Saturday

சிறப்பான வருமானம் தரும் சினைமாடு வளர்ப்பு !

சிறப்பான வருமானம் தரும் சினைமாடு வளர்ப்பு !

கால்நடை
காசி.வேம்பையன்
கறக்காமலே காசு...
சிறப்பான வருமானம் தரும் சினைமாடு வளர்ப்பு !


இக்கட்டான சூழ்நிலைகளில் விவசாயம் ஏமாற்றும் போதெல்லாம், பலருக்கும் கைகொடுத்துத் தூக்கி நிறுத்துவது... 'கறவைமாடு வளர்ப்பு'தான் என்பார்கள். ஆனால், 'பாலுக்கு உரிய விலை கிடைக்கவில்லை... செலவைக் கட்டுப்படுத்த முடியவில்லை' என்று புலம்புபவர்கள்தான் அனேகம்.
இவர்களுக்கு நடுவே... "அவரவருடைய சூழ்நிலைகளுக்கேற்ப கால்நடைகளைத் தேர்ந்தெடுத்து, சரியான முறையில் வளர்த்தால், கண்டிப்பாக லாபம் கிடைக்கும்" என்கிறார் புதுவை யூனியன் பிரதேசத்தின் காரைக்கால் மாவட்டம், டி.ஆர். பட்டினத்தைச் (திருமலைராயன்பட்டினம்) சேர்ந்த பாஸ்கர். இவர் கிடேரிக் கன்றுகளை வாங்கி வளர்த்து, சினைப் பிடிக்க வைத்து விற்பனை செய்து வருகிறார். கூடுதல் லாபத்துக்காக ஆடு மற்றும் கோழிகளையும் வளர்த்து வருகிறார்.
அவரை சந்தித்தபோது, "படிப்பை முடிச்சுட்டு தனியார் கம்பெனியில் வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன். கொஞ்ச வருஷத்துக்கு முன்ன எங்க வீட்டுத் தேவைக்காக ஒரு பால்மாட்டை வாங்கச் சொல்லிட்டே இருந்தாங்க எங்கம்மா. அதனால ஒரு மாடு வாங்கினோம். அது, நல்லா பால் கறக்கறதைப் பார்த்த உடனே, நிறைய பால்மாடுகளை வாங்கி பண்ணை வைக்கலாம்னு யோசனை தோணுச்சு. உடனே மூணு ஏக்கர் நிலத்தை வாங்கி, அதுல ஒண்ணரை ஏக்கர்ல தீவனங்களை விதைச்சுட்டு, ஜெர்சி, சிந்து, ஹெச்.எஃப்னு இருபது உயர் ரக மாடுகளை வாங்கினேன். ஒவ்வொண்ணும் நாற்பத்தஞ்சாயிரம் ரூபா வரைக்கும் வந்துடுச்சு.
ஒவ்வொரு மாடும் இருபதுல இருந்து, இருபத்தஞ்சு லிட்டருக்குக் குறையாமப் பால் கொடுத்துச்சு. ஆனா, ஒரு வருஷம் முடிஞ்சு கணக்கு பாக்குறப்போ... மருத்துவத்துக்கும், பராமரிப்புக்குமான செலவுதான் அதிகமாயிருந்ததே தவிர, பெருசா லாபம் ஒண்ணுமில்லை. உடனே எல்லா மாடுகளையும் வித்துட்டேன்.
கைகொடுக்கும்
மூலிகை வைத்தியம்!
ஆனாலும், மாடு வளர்ப்பு ஆசை மட்டும் என்னை விட்டுப் போகல. 'பெரிய மாடுகளை வாங்கினாத்தான பிரச்னை, கன்னுகளை வாங்கிட்டு வந்து வளர்த்து, சினைப் பிடிக்க வெச்சு விக்கலாமே'னு ஒரு யோசனை தோணுச்சு. உடனே தரகர்களைப் பிடிச்சு ஓசூர், பெங்களுர், தர்மபுரினு சுத்தி, ஒரு வயசுக்குள்ளாற இருக்குற கிடேரிக் கன்னுக்குட்டிகளையா தேடிப்பிடிச்சு வாங்கிட்டு வந்தேன். அந்த சமயத்துலதான் ஒரு நண்பர் மூலமா 'பசுமை விகடன்' அறிமுகமாச்சு. அது மூலமா இயற்கை விவசாயத்தையும் மாடுகளுக்கான மூலிகை மருத்துவத்தையும் தெரிஞ்சுக்கிட்டுக் கடைபிடிக்க ஆரம்பிச்சேன். அதுலதான் சோத்துக் கத்தாழையைப் பயன்படுத்தி குடற்புழு நீக்கம் செய்யுறதைப் பத்தித் தெரிஞ்சுக்கிட்டேன்.
கன்றாக வாங்கினால் கூடுதல் லாபம்!
கன்னுகளுக்கு ஒன்றரை வயசான பிறகு வழுவடிக்கத் தொடங்கும். உடனே, பொலிக்காளை மூலமாவோ அல்லது சினைஊசி மூலமாவோ சினைப் பிடிக்க வெச்சுடுவேன். வாங்குறவங்களோட தேவையைப் பொறுத்து, சினைப் பிடிச்சு ரெண்டு மாசத்துல இருந்து நிறை மாசம் வரைக்கும் பதினைஞ்சாயிரத்துல இருந்து இருபதாயிரம் ரூபாய் வரைக்கும் வித்துக்கிட்டு இருக்கேன். ஆரம்பிச்சு ஒன்றரை வருசத்துக்குள்ள இதுமாதிரி 43 மாடுகளை விலைக்குக் கொடுத்திருக்கேன். இப்போதைக்கு கையில 27 மாடுகள் இருக்கு. எப்பவும் என்கிட்ட பாலுக்காக பத்து கறவை மாடு இருக்குற மாதிரி பாத்துக்குவேன்.
ஒரே ஆள் போதும்!
மாடுகளோட சேர்த்து நாட்டு ஆடு-20, தலைச்சேரி ஆடு-20, நாட்டுக் கோழிகள்-30னு வாங்கி விட்டிருந்தேன். போன வருசம் பக்ரீத்துக்குக் கொஞ்சம் ஆடுகள், கோழிகளை வித்துட்டுத் திரும்பவும், கரோலி, சிரோகி, பத்மசாரி, பார்பாரி ஆடுகளைக் கலந்து வாங்கினேன். இப்போ மொத்தம் மூணு கிடாவைச் சேர்த்து, இருபத்தேழு ஆடுகளும் முப்பது நாட்டுக்கோழிகளும் கையில இருக்கு.
கன்னுக்குட்டிகளா பார்த்து வாங்கிட்டு வர்றதால, பெருசா பராமரிப்புச் செலவு வர்றதேயில்லை. அதேமாதிரிதான் ஆடு, கோழிகளுக்கும். கோழிகளுக்கு தீவனச்செலவுகூட கிடையாது. தோட்டத்துல கிடைக்கிற கழிவுகள், சாணியில இருந்து உற்பத்தி ஆகுற புழு பூச்சிகளைச் சாப்பிட்டே வளர்ந்துடும். மாடுகளுக்காக விளையுற பசுந்தீவனத்தையே ஆடுகளும் நல்லா சாப்பிடும். அதனால அதுக்கு தனிச்செலவு கிடையாது. ஆடுகளுக்கு 100 கிராம் கோதுமைத் தவிடை தண்ணியில பிசைஞ்சு தினமும் கொடுத்தா... சீக்கிரம் எடை வந்துடும். இது எல்லாத்தையுமே ஒரே ஆள்தான் பராமரிக்கிறார். அதனால பராமரிப்புச் செலவு குறைஞ்சுடுச்சு. சாணம், மாட்டுச்சிறுநீர் வெச்சு இயற்கை முறையிலயே தீவனத்தையும் உற்பத்தி பண்ணிடறதால உரச் செலவும் கிடையாது. அதனால அதிக லாபம் கிடைக்குது" என்றவர், கால்நடைப் பராமரிப்பு பற்றி சொல்ல ஆரம்பித்தார்.
1 மாட்டுக்கு 50 சதுரடியில் கொட்டகை... 10 சென்டில் தீவனம்!
"கொட்டகையில் ஒவ்வொரு மாட்டுக்கும்
50 சதுர அடி இடம் இருக்கணும். அதேமாதிரி ஒரு மாட்டுக்கு பத்து சென்ட் நிலத்துல கோ-3, கோ-4 மாதிரியான பசுந்தீவனப்புல் இருக்கணும். அதுக்கு சொட்டுநீர் அமைச்சுக்கிட்டா, தண்ணீர் செலவைக் குறைச்சுடலாம். மாடோ, கன்னோ... எதை வாங்கினாலும், வாங்கறதுக்கு மூணு மாசத்துக்கு முன்னயே தீவனத்தை விதைச்சு விட்டுடணும். ஒரு வயசுக்குள்ள இருக்குற கன்னுகளா வாங்கி வளர்த்தா... ஆரம்பகால முதலீடு குறையும். அதில்லாம, நம்ம இடத்து சீதோஷ்ண நிலையை அனுசரிச்சு வளரும். மாசத்துக்கு ஒரு தடவை கன்னுகளுக்கு குடற்புழு நீக்கம் செஞ்சுடணுங்கறதுல மட்டும் கவனம் இருக்கணும் (பார்க்க பெட்டிச் செய்தி).
அடர்தீவனம் அவசியம்!
ஒரு நாளைக்கு மாட்டுக்கு இருபது கிலோ வரைக்கும் பசுந்தீவனத்தை உணவாக் கொடுக்கணும். புல்லை அப்படியே முழுசாப் போடாம, சின்னச் சின்னத் துண்டுகளா வெட்டிக் கொடுத்தா, வீணடிக்காம மாடுங்க சாப்பிடும். சினைப் பிடிக்கிற வரைக்கும் ஒவ்வொரு மாட்டுக்கும் அடர்தீவனமா 1 கிலோ அரிசித் தவிடு, கால் கிலோ கடலைப் புண்ணாக்கு, 100 கிராம் எள்ளு புண்ணாக்கு, 30 கிராம் தாது உப்புக்கலவை... எல்லாத்தையும் (1 நாளைக்கு ஒரு மாட்டுக்குக் கொடுக்க வேண்டிய அளவு) தண்ணீர்த் தொட்டியில் கலந்து வைக்கணும்.
சினைப் பிடிச்ச பின்னாடி, கூடுதலா 3 கிலோ அரிசித் தவிடு, அரைகிலோ கோதுமைத் தவிடைத் தண்ணீர்த் தொட்டியில் கலந்து விடணும். கறக்குற மாடுகளுக்குத் தினமும்
4 கிலோ அரிசித் தவிடு, 2 கிலோ கோதுமைத் தவிடு, 2 கிலோ மொலாசஸ் கலந்த தீவனம், கால் கிலோ கடலைப் புண்ணாக்கு... எல்லாத்தையும் மொத்தமாக கலந்து ரெண்டு பங்காப் பிரிச்சு காலையில ஒரு பங்கையும் சாயங்காலம் ஒரு பங்கையும் தண்ணீர்த் தொட்டியில் கலக்கணும்.
கறவை மாடுகள தினமும் மதிய நேரத்துல குளிப்பாட்டணும். கறவை இல்லாத மாடுகளை வாரம் ரெண்டு தடவை குளிப்பாட்டிடணும். இதையெல்லாம் கடைபிடிச்சாலே போதும்... மாடுங்க நல்லா ஆரோக்கியமா வளரும். பருவம் தப்பாம சினைப் பிடிக்கும்" என்று விரிவாகச் சொன்ன பாஸ்கர், நிறைவாக வருமானத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்.
மூன்று ஏக்கரில் ஆண்டுக்கு
இரண்டு லட்சம்!
"கன்னுக்குட்டியா வாங்கும்போது, ஒரு குட்டி அஞ்சாயிரம் ரூபாய்க்குள்ள வாங்கிடலாம். சினைப் பிடிக்கற வரைக்கும் தீவனம், பராமரிப்பு எல்லாத்துக்கும் சேத்து அதிகபட்சம் அஞ்சாயிரம் ரூபாதான் ஆகும். மொத்தமா ஒரு மாட்டுக்கு பத்தாயிரம் ரூபாய் செலவு. சினையான மாட்டை விக்கும்போது குறைஞ்சது பதினஞ்சாயிரம் ரூபாய் வரைக்கும் விக்கலாம். ஒரு மாட்டுக்குக் குறைஞ்சது அஞ்சாயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.அதிக எண்ணிக்கையில வளர்க்கறப்போ... பராமரிப்புச் செலவு குறைஞ்சு கூடுதல் லாபம் கிடைக்கும்.
இதில்லாம.... பத்து மாடுங்க மூலமா, ஒரு நாளைக்கு சராசரியா 75 லிட்டர் பால் கிடைச்சுக்கிட்டிருக்கு. ஒரு லிட்டர் பதினஞ்சு ரூபாய்னு சொசைட்டிக்கு கொடுத்துக்கிட்டிருக்கேன். ஒரு நாளைக்கு 1,125 ரூபாய் வருமானம் கிடைக்குது. செலவு போக ஒரு 500 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.
ஒரு ஆடு, சாதாரணமா ரெண்டு வருசத்துக்கு மூணு தடவை குட்டி போடும். மூணுல இருந்து ஆறு குட்டிங்க வரை கிடைக்கும். குட்டிகளை ஆறேழு மாசம் வரைக்கும் வளர்த்து வித்துடுவேன். ஒரு ஆடு மூணாயிரம் ரூபாய் வரை விலை போகும். பார்பாரி ஆடு மட்டும் ஜோடி இருபதாயிரம் ரூபாய் வரைக்கும் விலை போகுது. பாக்கறதுக்கு மான் மாதிரி இருக்கறதால, அழகுக்காகதான் வளர்க்கறாங்க.
ஒரு கோழி, வருஷத்துக்கு எண்பது முட்டைகள் வரை போடும். அடைவெச்சு சராசரியா வருசத்துக்கு அம்பது குஞ்சுகள் வரை உற்பத்தி பண்ணலாம். குஞ்சுகள் மூணு நாலு மாசத்துல ஒரு கிலோ அளவுக்கு வந்துடும். உயிர் எடைக்கு ஒரு கிலோ 150 ரூபாய் வரை விக்குது.
27 தாய்க்கோழிகள் மூலமா வருசத்துக்கு குறைந்தபட்சம் 1,000 குஞ்சுகளுக்கு மேல உற்பத்தி பண்ண முடியும். சராசரியா 1,000 கிலோ அளவுக்கு உயிர்க்கோழியை விற்பனை செஞ்சா... அதன் மூலமா வருசத்துக்கு ஒன்றரை லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும்.
மொத்தத்துல மூணு ஏக்கர் தோட்டத்துல... மூணு லட்ச ரூபாய் வரைக்கும் முதலீடு செஞ்சா... வருசத்துக்கு ரெண்டு லட்ச ரூபாய்க்கு மேல கண்டிப்பா லாபம் பார்க்க முடியும்" என்றார், மகிழ்ச்சியாக.
படங்கள் செ.சிவபாலன்

தொடர்புக்கு, பாஸ்கர், 
அலைபேசி 94437 -33778

குடற்புழு நீக்க மருந்து தயாரிப்பது இப்படித்தான்!
கன்றுகளுக்கான குடற்புழு நீக்க மருந்தை, தானே தயாரித்து கொடுத்து வருகிறார் பாஸ்கரன். அதன் தயாரிப்பு முறை இதுதான்-

தேவையானப் பொருட்கள் சோற்றுக்கற்றாழை மடல்- 5, இஞ்சி- 250 கிராம், மிளகுப் பொடி- 25 கிராம், கருஞ்சீரகம்-25 கிராம், சிறியாநங்கை-25 கிராம், பெரியா நங்கை-25 கிராம், வசம்புத்தூள்-25 கிராம், சதக்குப்பை-25 கிராம் (மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களில் பலவும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்). இவை அனைத்தையும் மிக்ஸியில் தண்ணீர்விட்டு நன்றாக அரைத்து, மாதம் ஒரு முறை ஒரு கன்றுக்கு 35 மில்லி வீதம் கொடுத்தால்... குடலில் உள்ள புழுக்கள் வெளியேறி விடும். மாடுகளுக்குச் சினைப் பிடிக்கும் வரை இந்த மருந்தைக் கொடுக்கலாம்.
சினை மற்றும் கறவை மாடுகளுக்கு, குடற்புழு நீக்க, சோற்றுக்கற்றாழை மடல் ஒன்றை எடுத்து, அதில் உள்ள முட்களை நீக்கிவிட்டு இரண்டாகப் பிளந்து கொள்ள வேண்டும். மிளகுத்தூள், சிறியாநங்கை, பெரியாநங்கை, சதக்குப்பை, வசம்புத்தூள், கருஞ்சீரகம், இஞ்சி ஆகியவற்றில் தலா 10 கிராம் வீதம் எடுத்துக் கொண்டு, கற்றாழை மடலுக்குள் வைத்து, அப்படியே மாட்டுக்கு உண்ணக் கொடுக்க வேண்டும்.
இன்றையக் கன்றுகள்... நாளையப் பசுக்கள்...
தமிழ்நாடு, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் தஞ்சாவூரில் இருக்கும் ஆராய்ச்சி நிலைய தலைவர் மற்றும் பேராசிரியர் புண்ணியமூர்த்தியிடம் கறவைமாடு வளர்ப்புப் பற்றி கேட்டபோது, சில முக்கியமான தகவல்களைச் சொன்னார். அவை- "இன்றையக் கன்றுகள்... நாளையப் பசுக்கள் என்ற அடிப்படைத் தத்துவத்தை விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும். பால்மாடுகளை வளர்க்க விரும்பும் விவசாயிகள், உடனடி வருமானத்துக்காக கறவை மாடுகளை மட்டும்தான் வாங்குகின்றார்கள். ஆனால், கன்றுகளாக வாங்கி வளர்த்தால்தான் தரமான பால்மாடுகளை உருவாக்க முடியும். கன்றுகளைக் கட்டி வைக்காமல், வேலி அடைத்து, மேயவிட்டு, தீவனம் மட்டும் கொடுத்து வளர்க்கும் முறையில் கன்றுகள் நன்றாக வளர்கின்றன.
மூன்று மாதக் கன்று ஒன்றுக்கு தினமும் சராசரியாக 10 முதல் 15 கிலோ வரை பசுந்தீவனமும், 15 முதல் 20 கிலோ வரை உலர்தீவனமும், அரை கிலோ அடர்தீவனமும் கொடுக்க வேண்டும். கன்றுகளின் வளர்ச்சியைப் பொறுத்து இந்த அளவைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.
சினைமாடு ஒன்றுக்கு தினமும் 20 கிலோ பசுந்தீவனமும், 20 கிலோ உலர் தீவனமும், 1 கிலோ அடர்தீவனமும் கொடுக்க வேண்டும். கறவை மாடுகளுக்குச் சராசரியாக தீவனமாக 20 கிலோ பசுந்தீவனமும், 20 கிலோ உலர்தீவனமும், 1 கிலோ அடர்தீவனமும் தினமும் கொடுக்க வேண்டும். கறவை மாடுகளுக்கு பாலின் அளவைப் பொறுத்து, இரண்டு லிட்டர் பாலுக்கு ஒரு கிலோ அடர்தீவனம் என்ற விகிதத்தில் கூட்டிக் கொள்ள வேண்டும். அடர்தீவனம் கொடுக்க முடியாதபட்சத்தில், ஒரு கிலோ அடர்தீவனத்துக்குப் பதிலாக 10 கிலோ பசுந்தீவனத்தைக் கொடுக்கலாம்."
(அடர்தீவனத்தைப் பொறுத்தவரை, புண்ணியமூர்த்தி சொல்லும் அளவும், பாஸ்கரன் சொல்லும் அளவும் வேறுபடுகின்றன.
"என்னோட அனுபவத்துல, சினைமாட்டுக்காக வளர்க்கும்போது, கொஞ்சம் கூடுதலாகத்தான் அடர்தீவனம் கொடுக்க வேண்டியிருக்கு. அப்போதான் வளர்ச்சி நல்லா இருக்கும்" என்பது பாஸ்கரனின் கருத்து.)
குடற்புழு நீக்கத்துக்கு பாஸ்கரன் பயன்படுத்தும் சோற்றுக்கற்றாழை முறை பற்றி, புண்ணியமூர்த்தியிடம் கேட்டபோது, "இதன்மூலம் மாடுகளுக்கு எதிர்ப்புச் சக்தி அதிக அளவில் கிடைக்கும். ஆனால், இதன் காரணமாக குடற்புழு நீங்குகிறதா என்பதை பரிசோதித்துதான் சொல்ல முடியும்" என்றார்.
மூலிகை மருத்துவக் குறிப்புகள்!
பேராசிரியர் புண்ணியமூர்த்தி, கால்நடைகளுக்கான மூலிகை சார்ந்த மருத்துவக் குறிப்புகள் சிலவற்றைச் சொன்னார்.
குடற்புழு நீக்கத்துக்கு...
தேவையானப் பொருட்கள்
சீரகம்-15 கிராம், கடுகு-10 கிராம், மிளகு-5, மஞ்சள் தூள்-65 கிராம், பூண்டு-5 பல், தும்பை இலை - ஒரு கைப்பிடி, வேப்பிலை - ஒரு கைப்பிடி, வாழைத்தண்டு-100 கிராம், பாகற்காய்- 50 கிராம், பனைவெல்லம்-150 கிராம்.
செய்முறை சீரகம், மிளகு, கடுகு ஆகியவற்றை இடித்து, அத்துடன் மற்றவற்றைச் சேர்த்து அரைத்து, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, 100 கிராம் கல்உப்பில் புரட்டி எடுத்து, நாக்கின் மேல் பகுதியில் வைத்தால், மாடு அதை விழுங்கி விடும். மொத்த உருண்டைகளும் ஒரு மாட்டுக்கானது. ஒரே நேரத்தில் கொடுக்கப்பட வேண்டும்.
கழிச்சலை குணமாக்க...!
வால் மற்றும் பின்னங்கால்களில் சாணக்கறை படிந்திருந்தால், கன்றுக்கு கழிச்சல் இருக்கிறது என்று அர்த்தம். இதன் காரணமாக உடலில் நீர்ச்சத்து, தாது உப்பு அளவு ஆகியவை குறைந்து, கன்று சோர்வாகக் காணப்படும்.
சீரகம்-15 கிராம், கசகசா-15 கிராம், வெந்தயம்- 15 கிராம், மிளகு-5, மஞ்சள்-5 கிராம் பெருங்காயம்- 5 கிராம் இவை அனைத்தையும் நன்கு கருகும் அளவுக்கு வறுத்து, பொடியாக இடித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து... சின்ன வெங்காயம்- 10, பூண்டு-6 பல், புளி-200 கிராம் பனைவெல்லம்-250 கிராம் இவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து, முதலில் தயாரித்த பொடியை இதனுடன் கலந்து பிசைந்து, சிறிய உருண்டைகளாகப் பிடிக்க வேண்டும். அவற்றை 100 கிராம் கல் உப்பில் புரட்டி எடுக்க வேண்டும். இந்த உருண்டைகளை மாட்டுக்குக் கொடுத்தால் கழிச்சல் சரியாகி விடும்.
மொத்த உருண்டைகளும் ஒரு மாட்டுக்கானது. ஒரே நேரத்தில் கொடுக்கப்பட வேண்டும்.
Source: pasumaivikatan

No comments: