Pasumaivikatan

No comments: