Saturday

வண்ணமீன் வளர்க்க ஆர்வம் இருக்கா

ன்றைக்கு வண்ண அலங்கார மீன் வளர்ப்பு மிகவும் நல்ல தொழிலாக வளர்ந்து வருகிறது. மீன் வளத்தை சார்ந்திருப்பவர்கள் அலங்கார மீன்வளர்ப்பிலும் ஈடுப்பட்டு நல்ல லாபம் பார்க்கலாம். உங்களுக்கு கூடுதல் வருமானமாகவும் அமையும். இதற்கான வாய்ப்பு வகைகளை பற்றி பார்ப்போம்.
குட்டிபோடும் மீன்கள்: முதல் முதலில் வண்ணமீன் உற்பத்தியைத் தொழிலாக ஆரம்பிப்பவர்கள் குட்டிபோடும் வண்ணமீன் ரகங்களைத் தேர்வு செய்து ஆரம்பித்தல் நல்லது. ஏனெனில் ஆண், பெண் வித்தியாசத்தை சுலபமாகப் பிரிக்க முடியும். ஆண் மீன் சிறியதாகவும் அதிக நிறமுடையதாகவும், கோனாபோடியம் எனும் மாற்றமடைந்த துடுப்புடனும் காணப்படும். பெண் மீன் பெரியதாகவும், சற்று நிறம் குறைந்தும் காணப்படும்.
வண்ணமீன்களின் நோய்: வண்ண மீன்கள் சரியாக பராமரிக்கப்படாததினாலும், நீரின் தரம் நல்ல முறையில் பேணாமையாலும், தேவைக்கு அதிகமாக உணவிடுவதினாலும் பிராணவாயு குறைந்தாலும், தொட்டியில் மீன் குஞ்சுகள் அதிக எண்ணிக்கையில் வைக்கப்பட்டாலும், அடிக்கடி ஏற்படும் வெப்ப வேறுபாடுகள் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளினாலும் பல்வேறு நோய்கள் ஏற்பட்டு பாதிப்படைகின்றன. சரியாக உணவு உண்ணாமலிருத்தல், துடிப்பாக நீந்தாமல் கரையோரமாக வருதல் போன்றவை மீன்கள் நோய்வாய்ப்பட்டமைக்கு அறிகுறியாகும். 5 பிபிஎம் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசலில் இரண்டு நிமிடம் மீன்களை முக்கி எடுப்பதன் மூலம் பெரும்பாலான நோய்களைத் தவிர்க்கலாம்.
அலங்கார தாவரங்கள்: அலங்கார நீர்த்தாவரங்களில் ஹைடிரில்லா, வேலம்பாசி, செரட்டோ பில்லம், நாஜால், கபோம்பா, பொட்டோ, மேஹிடான் ஆகியவை முக்கியமானவை. அலங்கார மீன் வளர்ப்பில் கண்ணாடி தொட்டிக்கு அழகு சேர்ப்பதில் அலங்கார நீர்த்தாவரங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. நீர்த்தாவரங்கள் மீன் வளர்ப்புத் தொட்டிகளின் வனப்பைக் கூட்டுவதோடு மட்டுமல்லாமல், பல்வேறு பயன்களையும் அளிக்கின்றன. நீர்த்தாவரங்கள் மீன்களின் சுவாசத்திற்கு வேண்டிய உயிர்வளியை, நீரில் உற்பத்தி செய்கின்றன. மேலும் மீன்களின் இனப்பெருக்கக் காலங்களில் இடப்படும் மீன் முட்டைகள் ஓட்டிக் கொள்ளவும், குஞ்சுகள் பாதுகாப்பாக மறைந்து வாழவும் உதவுகின்றன.
மீன் இனப்பெருக்க காலத்தில்: ஆண், பெண் இணை சேர்க்கும் முன் தனித்தனியாக சரியான உணவிட்டு தயார்படுத்த வேண்டும். தொட்டி நீரின் கார அமிலத்தன்மை 7.2 – 7.5 இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். சிமெண்ட் / கண்ணாடியினால் ஆன இனப்பெருக்கத் தொட்டியில் ஆண் மற்றும் பெண் மீன்களைத் தேவையான அளவில் இணை சேர்க்க வேண்டும். ஒரு முறை ஆண் மூலம் பெறப்படும் விந்தணுக்களை பெண் மீனானது தனது சினைப்பையில் 10 மாதங்களுக்கு பாதுகாத்து வைத்துக் கொள்ளும். சேகரிக்கப்பட்ட விந்தணுவைக் கொண்டு, தொடர்ந்து உற்பத்தியாகும் சினை முட்டைகள் கருவாக்கப்பட்டு, கருவின் உதவியுடன் தாயின் கருப்பையில் குஞ்சுகள் உருவாகின்றன.
பெண் மீனின் கருவாக்கம் முடிந்தவுடன், ஆண் மீன்களைப் பிரித்துவிட வேண்டும். கருவின் வளர்ச்சி மீன் இனங்கள் மற்றும் வெப்ப அளவைப் பொறுத்து 3 முதல் 8 வாரங்களில் முழுமையடைகிறது. ஓரு முறை கருவுற்ற ஒரு பெண் மீன் ஐந்திலிருந்து ஆறுவாரத்திற்கு ஓரு முறை என்று 8 – 10 முறை குட்டிபோடும் தன்மை கொண்டது. ஒரு நேரத்தில் ஒரு பெண் மீன் 50 குட்டிகள் வரை போடக் கூடும். மீன்களில் சில தாம் ஈன்ற குட்டிகளை உண்ணும் தன்மை கொண்டது. எனவே, தாய் மீனை வேறு தொட்டிக்கு மாற்றிட வேண்டும். பிறந்தகுஞ்சுகளுக்கு நீரில் உள்ள தாவர நுண்ணுயிரிகள், இன்புசேரியா, வேகவைத்த முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றை உணவாகக் கொடுக்கலாம்.
முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் மீன்கள்:
பருவமடைந்த ஆண் – பெண் மீன்களுக்கு தாவரம் மற்றும் விலங்கினப் புரதம் நிறைந்த உணவுகள், குறிப்பாக, உயிருள்ள புழுக்களை அளிக்க வேண்டும். அவை இருக்கும் நீரின் தரத்தினையும் முறையாகப் பராமரித்தால் சினை முதிர்ச்சி சிறப்பாக அமைவதுடன் முட்டையிடும் திறனும் அதிகரிக்கின்றது. சினை மீன்களை இரண்டு ஆண் மீனுக்கு ஒரு பெண்மீன் என்ற விகிதத்தில் தொட்டியில் இருப்பு செய்ய வேண்டும்.
இம்மீன்களின் முட்டைகள் ஒட்டும் தன்மையுடையதால் மீன்களின் எடையில் 5 – 6 மடங்கு எடையுள்ள நீர்பாசிகள் (அ) பின்னல் நீக்கப்பட்ட நைலான் கயிறுகளைத் தொட்டியில் வைக்க வேண்டும். தொட்டியிலிட்ட ஓரிரு நாட்களில் இனப்பெருக்கம் நடைபெற்று பெண் மீனால் சிதறப்படும் முட்டைகள் பாசியுடன் ஒட்டிக் கொள்ளும். அதே தருணத்தில் வெளிப்படும் ஆண் மீனின் சினைப்பாலால் முட்டைகள் கருவுறுகின்றன. வெண்மையான இறந்த முட்டைகளை நீக்கி, பின் கருவுற்ற ஆரஞ்சு நிற முட்டைகளுடன் கூடிய பாசிகள் / நைலான் கயிற்றை, பொரிக்கும் தொட்டிகளுக்கு மாற்ற வேண்டும். நீரின் வெப்பத்தைப் பொறுத்து 65 – 72 மணி நேரத்தில் முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிப்படும். அக்குஞ்சுகள் தன்னிடமுள்ள கருவினை உண்டு 3 நாட்கள் வரை வளரும். பின்பு, இன்புசேரியா நுண்ணுயிர் உணவளித்து பராமரித்து வர வேண்டும். பின்னர் குஞ்சுகளுக்கு டாப்னியா, ரத்தப்புழு ஆகியவற்றை உணவாக அளித்து வளர்க்க வேண்டும்.
வெளியீடு : மீன்வளத்துறை ஆணையர் அலுவலகம், சென்னை- 600006

No comments: