Wednesday

முயல் இறைச்சி


மனிதர்களுக்குத் தேவையான புரதச்சத்து மிகுந்த உணவினை அளிப்பதில் வளர்ப்பு விலங்குகளின் பங்கு வெகுவாக இருந்து வருகின்றது. இத்தகைய வளர்ப்பு விலங்குகளிலிருந்து பெறப்படும் இறைச்சியானது பெருமளவு புரத அமிலங்களையும், கொழுப்பு அமிலங்களையும் மற்றும் கனிமச் சத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது. இறைச்சி என்பது முழுவதுமாகச் செரிக்கப்படக் கூடியதும், அனைத்துச் சத்துக்களையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான சரிவிகித உணவுப் பொருளாகும்.

இன்றைய மாறிவரும் உணவுப் பழக்க வழக்கங்கள், மேலைநாடுகளின் நாகரீக மோகம் மற்றும் மென்பொருள் தொழிலகங்களில் பணிபுரியும் இன்றைய யுவன்களும் யுவதிகளும் அதிக உடல் உழைப்பு இல்லாமல் உட்கார்ந்துகொண்டே செயல்படும் நிலையில் உள்ளனர். அதனால் எரிசக்தி அவர்களில் அவ்வளவாக செலவாவதில்லை. ஆனால் அதே சமயத்தில் எரிசக்தி நிறைந்த, கொழுப்புச்சத்து அதிகம் கொண்ட உணவுப் பொருட்களை அதிகமாக எடுத்துக்கொள்கின்றனர்.
இதனால் அறுபது வயதில் வரவேண்டிய ரத்தக்கொதிப்பும், மாரடைப்பும், சர்க்கரை நோயும் புற்றுநோய்களும் அவர்களை இருபத்து ஐந்து வயதிலேயே ஆட்கொண்டு விடுகின்றன. இதனால் இன்றைய யுவன்களும் யுவதிகளும் தாங்கள் உட்கொள்ளும் உணவில் குறைவான கொலஸ்டிரால் கொண்ட இறைச்சி உணவுப் பொருட்களைக் கவனமாகத் தேர்ந்தெடுத்து உண்ண விரும்புகின்றனர். இத்தகைய குறைந்த உப்புச்சத்து மற்றும் எரிசக்தி குறைவான ஆனால் அதே சமயத்தில் உடல்நலத்தையும் அன்றாடத் தேவைக்குத் தேவையான எரிசக்தியைத் தரவல்ல உணவுப் பொருட்களைத் தேடி உண்கின்றனர். அத்தகைய யுவன்கள் மற்றும் யுவதிகளின் தேவையை பூர்த்தி செய்யும் விதத்தில் இன்று முயல் இறைச்சி உள்ளது என்று தாராளமாகச் சொல்லலாம்.
தற்பொழுது முயல் இறைச்சியில் உள்ள சத்துக்களையும் முயல் இறைச்சியின் சிறப்புக்களையும் பற்றி பார்ப்போம்.
முயல் இறைச்சியின் சிறப்புக்கள்:
* முயல் இறைச்சியானது இதர இறைச்சி வகைகளுடன் ஒப்பிடும்பொழுது மிகவும் குறைவான கொலஸ்டிரால் கொண்டது. அதாவது 100 கிராம் முயல் இறைச்சியில் 50 மில்லி கிராமே கொலஸ்டிரால் உள்ளது. அதே போல் முயல் இறைச்சியில் உப்புச்சத்தும் மிகவும் குறைவாகவே உள்ளது. அதாவது 100 கிராம் முயல் இறைச்சியில் 40 மில்லிகிராம் அளவே சோடியம் எனப்படும் உப்புச்சத்தும் உள்ளது.
* மற்ற இறைச்சிகளுடன் ஒப்பிடும்பொழுது முயல் இறைச்சியில் ஸ்டியரிக் மற்றும் பால்மிடிக் போன்ற செரிவான கொழுப்பு அமிலங்கள் குறைவாகவும், இதயத்தைப் பாதிக்காத பன்முனை கொழுப்பு அமிலங்களான லினோலியிக் மற்றும் லினோலினிக் அமிலங்கள் அதிகமாகவும் உள்ளன. எனவே ரத்தக்கொதிப்பு மற்றும் இதய நோய் உள்ளவர்களும் தாராளமாக முயல் இறைச்சியை தங்களது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
* மேலும் முயல் இறைச்சி எளிதில் செரிக்கவல்ல புரதச் சத்துக்களையும் கொண்டுள்ளது.
* நிக்கோட்டினில் அமிலம் (13 மி.கி/கி.கி. இறைச்சியில்) முயல் இறைச்சியில் அதிகம் உள்ளது. நமது அன்றாட உடல் தேவைக்கான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்களும் தேவையான அளவு முயல் இறைச்சியில் உள்ளன.
* முயல் இறைச்சியின் உடல் எடையில் அரெஸ்சிங் பர்ஸென்டேஜ் 50 முதல் 60 சதவீதமாகும்.
* முயல் இறைச்சியில் சதைப்பகுதி மற்றும் எலும்பின் விகிதமானது 5: 1.2 ஆகும். கிட்டத்தட்ட உடற்கூடின் 70 சதவீதமானது உண்ணக்கூடிய இறைச்சியால் ஆனது ஆகும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் முயல் இறைச்சியினை எடுத்துக்கொள்ளலாம். ஏனென்றால் முயல் இறைச்சி நல்ல தரமான, எளிதில் செரிக்கவல்ல புரதச் சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
* குளிர்காலம் மற்றும் கோடை காலம் என எல்லா பருவ காலங்களிலும் முயல் இறைச்சியை உண்ணலாம்.
* முயல் இறைச்சி உண்பதைத் தவிர்க்கக்கூடிய எந்த மதக் கோட்பாடுகளும் இல்லை.
முயல் இறைச்சியிலுள்ள சத்துப்பொருட்கள் இதர இறைச்சியிலுள்ள சத்துப் பொருட்களுடன் கீழ்க்கண்ட அட்டவணையில் ஒப்பிடப்பட்டுள்ளது. எனவே சுவை நிறைந்ததும் அதிக சத்துக்களையும் கொண்டமுயல் இறைச்சியினை தேவையான அளவு உண்டு இதயநோய், ரத்தக்கொதிப்பு இன்றி உடல்நலனைப் பேணிக்காத்து பயன்பெறுவோமாக..



இறைச்சி - புரதம் (%) - கொழுப்பு (%) - நீர்ச்சத்து(%) - கொலஸ்டிரால் சோடியம்(100 கி/ கிராம்) - கால்சியம் (100 கி/ கிராம்) - பாஸ்பரஸ்(100 கி/ கிராம்)
முயல்இறைச்சி - 21 - 11 - 68 - 50 - 40 - 20 - 350
மாட்டிறைச்சி - 16 - 28 - 55 - 95-125 - 65 - 12 - 195
பன்றியிறைச்சி - 12 - 45 - 42 - 110 - 70 - 10 - 195
கோழியிறைச்சி - 20 - 11 - 67 - 60 - 70 - 10 - 240
ஆட்டிறைச்சி - 15 - 15 - 60 - 85-95 - 75 - 10 - 165



மருத்துவர் மூ.சுதா மற்றும் முனைவர் வெ.பழனிச்சாமி,
வேளாண் அறிவியல் நிலையம்,
குன்றக்குடி

ஸோர்ஸ்: http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=16472&ncat=7

No comments: