Thursday

புதர் நிலத்திலும் புதையல் எடுக்கலாம்... கலக்கல் வருமானம் தரும் கலப்புப் பயிர்கள்!

புதர் நிலத்திலும் புதையல் எடுக்கலாம்...
கலக்கல் வருமானம் தரும் கலப்புப் பயிர்கள்!
''விவசாயத்துல வெற்றி, தோல்வி சகஜம்தாங்க. ஆனா, குதிரைக்குக் கடிவாளம் போட்டமாதிரி எல்லாரும் செய்றதையே நாமளும் செஞ்சுட்டு 'நஷ்டம், நஷ்டம்’னு புலம்பக் கூடாது. நம்ம மண்ணுக்கு, சூழலுக்கு எது தோதுப்பட்டு வருமோ... அதை ஆர்வத்தோடயும் அர்பணிப்போடயும் செஞ்சா வெற்றி தானா வரும். இது என் அனுபவத்துல பாத்த உண்மை''
-இப்படி நம்பிக்கைத் தெறிக்கப் பேசுகிறார், சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்ப்பட்டி அருகேயுள்ள மருதன்குடி கிராமத்தைச் சேர்ந்த நாச்சியப்பன்.
முழுநேர விவசாயிகளே விழிபிதுங்கி நிற்கும் இக்காலக்கட்டத்தில்... பகுதி நேரத் தொழிலாக விவசாயத்தை வெற்றிகரமாக செய்து வரும் நாச்சியப்பனை, உச்சிவெயில் வேளையில் அவருடைய பண்ணையில் சந்தித்தோம். உற்சாகமாகப் பேசத் தொடங்கினார், அவர்.
''பிள்ளையார்ப்பட்டி  'இந்தியன் பேங்க்’ல அலுவலக உதவியாளரா இருக்கேன். விவசாயம் எனக்குப் புதுசில்ல. பரம்பரைத் தொழில்தான். ஆனா, நான் வேலைக்குச் சேந்த சமயத்துல எங்ககிட்ட நிலமெல்லாம் இல்லை. சொந்தமா தோட்டம் வாங்க வசதியும் இல்லை. ஆனாலும், விவசாயம் செய்யணும்ங்கிற ஆசை மனசுக்குள்ள இருந்துச்சு.
அப்படி இருக்குறப்போ... எட்டு வருஷத்துக்கு முன்ன நண்பர் ஒருத்தர் மூலமா இந்த இடம் விலைக்கு இருக்குறதைத் தெரிஞ்சுக்கிட்டேன். வந்து பாத்தப்போ, புதர் மண்டி தரிசுக்காடா கிடந்துச்சு. குளத்துக்குள்ள இறங்கி ஓடைப்பாதை வழியாத்தான் போகணும். அதனால, யாருமே வாங்க முன்வரல. அந்தக் காரணத்தை வெச்சே விலையும் கம்மியாத்தான் இருந்துச்சு. என் பட்ஜெட்டுக்குள்ள இருந்ததால, 'என்ன ஆனாலும் பரவாயில்லை’னு துணிஞ்சு நாலு ஏக்கரை வாங்கிட்டேன்.  
உழைப்பு கொடுத்த ஊதியம் !
வாங்குன கையோட ஒரு குடிசையைப் போட்டு அதுல தங்கி அதிகாலை நேரம், சாயங்கால நேரங்கள்ல புதரை ஒதுக்க ஆரம்பிச்சேன். வீட்டுப்பக்கம் போகாம இருக்கவே... என் மனைவியும் இங்க வந்து வேலைகளை செய்ய ஆரம்பிச்சாங்க. பேங்க் வேலை முடிச்சுட்டு வந்ததும்... தோட்ட வேலையை ஆரம்பிச்சுடுவேன். கொஞ்சம் கொஞ்சமா சரி பண்ணி, தோட்டமாக்கி போர் போட்டு அடி பைப் பொருத்திட்டேன். அதுக்கப்பறம் மாங்கன்னுகளை நட்டு வெச்சேன். அதுல ஊடுபயிரா காய்கறிகளையும் சாகுபடி பண்ணுனேன்.
அடி பம்புல அடிச்சுதான் செடிகளுக்கு தண்ணி ஊத்தினேன். மாங்கன்னுகளுக்குப் பக்கத்துல சின்னத் துளை போட்ட மண்பானையை வெச்சு அதுல தண்ணியை நிரப்பிடுவேன். அப்படியே வளத்த மாங்காய்ல கிடைச்ச வருமானத்தை வெச்சுதான் கொஞ்சம் கொஞ்சமா பக்கத்து இடங்களை வாங்குனேன். இப்போ எங்கிட்ட மொத்தம் 10 ஏக்கர் இருக்கு'' பெருமிதத்தோடு சொன்ன நாச்சியப்பன் தொடர்ந்தார்.
ஊடுபயிராக வாழை !
''இதுல 5 ஏக்கர்ல, என்.ஏ7, சக்கையா, பி.எஸ்.ஆர்னு நெல்லி ரகங்கள் இருக்கு. அதுல ஊடுபயிரா அல்போன்சா, இமாம்பசந்த், பங்கனப்பள்ளி ரக மாமரங்கள் இருக்கு. 5 ஏக்கர்ல பெங்களூரா, நீலம், செந்தூரம்னு மா இருக்கு. இதுல ஊடுபயிரா ஜி-9, ரஸ்தாளி, கதளினு வாழை ரகங்கள், பலா, காய்கறிகள், எலுமிச்சை, சப்போட்டானு கலந்து வெச்சுருக்கேன்.
நிலத்தோட வேலி ஓரங்கள்ல குமிழ், தேக்கு, ரோஸ்வுட், செஞ்சந்தனம் மாதிரியான மரங்கள் இருக்கு. மரங்களுக்கு 4 வயசாச்சு. வேலி ஓரமா இருக்கறதால, எல்லா மரங்களும் நல்லா வளர்ந்துருக்கு.
சும்மாவே விளையும்போது செலவெதற்கு? !  
ஆரம்பத்துல ரசாயன விவசாயம்தான் செஞ்சிக்கிட்டு இருந்தேன். இடையில ஒரு தரம் மா வுக்கு மருந்தடிக்க நேரமில்லாம விட்டுட்டேன். ஆனா, வழக்கமா கிடைக்குற அதே மகசூல் கிடைச்சது. 'அடப்பாவி..? சும்மாவே விளையுறதுக்குப் போயா இத்தனை காசை கொட்டுனோம்’னு ஆகிப்போச்சு. அந்த நேரத்துலதான் 'பசுமை விகடன்' அறிமுகமாச்சு. அதைப் படிக்க ஆரம்பிச்ச பிறகு, 'இனி இயற்கை விவசாயம்தான்’னு முடிவுக்கு வந்துட்டேன். அதுக்குப் பிறகு, நடவு செய்த நெல்லி முதற்கொண்டு எல்லாத்துக்குமே இயற்கைதான். 5 வருஷமா ரசாயனத்தைக் கையில தொடுறதுகூட இல்லை.
சொட்டு நீர்... சொந்தமா அமைச்சா செலவு குறையுது !
இயற்கைக்கு மாறினதும் பஞ்சகவ்யா தயாரிச்சு மா மரங்களுக்கும், நெல்லிக்கும் கொடுத்தேன். நல்ல மாற்றம் தெரிஞ்சது. ஆனா, பஞ்சகவ்யாவை ஸ்பிரே செய்றப்ப நாசில் அடைச்சிக்குது. அதுனால பஞ்சகவ்யாவை நிறுத்திட்டேன். இப்ப இ.எம் கரைசலைத் தயாரிச்சுக் கொடுக்குறேன். அதோட கடைகள்ல விக்கிற ஆர்கானிக் இடு பொருட்களையும் அப்பப்ப போடுறேன். எல்லா மரத்துக்கும் சொட்டுநீர்ப் பாசனம்தான்.
தேவையானப் பொருட்களை வாங்கிட்டு வந்து நானே சொட்டு நீர்க் குழாய்களைத் தேவைக்கேத்த மாதிரி அமைச்சுக்கிட்டேன். அதனால செலவு ரொம்ப குறைவாத்தான் வந்துச்சு. மத்தபடி எனக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகள், ஆலோசனைகளை, குன்றக்குடி கே.வி.கேயில் கேட்டுக்குவேன்'' என்ற நாச்சியப்பன் சாகுபடித் தொழில்நுட்பங்களைச் சொல்லத் தொடங்கினார்.
கால்சியம் பற்றாக்குறைக்கு ஜிப்சம்!
'நெல்லிக்கு 16 அடிக்கு 16 அடி இடைவெளியில் ஒன்றரை கன அடியில் குழியெடுத்து... ஒவ்வொரு குழிக்குள்ளும் 5 கிலோ குப்பை எரு, 2 கிலோ நெல் உமி ஆகியவற்றைப் போட்டு நட வேண்டும். முதல் ஆண்டு முடிவில், ஒவ்வொரு செடியின் தூரிலும் 10 கிலோ குப்பை எருவைப் போட்டு, அதன் மேல் ஒரு லிட்டர் தண்ணீரில் 5 மில்லி இ.எம். கலந்த கரைசலை ஊற்ற வேண்டும். இரண்டாம் ஆண்டில் இருந்து, 6 மாதங்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு மரத்துக்கும் 10 கிலோ குப்பை எரு, 5 கிராம் அசோட்டோ பிளஸ், 5 கிராம் சூடோமோனஸ் மூன்றையும் கலந்து கொடுக்க வேண்டும்.
அதுபோக, கால்சியம் பற்றாக்குறை இருந்தால், ஆண்டுக்கு ஒரு முறை ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு கிலோ ஜிப்சம் கொடுக்க வேண்டும். ஜூன் -ஜூலை, நவம்பர்-டிசம்பர் மாதங்களில் இலை வழித் தெளிப்பாக... ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 2 கிராம் சூடோமோனஸ், 2 கிராம் அசோட்டோ பிளஸ், ஒரு கிராம் கருப்பட்டி என்ற விகிதத்தில் கலந்து தேவையான அளவுக்குத் தெளிக்க வேண்டும்.
மூடாக்கு மட்டும் போதும் !
'மா’வுக்கு 30 அடிக்கு 30 அடி இடைவெளிவிட வேண்டும். நான்கு செடிகளுக்கு இடையில் எலுமிச்சை, சப்போட்டா, பலா, வாழை ஆகியவற்றை நடவு செய்யலாம். நடவில் இருந்து, 3 ஆண்டுகள் வரை
6 மாதங்களுக்கு ஒரு முறை மாட்டுச் சாணம் கலந்த குப்பை எருவை ஒரு செடிக்கு
10 கிலோ என்ற அளவில் போட வேண்டும். மரங்கள் பெரிதான பிறகு இலை தழைகளை மூடாக்காகப் போட்டு... ஆண்டுக்கொரு முறை இடை உழவு செய்தால் போதுமானது.
நவம்பர்-டிசம்பர் மாதங்களில் 15 நாட்களுக்கு ஒரு முறை இலை வழித் தெளிப்பாக... ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 கிராம் அசோட்டோ பிளஸ், 3 கிராம் வெட்ரீசன் (பயிர் வளர்ச்சி ஊக்கி) என்ற விகிதத்தில் கலந்து தேவையான அளவுக்குத் தெளிக்க வேண்டும். வாழைக்கு மாதம்தோறும் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 கிராம் அசோட்டோ பிளஸ், 2 மில்லி டிரைக்கோ டெர்மா விரிடி எனக் கலந்து தேவையான அளவுக்கு இலைவழித் தெளிப்பாகத் தெளிக்க வேண்டும்’
2 டன் நெல்லி! 9.5 டன் மா !
சாகுபடிப் பாடம் முடித்த நாச்சியப்பன், மகசூல் மற்றும் வருமானம் பற்றிபேசும்போது... ''இந்த 10 ஏக்கர்லயும் சேர்த்து மொத்தம் 480 மா, 320 நெல்லி, 250 வாழை, 80 பலா, 40 எலுமிச்சை, 20 சப்போட்டா, 40 செஞ்சந்தனம், 60 ரோஸ்வுட், 3 குமிழ் மரங்கள் இருக்குது. பலாவுல 3 மரங்கள் மட்டும்தான் காய்க்குது. நெல்லியில ரெண்டு வருஷமா மகசூல் கிடைச்சுட்டிருக்கு. ஒரு வருஷத்துக்கு... 2 டன் நெல்லி; 4 டன் பெங்களூரா; நீலம், செந்தூரம் ரகங்கள்ல கலந்து 4 டன்; இமாம் பசந்த், அல்போன்சா ரகங்கள்ல கலந்து 1 டன்; அரை டன் பங்கனப்பள்ளினு மகசூல் கிடைக்குது. இதுபோக, எலுமிச்சையில ரெண்டு சீசனுக்கும் சேத்து 60 ஆயிரம் காய்களும், ஒரு டன் சப்போட்டாவும் கிடைக்குது.  
ஆண்டுக்கு லாபம் 1,50,000 !
என்.ஏ-7, சக்கையா ரக நெல்லிக்கு சராசரியா 15 ரூபாய் விலை கிடைக்குது. அந்த வகையில 2 டன்னுக்கு 30 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். பெங்களூரா கிலோ 5 ரூபாய்னு விக்குது. நீலம், செந்தூரம் ரகங்கள் கிலோ 13 ரூபாய்னு விக்குது. இமாம் பசந்த், அல்போன்சா ரகங்களுக்கு கிலோவுக்கு 30 ரூபாய் வரைக்கும் விலை கிடைக்கும்.
பங்கனப்பள்ளி கிலோ 20 ரூபாய்னு விக்குது. மொத்தமா மா மூலமா ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது. ஒரு எலுமிச்சை 50 பைசா வீதம் 60 ஆயிரம் காய்க்கு 30 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். சப்போட்டாவை உள்ளூர்லயே கிலோ 12 ரூபாய்னு வித்துடறேன். இதுல 12 ஆயிரம் ரூபாய் கிடைக்குது. ஒரு தார் சராசரியா 80 ரூபாய்ங்கிற கணக்குல வாழை மூலமா 20 ஆயிரம் ரூபாய் கிடைக்குது.
ஆகமொத்தம், 10 ஏக்கர்ல இருந்து வருஷத்துக்கு எப்படியும் ரெண்டு லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் அளவுக்கு வருமானம் கிடைக்குது. இதுல 50 ஆயிரம் ரூபாய் செலவுனு வெச்சுக்கிட்டா, ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லாபம்.
இன்னும் பதினஞ்சு வருஷங்கழிச்சு வேலி ஓரங்கள்ல இருக்கற மரங்கள் மூலமா ஒரு கணிசமான வருமானம் கிடைச்சுடும். ஓய்வுநேர விவசாயத்துல இவ்வளவு லாபம் கிடைக்கிறதே எனக்கு மனசுக்கு நிறைவா இருக்கு'' என்று சந்தோஷமாக விடை கொடுத்தார், நாச்சியப்பன்.  
தொடர்புக்கு,நாச்சியப்பன், 
செல்போன்: 94420-43190

ஆர். குமரேசன் ,படங்கள்: எஸ். சாய் தர்மராஜ்
Source: pasumaivikatan

No comments: