Thursday

மனதைக் குளிர வைக்கும் மாடித்தோட்டம்!




மனதைக் குளிர வைக்கும் மாடித்தோட்டம்!


மனதைக் குளிர வைக்கும் மாடித்தோட்டம்! - பசுமை விகடன் - 2013-06-10

தோட்டம் வாங்கி, பண்ணை வீடு அமைக்க வேண்டும்’ என்பது பலருடைய ஆசையாக இருக்கும். ஆனால், பெரும்பாலானவர்களுக்கு பல்வேறு சூழ்நிலைகளால், வீட்டுக்குள்ளேயே தோட்டம் அமைப்பதுதான் சாத்தியமாகி விடுகிறது. அத்தகையோரில் ஒருவர்தான், சென்னையை அடுத்த வானகரம் ராஜீவ் நகர் ஸ்ரீதர். ஆனால், தன்னுடைய இந்த வீட்டுத்தோட்டத்தையே… பண்ணை வீட்டுத் தோட்டத்துக்கு இணையாகப் பராமரிப்பதோடு… அதிலேயே ஏக சந்தோஷத்தையும் அனுபவித்து வருகிறார் ஸ்ரீதர்.

”30 வருஷமா சென்னையிலதான் இருக்கேன். ஒரு தனியார் நிறுவனத்துல வேலை செய்றேன். ரொம்ப நாளா ‘பசுமை விகட’னைப் படிச்சுட்டு வர்றேன். அதனால எனக்கு விவசாயத்து மேல ரொம்ப ஆர்வம். முன்ன வாடகை வீட்டுல இருந்ததால அங்க ஒண்ணும் செய்ய முடியல.
ஒரு வருஷத்துக்கு முன்ன இந்த வீட்டைக் கட்டி குடிவந்தோம். 3 அடுக்கு மாடில முதல், இரண்டாவது மாடில நாங்க இருக்கோம். மூணாவது மாடில 650 சதுர அடியை தோட்டத்துக்காகவே ஒதுக்கிட்டேன். வீட்டுக்குத் தேவையான கீரை, புதினா, கொத்துமல்லி, தக்காளி, பூக்களெல்லாம் மாடித் தோட்டத்துலயே வெளஞ்சுடுது” என்று முன்னுரை கொடுத்த ஸ்ரீதர், தொடர்ந்தார்.
”பிளாஸ்டிக் வாளிகள்லதான் செடிகளை வளக்குறேன். வாளியோட பக்கவாட்டுல சின்ன ஓட்டை போட்டுட்டு அதுல, மணல், செம்மண், மாட்டு எரு எல்லாத்தையும் நிரப்பி, விதைச்சுடுவேன். வீணாகுற காய்கறி, பழக்கழிவுகளயும் போடுறதால செடிகள் நல்லா வளருது. தினமும் ரெண்டுவேளை தண்ணி ஊத்துறதோட சரி.
பருப்புக் கீரை, தண்டுக் கீரை, முடக்கத்தான், மணத்தக்காளி, தூதுவளை, புளிச்சக் கீரை, புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி, தக்காளி, கத்திரி, காலிஃப்ளவர், சேனைக்கிழங்கு, பச்சை மிளகாய்னு நிறையச் செடிகள் இருக்கு. இதில்லாம, பிரண்டை, எலுமிச்சை, காராமணி, மாதுளை, கொய்யா, கருந்துளசி, சிறியாநங்கை, திருநீற்றுப்பச்சிலை, சோத்துக்கத்தாழை, பாரிஜாதம், கனகாம்பரம், மஞ்சள் கனகாம்பரம், சாமந்தி, வெள்ளைச் சாமந்தி, ரோஜா, ஜாதிமல்லி, கோழிக்கொண்டை, மைசூர் மல்லி, செம்பருத்தி, வாஸ்து பூ, அன்னாசி, கரும்பு, வெத்தலைனு கிட்டத்தட்ட நூறு செடிகளுக்கு மேல வெச்சுருக்கேன்” என்று பிரமிக்க வைத்த ஸ்ரீதர், சாகுபடி முறைகளைச் சொன்னார்.
”ஒரு வாளியில ஒரே வகை விதையை மட்டும் விதைக்காம கலந்து விதைக்கணும். கீரைனா, ரெண்டு வகை கீரைகளைப் போடணும். சேனையோடு பூக்களை நடலாம். புதினாவோட கொத்துமல்லியை நடலாம்.
2 லிட்டர் தண்ணில, 100 மில்லி வேப்பெண்ணெய், கொஞ்சம் மஞ்சள் தூள், கொஞ்சம் சோப்புத்தூள் கலந்து அப்பப்ப செடிகள்ல தெளிச்சா, பூச்சிகள் வராது. அப்படியும் சமயங்கள்ல பூச்ச்சிகள் வந்துடறதால… மாடியை சுத்திலும் வலை பின்னலாம்னு இருக்கேன்.
காய்கறிச்செடிகள்ல காய்ப்பு முடிஞ்சதும், செடிய வெட்டி விட்டு தண்ணி ஊத்துனா, திரும்பவும் துளிர் விட்டுடும். வெட்டுன இலை-தழைகளை மூடாக்கா போட்டுடணும். செங்கல்லை வெச்சு கிரானைட் கல் இல்லனா மரப் பலகைய போட்டு, அது மேல வாளிகளை வெச்சா… கட்டடத்துக்கு பாதிப்பு வராது. மழைனால வாளிகள்ல தண்ணி நிரம்பிடுச்சுனா அதை வெளியேத்திடணும்’ என்ற ஸ்ரீதர் நிறைவாக,
‘மாடித்தோட்டத்தைப் பொருத்தவரை கவனிப்பும், பராமரிப்பும் ரொம்ப முக்கியம். எங்க வீட்டுக்குத் தேவையான காய்கறிகள், பூக்களுக்கான செலவே இல்லை. அதோட, எனக்கு சர்க்கரை நோய் இருக்கறதால, தோட்ட வேலைகளை செய்றதே எனக்கு போதுமான உடற்பயிற்சியாவும் இருக்கு. நமக்குத் தேவையானதை நாமளே உற்பத்தி பண்றோம்கிற மகிழ்ச்சியும் இருக்கு. அதனால, உடம்பும் மனசும் எப்பவும் தெம்பா இருக்கு” என்று சொல்லி விடை கொடுத்தார்.
தொடர்புக்கு, ஸ்ரீதர், செல்போன்: 90434-13447.
Source: http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=32829

No comments: