Sunday

கரிசலில் காய்த்துக் குலுங்கும் நெல்லி ! 16 ஏக்கரில் ஆண்டுக்கு 10 லட்சம்...

கரிசலில் காய்த்துக் குலுங்கும் நெல்லி !
16 ஏக்கரில் ஆண்டுக்கு 10 லட்சம்...
ஒரு காலத்தில்... 'விவசாயத்துக்கே லாயக்கில்லை’ என பலரும் ஒதுக்கியதால், கரும்போர்வைக்குள் துக்கம் அனுஷ்டித்துக் கொண்டிருந்தது, களி கலந்த கரிசல் பூமி அது. தற்போது காய்த்துக் குலுங்கும் நெல்லி மரங்களுடன் பசுமையாகச் சிரித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பசுமை மாற்றத்தை ஏற்படுத்தியவர், மதுரையைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர் மருத்துவர் புகழேந்தி பாண்டியன்.
மதுரை, விருதுநகர் மாவட்ட எல்லைகள் தொட்டுக்கொள்ளும் இடத்தில் இருக்கிறது, புளியங்குளம் விலக்கு சாலை. அரை கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் வருகிறது 'பாண்டியன் அக்ரோ ஃபார்ம்ஸ்’. அதிகாலை வேளையில் தோட்டத்தில் இருந்த புகழேந்தி பாண்டியனைச் சந்தித்தோம்.
''வருஷம் முழுக்க பயங்கர பிசியா இருந்தாலும், நமக்கான இளைப்பாறுதல்னு ஒவ்வொரு மனுஷனுக்கும் இருக்கும். அந்த வகையில எனக்கான இளைப்பாறும் இடம்... இந்தத் தோட்டம். விருதுநகர்தான் சொந்த ஊர். எங்க உறவினர்கள்ல பெரும்பாலானவங்க மருத்துவர்கள்தான். ஒரு இன்ஸ்ட்டியூட் அமைக்கணும்னுதான் இந்த இடத்தை வாங்கினேன். ஆனா, அதுக்கான வாய்ப்பு அமையல.
ஆர்வத்தை ஊட்டிய அம்மா!
'உழைக்காதவன் உண்பதற்குத் தகுதியில்லாதவன். உண்பவன் உழைக்கவும் வேண்டும்’னு பைபிள்ல ஒரு வசனம் இருக்கு. அதை என்னோட அம்மா அடிக்கடி சொல்லுவாங்க. அதோட 'ஆயிரம் தொழிலைச் செஞ்சாலும்... விவசாயம் செய்யாதவன் முழு மனுசன் கிடையாது’னும் சொல்லுவாங்க. இந்த ரெண்டு வாக்கியமும் என் மனசுல ஆழமா பதிஞ்சுருந்துச்சு.
சரி, நாம வாங்கின இடம் மருத்துவத்துக்குத்தான் பயன்படல. அம்மா சொன்னபடி விவசாயமாவது செய்யலாமேனு வேலையை ஆரம்பிச்சேன். முள் காடுகள அழிச்சு, நிலத்தை ஓழுங்குபடுத்த ஆரம்பிச்சப்ப... 'சம்பாதிச்ச காசையெல்லாம் விவசாயத்துல விடப்போறாரு டாக்டர்’னு அந்தப் பகுதியைச் சேர்ந்த பலரும் என்காதுபடவே பேசிகிட்டாங்க. நான் எதைப் பத்தியும் கவலைப்படாம வேலையைச் செஞ்சேன்.
களியா இருந்த இடங்கள்ல, செம்மண்ணை வாங்கிட்டு வந்து கொட்டி மட்டப்படுத்தினேன். வேலி போட்டு பயிர் செய்ய ஆரம்பிச்சேன். மொத்தம் இருபத்திரண்டரை ஏக்கர். 16 ஏக்கர்ல நெல்லி இருக்கு. 2 ஏக்கர்ல உரக்குழி அமைச்சுருக்கேன். 2 ஏக்கர் தரிசா இருக்கு. மீதி இரண்டரை ஏக்கர் நிலத்தை கட்டடம்... மற்ற பயன்பாடுனு ஒதுக்கி வெச்சுருக்கேன்.
பூரிக்க வைத்த பூசணி!  
நெல்லி நடவுக்காக குழியெடுத்து சொட்டுநீர் அமைச்சேன். சொட்டுநீர் அமைப்பை சோதனை பண்றதுக்காக ஒவ்வொரு குழியிலயும் பூசணி விதையை ஊன்றி வெச்சோம். அது நல்லா விளைஞ்சுது. 16 ஏக்கர்ல மொத்தம் 18 டன் பூசணி மகசூல் கிடைச்சுது. ஒட்டன்சத்திரம் மார்க்கெட்ல வித்தப்போ... எல்லா செலவும் போக ஒரு லட்ச ரூபாய் லாபமா கிடைச்சுது'' என்ற புகழேந்தி பாண்டியன், தோட்டத்தில் நடைபோட்டபடியே மேற்கொண்டு சொல்ல ஆரம்பித்தார்.  
உள்ளே இருக்கு உரக்குழி!
''மொத்தம் 3,200 நெல்லி மரங்க இருக்கு. பி.எஸ்.ஆர்., என்.ஏ-7, காஞ்சன், சக்கையானு நாலு ரகங்களையும் கலந்து வெச்சுருக்கோம். இதுல பி.எஸ்.ஆர். படர்ந்து வளரும்ங்கறதால... அதை வரப்போரமா மட்டும் நட்டிருக்கோம். ரெண்டு ஏக்கர்ல 6 அடி நீளம், 3 அடி அகலம், 3 அடி ஆழத்துல வரிசையா 86 உரக்குழிகள் இருக்குது. அக்கம்பக்கத்து கிராமங்கள்ல கிடைக்குற மாட்டு எருவையெல்லாம் வாங்கிட்டு வந்து இந்த குழியில போட்டு மக்க வெச்சுடுவோம். பிறகு ஒவ்வொரு குழியில் இருந்தும் தொழுவுரத்தை எடுத்து நெல்லிக்கு வெப்போம். வேலி ஒரங்கள்ல காட்டாமணக்குச் செடிகளை நட்டு வெச்சுருக்கோம்.
இயற்கைச் சான்றிதழ்!
60 வயசுக்குப் பிறகு, இங்கயே தங்கி விவசாயம் பாக்கணும்கிற எண்ணத்துலதான் இந்தத் தோட்டத்தை அமைச்சேன். நான் எதிர்பார்த்ததைவிட நல்லா அமைஞ்சுருக்கு. எங்க தோட்டத்துல தொழுவுரம், உயிர் உரங்களைத் தவிர வேற எதையும் பயன்படுத்துறதில்லை. அப்பப்ப பஞ்சகவ்யா மட்டும் தெளிப்போம்.
இயற்கை விவசாய விளைபொருள் சான்றிதழுக்காக ஆரம்பத்துலயே அதற்கான அமைப்புகளிடம் விண்ணப்பிச்சேன். அவங்க 5 வருஷம் தொடர்ந்து எங்க விவசாய முறைகளை கண்காணிச்சு, போன வருஷம் 'இயற்கை விவசாய விளைபொருள்’ சான்றிதழ் கொடுத்திருக்காங்க.
நோய் தாக்குதல் இல்லை!
முழுக்க இயற்கை முறையில பண்றதால எங்க மரத்துல காய்க்கிற காய்க ஒவ்வொண்ணும் பெரிய எலுமிச்சை அளவுக்கு இருக்கு. எந்த நோயும் தாக்குறதில்லை. நடவு செஞ்சு அஞ்சு வருஷமாச்சு. நெல்லியைப் பொறுத்தவரைக்கும் நல்ல வெயிலும், போதுமான மழையும் இருந்தாத்தான் நல்ல மகசூல் கிடைக்கும். ரெண்டு வருஷமா பருவம் தப்பி பெய்ற மழையால சரியான நேரத்துல பூ பிடிக்கல. அப்படியும் 4-ம் வருஷம் 16 ஏக்கர்லயும் சேர்த்து 18 டன் மகசூல் கிடைச்சது. அதுல 8 டன்னை மட்டும் வித்துட்டு, 10 டன் காயை காய வெச்சு வத்தலா மாத்தி வெச்சுருக்கேன். இன்னும் விலைக்கு கொடுக்கல.
இயற்கைக்குத் தேவை தனிமரியாதை!
இந்த வருஷமும் பருவநிலை காரணமா முறையா பூ பிடிக்கல. இதுவரைக்கும் 8 டன் அறுவடை செஞ்சுருக்கோம். இன்னும் 12 டன் அறுவடைக்குத் தயாரா இருக்கு. அறுவடைக்கு ஆள் கிடைக்கறதுதான் குதிரைக் கொம்பா இருக்கு. இயற்கை விவசாயச் சான்றிதழ் வாங்கி இருந்தாலும், இதை எப்படி சந்தைப்படுத்துறதுனு தெரியாம... விருதுநகர் மார்க்கெட்லதான் வித்துகிட்டிருக்கோம். அங்க இயற்கைக் காய்னு கூடுதல் விலையெல்லாம் கொடுக்கறதில்லை. கிலோவுக்கு சராசரியா 20 ரூபாய்தான் விலை கிடைக்குது'' என்றவர், நெல்லி சாகுபடி முறைகளைப் பாடமாகவே சொல்ல ஆரம்பித்தார்.
15 அடி இடைவெளி!
'அனைத்து மண்ணிலும் சிறப்பாக வளரக்கூடியது நெல்லி. செம்மண், சரளை மண் நிலத்தில் நல்ல மகசூல் கொடுக்கும். நிலத்தை நன்றாக உழவு செய்து, செடிக்குச் செடி வரிசைக்கு வரிசை 15 அடி இடைவெளி இருப்பதுபோல ஒரு கன அடி அளவுக்கு குழிகள் எடுத்து, கன்றுகளை நடவு செய்ய வேண்டும். ஏக்கருக்கு 200 கன்றுகள் தேவைப்படும். நடவு செய்த 4-ம் மாதம் ஒவ்வொரு கன்றுக்கும் தென்னைநார் கழிவு-6 கிலோ, தொழுவுரம்-3 கிலோ, அசோஸ்பைரில்லம்-25 கிராம், பாஸ்போ-பாக்டீரியா-25 கிராம், கடலைப் பிண்ணாக்கு-300 கிராம் ஆகியவற்றைக் கலந்துஇட வேண்டும்.
(முதல் மூன்று ஆண்டுகள் வரை இதே அளவை நான்கு மாதங்களுக்கு ஒரு முறை கொடுக்க வேண்டும். அதன் பிறகு, ஒவ்வொரு செடிக்கும் தொழுவுரம்-6 கிலோ, மண்புழு உரம்-1 கிலோ, முந்திரிப் பிண்ணாக்கு-300 கிராம், வேப்பம் பிண்ணாக்கு-300 கிராம், அசோஸ்பைரில்லம்-100 கிராம், பாஸ்போ-பாக்டீரியா-100 கிராம், சூடோமோனஸ்-100 கிராம், பவேரியா பேசியானா-50 கிராம், வேம் எனப்படும் வேர்வளர்ச்சி உட்பூசணம்-50 கிராம் ஆகியவற்றைக் கலந்து ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கொடுக்க வேண்டும்).
ஏக்கருக்கு 4 டன்!
நடவு செய்த 4-ம் மாதம் நெல்லி பூக்கத் தொடங்கும். முதல் மூன்று ஆண்டுகள் வரை அவற்றை உதிர்த்துவிட வேண்டும். அதன் பிறகு காய்ப்புக்கு அனுமதித்தால்... அதிகமாக காய்க்கும். களைகளை அடிக்கடி வெட்டாமல், ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலம் முடிந்தவுடன் நிலத்தில் ஈரம் இருக்கும்போதே பறித்து, மூடாக்காக போட்டுவிட வேண்டும். தண்ணீர் வசதியைப் பொறுத்தவரை வாரம் ஒரு முறை பாசனம் செய்தால் கூடப் போதும். மற்றபடி எந்தப் பராமரிப்பும் தேவையில்லை. சரியான பருவநிலை இருந்தால், ஐந்தாம் ஆண்டுக்குப் பிறகு ஒவ்வொரு மரத்திலிருந்தும் ஆண்டுக்கு சராசரியாக 20 கிலோ நெல்லிக்காய் கிடைக்கும். ஒரு ஏக்கரிலுள்ள 200 மரங்கள் மூலமாக 4,000 கிலோ மகசூல் கிடைக்கும்.'
காத்திருந்தா காசு!
நிறைவாக வருமானம் பற்றிப் பேசிய புகழேந்தி பாண்டியன், ''நெல்லியில ஒரு தடவை முதலீடு செஞ்சுட்டா... குறைஞ்சது 40 வருஷம் வரைக்கும் வருமானம் பார்க்கலாம். முதல் வருமானம் எடுக்க 5 வருஷமாவது காத்திருக்கணும். நான் இதுவரைக்கும் நெல்லிக்கு மட்டும் கிட்டத்தட்ட 15 லட்சத்துக்கு மேல செலவு செஞ்சுருக்கேன். இந்த முறை பெரும்பாலான செடிகள் 25 கிலோ வரைக்கும் காய்ச்சுருக்கு, சில செடிகள்ல மட்டும் காய்ப்பு குறைஞ்சுருக்கு. சராசரியா மரத்துக்கு
20 கிலோனு வெச்சுக்கிட்டா... 3,200 மரத்துக்கும் சேர்த்து மொத்தம் 64 டன் மகசூல் கிடைக்கும். 1 கிலோவுக்கு சராசரி விலையா 20 ரூபாய்னு வெச்சிகிட்டாலும்... 12 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வருமானமா கிடைக்கும். ஒரு வருஷத்துக்கான செலவு
2 லட்சத்து 80 ஆயிரம் போக... 10 லட்ச ரூபாய் லாபமா கிடைக்கும். இன்னும் ரெண்டே வருஷத்துல முதலீட்டை எடுத்துடுவேன். பிறகு கிடைக்குறதெல்லாம் லாபம்தானே'' என்றார், உற்சாகமாக.

வருஷத்துக்கு 300 ஜோடி... ஜோடிக்கு 100 ரூபாய்!
தனது பண்ணையில் புறாக்களையும் வளர்த்து வரும் புகழேந்தி பாண்டியன், ''30 ஜோடி புறாக்களை 6 வருஷத்துக்கு முன்ன வாங்கிட்டு வந்தேன். இப்ப 300 ஜோடிகளாப் பெருகிகிடுச்சு. இதுக்காக நான் செலவு செஞ்சது 4 கூண்டுகள் மட்டும்தான். இதுகளுக்குனு தனி கவனம் எடுத்து எந்த வேலையும் பாக்குறதில்லை. அதுகளா எங்கயாவது போய் இரை எடுத்துட்டு வந்துடும். மாலை நேரத்துல கூண்டுக்கு பக்கத்துல இருக்கற காலி இடத்துல கொஞ்சம் தானியங்கள இறைச்சு விடுவோம். சரியா அந்த நேரத்துக்கு பண்ணைக்கு வந்துடும்.
தானியங்களைக் கொத்தித் தின்னுட்டு கூண்டுக்குள்ள போய் அடைஞ்சுக்கும். இந்த புறாக் குஞ்சுகளுக்கு விருதுநகர்ல நல்ல மார்க்கெட் இருக்கு. இதை விற்பனை செய்றதுக்காக நான் எந்தக் கஷ்டமும் படல. பண்ணைக்கே வந்து குஞ்சுகளை வாங்கிட்டு போயிடுறாங்க வியாபாரிங்க.
ஒரு ஜோடி குஞ்சுகளுக்கு 100 ரூபாய் கொடுக்கறாங்க. வருஷத்துக்கு குறைஞ்சது 300 ஜோடி குஞ்சுகள விக்கிறோம். பண்ணைக்குள்ள வந்தவுடனே இவ்வளவு புறாக்களையும் ஒரே இடத்துல பாக்குறப்ப... மனசு லேசாகிடும். வருமானத்தைவிட, இந்த மனநிம்மதிதான் ரொம்ப முக்கியம்'' என்கிறார்.
தொடர்புக்கு : எஸ். ராஜேஷ்,
(டாக்டர். புகழேந்தி பாண்டியனின் உதவியாளர்),
செல்போன்: 98431-50567.
சுந்தர், பண்ணை மேலாளர்,
செல்போன்: 98433-50567.

ஆர்.குமரேசன்
படங்கள்: வீ. சிவக்குமார்
Source:pasumaivikatan

No comments: