Friday

9 ஏக்கர்...8 லட்சம்....

9 ஏக்கர்...8 லட்சம்.... 
உலகுக்கே பாடம் சொல்லும் ஒருங்கிணந்த பண்ணை ! 

விவசாயம்+ ஆடு, மாடு, 

கோழி, மற்றும் மீன் வளர்ப்பு.
பால் நேரடி விற்பனை.  
மதிப்புக்கூட்டி விற்பதால் கூடுதல் வருமானம்.

''நெல் விவசாயமும் கால்நடை வளர்ப்பும் கணவன்-மனைவி மாதிரி. இதுல ஏதாவது ஒண்ணு இல்லைனாலும்...
இன்னொன்னு சிறப்பா இருக்காது. அதுலயும் கால்நடைகள் வளர்த்தாதான், செலவே இல்லாம, இயற்கை முறையில வெற்றிகரமா நெல் சாகுபடி செய்ய முடியும்.
இயற்கை முறையில நெல் சாகுபடி செஞ்சாதான், செலவே இல்லாம, ஆரோக்கியமா கால்நடைகளை வளர்த்து லாபம் பார்க்க முடியும்'' என்று ஒன்றுக்குள் ஒன்று பின்னி பிணைந்து கிடப்பதை, அழகாக சுட்டிக்காட்டும் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள நைனான்குளம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன், வாய் வார்த்தையாக மட்டுமல்லாமல், அதை நடைமுறையிலும் செயல்படுத்தி வெற்றிக் கொடி நாட்டி வருகிறார்!
மொத்தம் 9 ஏக்கரில் இருக்கிறது அவருடைய பண்ணை. 40 மாடு, 10 ஆடு, 50 கோழி, அரை ஏக்கரில் மீன் குளம், 5 ஏக்கரில் நெல் விவசாயம், 2 ஏக்கரில் தீவனப் புல், கால் ஏக்கரில் கழிவுநீர் குட்டை, பண்ணையைச் சுற்றியும் நொச்சி, ஆடாதொடை போன்ற தாவரங்களால் அமைக்கப்பட்ட வேலி என ஓர் இயற்கை வேளாண்மைக் கல்விக் கூடமாகவும் காட்சியளிக்கிறது அந்தப் பண்ணை!
''கடந்த 30 வருஷமா கால்நடைகள் வளர்க்கறதோட நெல் விவசாயத்தையும் இணைச்சு செய்றேன். ரெண்டு மாடு, ரெண்டு ஆடு, நாலஞ்சு கோழிகளைத்தான் ஆரம்பத்துல வளர்த்தேன். அதிலிருந்து பெருகினதுதான் இப்ப இருக்கற 40 மாடு, 10 ஆடு, 50 கோழிக...'' என்று எடுத்ததுமே பெருமை பொங்க ஆரம்பித்த வெங்கட்ராமன், அந்த உற்சாகத்தோடே தொடர்ந்தார்.
''இந்த எட்டு வருஷமாதான் இயற்கை விவசாயம் செஞ்சுக்கிட்டு இருக்கேன். ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் முழுமையா தவிர்த்ததுனால, வயல் முழுக்கவே மண்புழுக்கள் நிறைஞ்சிருக்கு. இங்க நிறைய தவளைகள் வருது. பயிரோட அடிப்பகுதியில பூச்சிகள் வந்தா, உடனே பிடிச்சி சாப்பிட்டுடுது.  
கொக்கு பறபற!
இங்க கொக்குகளும் நிறைய வரும். பயிரோட நடுப்பகுதியிலயும், மேற்பகுதியிலயும் தீமை செய்யும் பூச்சிகள் இருந்தா, உடனே பிடிச்சிடும். இதனால நெற்பயிர்ல கொஞ்சம்கூட பூச்சித் தாக்குதலே ஏற்படுறது இல்லை. இதைவிட இன்னொரு ஆச்சரியம்... மாட்டைக் கடிக்கிற பேன், ஈக்களை எல்லாம்கூட இந்த கொக்குகள் பிடிச்சுடுது.
மாடுகளோட காதுக்குள்ள உட்கார்ந்திருக்கிற உன்னிகளை நம்மால எடுக்க முடியாது. மாடுகளுக்கு இது பெரிய தொந்தரவா இருக்கும். பலவிதமான நோய்களும் உருவாகும். இது ஒரு தீர்க்க முடியாத பிரச்னை. ஆனா, கொக்குகள், மெதுவா தன் அலகால, மாடுகளோட காதுக்குள்ள உள்ள உன்னிகளை எல்லாம் வெளியில எடுத்து சாப்பிட்டுடுது. , பேன், உன்னி இல்லாம இருந்தாலே மாடுகள் ஆரோக்கியமா வளரும்.
இயற்கை விவசாயத்தால இதுமாதிரி இன்னும் பல வகைகள்ல கால்நடைகள் பயனடையுது'' என்று அங்குலம் அங்குலமாக விவரித்தார்.
தொடர்ந்து பேசியவர், ''இதுக்கு முன்னாடி ரசாயன உரமும், பூச்சிக்கொல்லியும் போட்டு விளைஞ்ச நெல்லோட தவிடையும், வைக்கோலையும் மாடுகளுக்குக் கொடுத்தப்ப, அடிக்கடி மடிவீக்க நோய் வந்து  ரொம்பவே சிரமப்படும்; பால் உற்பத்தியும் குறையும். இதுமாதிரி இன்னும் பல பிரச்னைகள் இருந்துச்சு. குறிப்பா, சரியான பருவத்துல சினை பிடிக்காது. இப்ப  இயற்கை முறையில விளைஞ்ச நெல்லோட தவிடையும், வைக்கோலையும் கொடுக்கறதுனால, அது மாதிரி எந்த பிரச்னையுமே இல்லை.

40 மாடு வெச்சிருந்தாலும் வயலுக்கு அடியுரமா தொழுவுரத்தைக்கூட போடுறதில்லை. மாட்டுச் சாணத்துல ஒரு சிறு பகுதியை மட்டும் பஞ்சகவ்யா தயாரிக்கவும், மீன் குட்டைக்காகவும் எடுத்துக்கிட்டு, மீதியை வெளியில விலைக்குக் கொடுத்துடறேன். மாட்டுக் கொட்ட கையைக் கழுவி விடுற தண்ணியை மட்டும் நெல் வயலுக்கும், தீவனப் புல்லுக்கும், மீன் குட்டைக்கும் பயன்படுத்திக்கிறேன். மேடான நிலத்துல சுமார் கால் ஏக்கர்ல சுற்றியும் வரப்பு அமைச்சு, கழிவுநீர்க் குட்டையை உருவாக்கி இருக்கேன். மாட்டுக் கொட்டகையிலிருந்து தினமும் வர்ற கழிவுநீர், இந்தக் குட்டையில் சேகரமாயிடும். போர்செட் தண்ணி இந்த குட்டையில் விழுந்து, கழிவு நீரோடு கலந்துதான் பயிர்களுக்கும், மீன்குளத்துக்கும் பாயும். இதுவே பயிருக்குத் தேவையான ஊட்டத்தைக் கொடுத்துடுது.
அரிசி தருகிறது 3.6 லட்ச ரூபாய்!

சாதாரண நடவு முறையில குறுவை, சம்பானு ரெண்டு போகமும் நெல் சாகுபடி செய்றேன். ஏக்கருக்கு சராசரியா 2 ஆயிரம் கிலோ நெல் மகசூல் கிடைக்குது. நெல்லா விற்பனை செய்யாம, மதிப்புக்கூட்டி அரிசியா மாத்தி விற்பனை செய்றேன். இதிலிருந்து 1,200 கிலோ அரிசி, 800 கிலோ தவிடு கிடைக்குது. இந்தத் தவிடை கால்நடைகளுக்குத் தீவனமாப் பயன்படுத்திக்கிறேன்.  தீவனச் செலவு மிச்சமாகறதோட, நெல்லா விக்கறதால கிடைக்கறதவிட கூடுதல் வருமானமும் வருது. மொத்தம் 5 ஏக்கர்ல இருந்து 6,000 கிலோ அரிசி கிடைக்கும். கிலோ 30 ரூபாய் வீதம், 1 லட்சத்தி 80 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். ரெண்டு போகம் மூலமா வருஷத்துக்கு 3 லட்சத்தி 60 ஆயிரம் கிடைக்கும்.
பால் பொங்குகிறது 5.76 லட்ச ரூபாய்க்கு!
என்கிட்ட முரா இனத்தைச் சேர்ந்த 20 எருமைகளும்,  தார்பார்க்கர், சாஹிவால், ஜெர்சி, ஹோல்ஸ்டையன் பிரிசீஸியன் இனங்களைச் சேர்ந்த 20 பசுக்களும் இருக்கு. சுழற்சி முறையில 6 எருமை மாடுகள்ல இருந்து தினமும் 40 லிட்டரும், 4 பசு மாடுக மூலமா தினமும் 20 லிட்டரும் பால் கிடைக்குது. இதுல கொஞ்சம்கூட தண்ணி கலக்காம நானே நேரடியா வீடுகளுக்கும், டீக்கடைகளுக்கும் வித்துடுவேன். எருமைப் பால் ஒரு லிட்டர் 30 ரூபாய், பசும்பால் 20 ரூபாய்னு விக்கிறதால பாலுக்கு நல்ல விலை கிடைக்குது. பால் விற்பனை மூலமா வருஷத்துக்கு 5 லட்சத்தி 76 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைக்குது.
வருஷத்துக்கு 100 டன் மாட்டுச் சாணத்தை வித்துடுவேன். ஒரு டன் மக்கிய சாணம் 600 ரூபாய்னு விற்பனை செய்றது மூலமா வருஷத்துக்கு 60 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைக்குது. பசுஞ்சாணம், மாட்டுச் சிறுநீரைப் பயன்படுத்தி பஞ்சகவ்யாவும் தயாரிச்சு, ஒரு லிட்டர் 50 ரூபாய்னு, வருஷத்துக்கு 500 லிட்டர் விற்பனை செய்றேன். இது மூலமா 25 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைக்குது.
ஆடு http://www.vikatan.com/images/rupee_symbol.png 24 ஆயிரம்; கோழி http://www.vikatan.com/images/rupee_symbol.png 54 ஆயிரம்; மீன் http://www.vikatan.com/images/rupee_symbol.png 80 ஆயிரம்!
பள்ளை இனத்தைச் சேர்ந்த 10 நாட்டு ஆடுகளும் வளர்க்கிறேன். இதுல 8 பெட்டை, 2 கிடாய். மூலமா வருஷத்துக்கு சுமார் 12 குட்டிகள் கிடைக்குது.  குட்டிகளை 6 மாசம் வளர்த்து விற்பனை செய்வேன். ஒரு ஆடு 1,500 ரூபாய்னு வருஷத்துக்கு 12 ஆடுகளை விற்பனை செய்றது மூலமா 24 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைக்குது.
47 நாட்டுக் கோழிகளும், 3 சேவலும் வளர்க்கிறேன். தீவனச் செலவுனு எதுவுமே செய்றதில்லை. நிலத்துல இருக்கற புழு, பூச்சிகளையும், மாட்டுக்கொட்டகையில சிதறிக்கிடக்கற அடர் தீவனத்தையும் மட்டுமே சாப்பிட்டு வளருது. இந்தக் கோழிக மூலமா வருஷத்துக்கு சுமார் 1,000 முட்டைகளுக்கு மேல கிடைக்கும். இதுல, 500 முட்டையை தலா 4 ரூபாய் வீதம் வித்துடுவேன். இதன் மூலமா 2,000 ரூபாய் வருவாய் கிடைக்கும். மீதமுள்ள முட்டைகள பொறிக்க வெச்சு, வருஷத்துக்கு 300 குஞ்சுகள எடுத்துடுவேன். இந்தக் குஞ்சுகளை மூணு மாசம் வளர்த்து சுமார் ஒரு கிலோ எடை வந்ததும் ஒரு கோழியை சுமார் 180 ரூபாய்க்கு விற்பனை செய்வேன். இதன் மூலம் வருஷத்துக்கு 54 ஆயிரம் ரூபாய் கிடைக்குது.
மீன் குளத்தில் இருந்து வருஷத்துக்கு ஆயிரம் கிலோ மீன் கிடைக்குது. கிலோ சராசரியா 80 ரூபாய் வீதம் வருஷத்துக்கு 80 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைக்குது. ஒட்டுமொத்தமா 9 ஏக்கர்ல இருந்து எட்டரை லட்ச ரூபாய் வரைக்கும் கிடைக்கும்'' என்று மனநிறைவோடு பேசியவர், ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பது தொடர்பாக மேற்கொண்டும் தகவல்களைப் பகிர்ந்தார். அவை பெட்டிச் செய்தியில் இடம்பிடித்துள்ளன!
செலவைக் குறைத்து செழிப்பாக்கும் கழிவுநீர்க் குட்டை !

ஒரு ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய 10 சென்டில் நாற்றங்கால் அமைத்து விதைகளைத் தூவ வேண்டும். 2 லிட்டர் பஞ்சகவ்யாவுடன் 60 லிட்டர் தண்ணீரைக் கலந்து 7 மற்றும் 15-ம் நாள் தெளிக்க வேண்டும். இப்படிச் செய்வதால் நாற்று செழிப்பாக வளரும். விதைத்ததில் இருந்து அதிகபட்சம் 25-ம் நாளுக்குள் நாற்றுகளைப் பறித்து வயலில் நடவு செய்துவிட வேண்டும். நடவிலிருந்து 30-ம் நாள் நாலரை லிட்டர் பஞ்சகவ்யாவுடன் 180 லிட்டர் தண்ணீரைக் கலந்து தெளிக்க வேண்டும். கழிவுநீர் குட்டை மூலம் பாசனம் செய்தால், இதன் பிறகு வேறு எந்த ஒரு இயற்கை இடுபொருட்களுமே கொடுக்கத் தேவையில்லை. மூலிகைப்பூச்சி விரட்டிகூட தேவைப்படாது. வாரம் ஒரு முறை கழிவுநீர்க் குட்டை வழியாக வயலுக்கு நீர் பாய்ச்சுவதால் விளைச்சல் செழிப்பாக இருக்கும்.
செலவில்லாம வளருது ஆடு, கோழி !
ஆடு, மாடுகளை தினமும் 5 மணிநேரம் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அப்போதுதான் அவை ஆரோக்கியமாக இருப்பதுடன், தீவனச் செலவும் குறையும். மேய்ச்சல் மூலம் போதுமான புல் கிடைக்காத நாட்களில் மட்டும் வைக்கோல், தீவனப்புல் எனக் கொடுக்கலாம். 30% அரிசித் தவிடு, 20% பிண்ணாக்கு, 30% சோள குருணை, 10% பாசிப்பருப்பு உமி, 10% உளுத்தம் பருப்பு உமி ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, லேசாக ஈரம் இருக்கும் அளவுக்கு மட்டும் தண்ணீர் கலந்து புட்டு பக்குவத்தில் தரமான அடர் தீவனம் தயாரிக்க வேண்டும்.
ஒரு மாட்டுக்கு தினமும் காலை ஒண்ணே கால் கிலோ, மாலை ஒண்ணே கால் கிலோ என்ற கணக்கில் கொடுக்க வேண்டும். ஆடுகளுக்கு தனியாக தீவனம் எதுவும் தேவையில்லை. அதேபோல கோழிகளுக்கும் தனியாகத் தீவனம் கொடுக்க தேவையில்லை. குப்பை, கூளங்களையும், சிந்தி, சிதறிய தீவனங்களையுமே தின்று அவை வளர்ந்து விடும்.
அரை ஏக்கரில் மீன் குளம்!
அரை ஏக்கரில் 4 அடி ஆழம் கொண்ட குளத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். குளத்தில் நீரை நிரப்பி, தேவையான மீன்குஞ்சுகளை வாங்கிவிட வேண்டும் (இவர் கெண்டைமீன் மட்டுமே வளர்க்கிறார்). வாரம் ஒருமுறை 60 கிலோ பசுஞ்சாணத்தைக் குளத்தில் கரைத்து விடவேண்டும். நான்கு நாட்களுக்கு ஒரு முறை கழிவுநீர்க் குட்டை வழியாக தண்ணீர் விடவேண்டும். மற்றபடி தனியாக எந்தப் பராமரிப்பும் தேவையில்லை.
''வெங்கட்ராமன் வயலுக்கு பூச்சியே வர்றதில்ல!''

பட்டுக்கோட்டையில் வசிக்கும் ஒய்வுபெற்ற வேளாண் அலுவலர் வீரப்பன் பேசும்போது, ''இது கடைமடைப்பகுதி. தாமதமா காவிரி தண்ணீர் வந்து சேர்றதுனால பருவம் தவறித்தான் இங்க நெல் சாகுபடி செய்றாங்க. இதனால புகையான், நெற்பழ நோய், இலைப்புள்ளி நோய், குலை நோய்னு விவசாயிகளுக்கு ஏகப்பட்ட பாதிப்பு. ஆனா, வெங்கட்ராமன் இயற்கை விவசாயம் செய்றதால அவர் வயல்ல மட்டும் எந்த பாதிப்புமே ஏற்படுறதில்ல'' என்று காரண காரியங்களை எடுத்து வைத்துப் பேசினார்.
 தொடர்புக்கு, வெங்கட்ராமன், 

அலைபேசி: 99431-88778.
படங்கள் : கே.குணசீலன்
Source: pasumaivikatan


No comments: