Thursday

இனிக்கும் இயற்கைக் கத்திரி

இனிக்கும் இயற்கைக் கத்திரி

மகசூல்
ஜி.பழனிச்சாமி
இனிக்கும் இயற்கைக் கத்திரி
35 சென்ட்... 15 மாதங்கள்... '1 லட்சம்...

'தாறுமாறாகிக் கிடக்கும் பருவநிலை மாறுபாட்டைச் சீர்படுத்துவதற்கு இயற்கை விவசாயம்தான் தீர்வு' என்பது சூழல் ஆர்வலர்கள் பலரது குரலாக ஒலிக்கிறது.
'இயற்கையைக் காப்பது ஒருபுறம் இருக்கட்டும். விவசாயிகளைப் பொருளாதார ரீதியாகக் காப்பாற்றி வருவதும் இயற்கை விவசாயம்தான்' என்கிறார்கள், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நண்பர்கள் ஸ்டீபன் மற்றும் விமல்.
கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடையிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, சடையன்குழி. வளமான கிராமம் என்பதால், முழுவதுமே நெல் மற்றும் வாழை சாகுபடிதான். காய்கறி சாகுபடி செய்பவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். அவர்களில் ஸ்டீபன் மற்றும் விமல் ஆகியோரும் அடக்கம். காலைவேளையில் வயல் பராமரிப்புப் பணியில் இருந்தவர்களை சந்தித்தோம். 


''நாங்க ரெண்டு பேரும் பாலிடெக்னிக் கல்லூரியில் ஒண்ணா வேலை பாக்குறோம். எங்க ரெண்டு பேருக்குமே சின்னவயசுல இருந்தே விவசாயத்துல ஆர்வம் அதிகம். அதனால அடிக்கடி விவசாயத்தைப் பத்தித்தான் பேசுவோம். கொஞ்ச வருஷத்துக்கு முன்ன, கம்மியான விலையில கிடைக்குதுனு இந்த 35 சென்ட் நிலத்தை வாங்கினோம். முத முதல்ல செவ்வாழையை நடவு செஞ்சோம். எங்களுக்குத் தெரிஞ்சவங்களலாம் ரசாயன விவசாயத்தைத்தான் சொல்லிக் கொடுத்தாங்க. அதைத்தான் நாங்களும் செஞ்சோம்.

வாட வைத்த வாடல்... வழிகாட்டிய பசுமை விகடன்!
எல்லா உரத்தையும் சரியா போட்டும் வாழைக்கு வாடல் நோய் வந்துடுச்சு. மருந்தெல்லாம் அடிச்சதுல கொஞ்சம் சரியாச்சு. அறுவடை பண்ணிக் கணக்குப் பாத்தா... பெருசா ஒண்ணும் லாபம் கிடைக்கல. அதுக்கப்பறம் வாழை விவசாயமே வேணாம்னு... தர்பூசணி, வெள்ளரின்னு மாத்தி மாத்தி சாகுபடி பண்ணினோம். இதுக்கும் ரசாயன விவசாயம்தான்.
இந்த நிலைமையில எங்களுக்கு Ôபசுமை விகடன்Õ அறிமுகமாச்சு. அதைப் படிச்சுட்டு இயற்கை முறையில திரும்பவும் வாழை சாகுபடியில இறங்கினோம். எந்த நோயும் வராம நல்ல மகசூல் கிடைச்சுது. அதுக்கப்பறம்தான் இயற்கை முறையில காய்கறி சாகுபடி பண்ணலாம்னு ஆசைப்பட்டு, நாட்டுக்கத்திரி போட்டிருக்கோம். இதுலயும் நல்லாவே மகசூல் கிடைச்சுக்கிட்டிருக்கு'' என்று ஸ்டீபன் தங்களது அனுபவத்தைச் சொன்னார்.
அதையடுத்து, 35 சென்ட் நிலத்துக்கான கத்திரி சாகுபடிப் பாடத்தை நண்பர்கள் இருவருமே சொல்ல ஆரம்பித்தனர்.
கத்திரிக்குக் களிமண் ஆகாது!
களிமண்ணைத் தவிர, மற்ற அனைத்து மண்களிலும் கத்திரி நன்கு வளரும். நிலத்தை ஒருமுறை நன்கு உழுது, 3 டிராக்டர் லோடு அளவுதொழுவுரத்தைக் கொட்டி, மீண்டும் ஒரு உழவு போட வேண்டும். பின் 12 அடிக்குப் பாத்தி எடுத்துக் கொள்ளவேண்டும். காய்கறி விவசாயத்துக்குத் தெளிப்பு நீர்ப்பாசனம் மிகவும் ஏற்றது. மழை பெய்வதுபோல தண்ணீர் தெளிக்கப்படுவதால், செடிகள் செழிப்பாக வளருகின்றன.
அதிக இடைவெளி அவசியம்!
பாத்திகள் நன்கு நனையும்படி தெளிப்பான் மூலம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின், செடிக்குச் செடி இரண்டு அடி, வரிசைக்கு வரிசை இரண்டு அடி இடைவெளி விட்டு கத்திரி நாற்றுகளை விரலால் துளையிட்டு ஈர நடவு செய்து, மண்ணைக் குவித்துவிட வேண்டும்.
ஒரு மாத வயதான நாற்றுகளைத்தான் நடவு செய்ய வேண்டும். இயற்கை முறையில் அதிக இடைவெளிவிட்டு நடவேண்டும். இப்படிச் செய்யும்போது பயிர்களுக்கு நல்ல சூரிய வெளிச்சம் கிடைத்து, மகசூல் கூடுகிறது. நடவு செய்த முதல் முன்று நாட்களுக்கு தினமும் காலையிலும், மாலையிலும் தெளிப்பான் மூலமாக தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன் பிறகு நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்து பாய்ச்சினால் போதும்.
நடவு செய்த 15 மற்றும் 30-ம் நாட்களில் களை எடுக்க வேண்டும். அதிகமாகக் களைகள் மண்டினால் மட்டும் எடுக்கலாம். முதல் களை எடுத்த மறுநாள் (16-ம் நாள்), பத்து லிட்டர் அமுதக்கரைசலைப் பாசன நீருடன் கலந்துவிட வேண்டும். அதன் பிறகு மாதம் ஒரு முறை இதே அளவில் அமுதக்கரைசலைக் கலந்துவிட வேண்டும். 30-ம் நாளில் அரை லோடு தொழுவுரத்தோடு, 80 கிலோ வேப்பம் பிண்ணாக்கைக் கலந்து கத்திரிச் செடிகளுக்கு இடையில் உள்ள இடைவெளியில் பரப்ப வேண்டும்.
வாடலுக்கு சூடோமோனஸ்... தண்டுப்புழுவுக்கு பூண்டுக்கரைசல்!
வாடல் நோய் வந்தால்... அரை கிலோ சூடோமோனஸை, 50 கிலோ தொழுவுரத்தில் கலந்து, நிலம் முழுவதும் தூவி, நீர் பாய்ச்சினால் சரியாகி விடும். இலைச் சுருட்டுப்புழு உட்பட ஏதாவது பூச்சிகள் தாக்கினால், 100 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டியைக் கலந்து, தெளிப்பான் மூலமாக வயல் முழுவதும் தெளிக்க வேண்டும். அதற்குக் கட்டுப்படாவிட்டால், 100 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டி மற்றும் 1 லிட்டர் காய்ச்சி வடிகட்டிய வசம்புக் கசாயம் ஆகியவற்றைக் கலந்து தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
தண்டுப்புழு தாக்கினால், பூண்டுக் கரைசல், வசம்புக் கசாயம், வேப்பங்கொட்டைக் கசாயம் ஆகியவற்றை தெளிப்பான் மூலமாகத் தெளிக்கலாம். துருஇலைநோய் தாக்கினால், அந்தச் செடிகளை மட்டும் பறித்து அழித்து விட வேண்டும் ( பூச்சி விரட்டிகள் தயாரிக்கும் முறை தனியே கொடுக்கப்பட்டுள்ளது).
52 வாரத்தில் 104 பறிப்பு!
55-ம் நாளுக்கு மேல் கத்திரி காய்க்கத் தொடங்கும். மூன்று அல்லது நான்கு நாட்கள் இடைவெளியில் காய் பறிக்கலாம் (வாரத்துக்கு இரண்டு முறை). ஆரம்பத்தில் குறைவான அளவில்தான் காய்கள் கிடைக்கும். நான்கு, ஐந்து பறிப்புகளுக்குப் பிறகு, காய்களின் அளவு கூடும்.
வழக்கமாக ரசாயன முறை விவசாயம் என்றால், நடவிலிருந்து ஒரு வருடத்துக்குள் மொத்த அறுவடையும் முடிந்துவிடும். ஆனால், இயற்கை வேளாண்மையில் அறுவடைக்கு வந்த பிறகு, 52 வாரங்கள் வரை (ஒரு வருடம்) தொடர்ந்து காய் பறிக்கலாம். வாரத்துக்கு இரண்டு பறிப்பு என மொத்தம் 104 முறை காய் பறிக்கலாம். ஒரு பறிப்புக்கு 150 முதல் 250 கிலோ வரை காய்கள் கிடைக்கும். சராசரியாக பறிப்புக்கு 200 கிலோவுக்குக் குறையாமல் காய்கள் கிடைக்கும்.''
சாகுபடிப் பாடம் முடிந்ததும் விற்பனை மற்றும் வருமானம் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார், விமல்.
1 லட்ச ரூபாய் லாபம்!
''நாங்க முதல்ல 17 சென்டில்தான் நடவு செஞ்சோம். அதுக்கப்பறம் 45 நாள் கழிச்சுதான் மீதி 18 சென்டில் நடவு செஞ்சோம். மொத்தத்துல இதுவரை 50 முறை காய் பறிச்சுருக்கோம்.
9 டன் காய் கிடைச்சுருக்கு. இன்னும் 54 பறிப்பு பறிக்கலாம்னு எதிர்பாக்குறோம். செடிகளெல்லாம் நல்லா தளதளனு வளந்து நிக்குதுக. காய்ப்பும் கூடியிருக்கு. இன்னமும் 10 டன் வரை கத்திரி கிடைக்கும்னு எதிர்பாக்குறோம். கத்திரி இப்போதைய நிலவரத்துக்கு கிலோ பத்து ரூபாய்ல இருந்து, பதினஞ்சு ரூபாய் வரைக்கும் விக்குது. ஐப்பசி, கார்த்திகை மாசங்கள்ல இன்னமும் கூடுதல் விலை கிடைக்கும். எப்படிப் பாத்தாலும் கிலோவுக்கு பத்து ரூபாய் உறுதியா கிடைக்கும். மொத்தத்துல எல்லாச் செலவும் போக ஒரு லட்ச ரூபாய் வரைக்கும் கண்டிப்பா லாபம் கிடைக்கும்'' என்றார், மகிழ்ச்சியாக.
தொடர்புக்கு,
ஸ்டீபன், அலைபேசி 93603-44039
விமல், அலைபேசி 94423-65777
மூலிகைப் பூச்சிவிரட்டி
எருக்கு, நொச்சி, வேம்பு, புங்கன், முருங்கை, ஆடாதொடை ஆகியவற்றின் இலைகள் தலா இரண்டு கைப்பிடி எடுத்து, நன்றாக இடித்து, 10 லிட்டர் மாட்டுச் சிறுநீரில் நான்கைந்து நாட்கள் ஊறவைத்தால்... பூச்சிவிரட்டி தயார். 100 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் பூச்சிவிரட்டி என்ற அளவில் கலந்து பயன்படுத்தலாம்.
வசம்புக் கசாயம்
அரைக் கிலோ வசம்பை, 2 லிட்டர் தண்ணீரில் போட்டு, அது 1 லிட்டராக சுண்டும் வரை நன்றாகக் கொதிக்கவிட வேண்டும். பின் இறக்கி ஆற வைத்தால், வசம்புக் கசாயம் தயார்.
பூண்டுக் கரைசல்
அரைக் கிலோ பூண்டை, 2 லிட்டர் தண்ணீரில் போட்டு, அது 1 லிட்டராக சுண்டும் வரை நன்றாகக் கொதிக்கவிட வேண்டும். பின் இறக்கி ஆற வைத்தால், பூண்டுக் கரைசல் தயார்.
வேப்பங்கொட்டைக் கசாயம்
அரை கிலோ வேப்பங்கொட்டையைத் தட்டி உடைத்து, 2 லிட்டர் தண்ணீரில் போட்டு, அது 1 லிட்டராக சுண்டும்வரை நன்றாகக் கொதிக்கவிட வேண்டும். பின் இறக்கி ஆற வைத்தால், வேப்பங்கொட்டைக் கசாயம் தயார்.
வசம்புக் கசாயம், பூண்டுக் கரைசல், வேப்பங்-கொட்டைக் கசாயம் ஆகிய மூன்றையும்,
3 லிட்டர் மாட்டுச் சிறுநீரில் கலந்து மூன்று நாட்கள் வைத்திருக்க வேண்டும். பின் இந்தக் கரைசலில் 1 லிட்டரை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தால், தண்டுப்புழு உட்பட மற்ற பூச்சிகளும் கட்டுப்படும்.
Source:pasumaivikatan

No comments: