Saturday

கொத்தமல்லி சாகுபடி அமோகம் : ஐ.டி.யைத் துறந்த விவசாயி சாதனை

விவசாயத்தில் குடும்பம் தத்தளித்தபோது, ஐ.டி. வேலையைத் தைரியமாகத் துறந்துவிட்டு விவசாயத்தில் இறங்கிய இன்ஜினீயரிங் பட்டதாரி கொத்தமல்லி சாகுபடியில் சாதனை படைத்திருக்கிறார்.

தேனி மாவட்டம் கம்பம், சின்னமனூர், உத்தமபாளையம், கே.கே. பட்டி, நாராயணதேவன்பட்டி ஆகிய பகுதிகளில் திராட்சை, தென்னை அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் நோய் தாக்குதல், விலை குறைவு போன்ற பல பிரச்சினைகளால் விவசாயிகள் மாற்று விவசாயத்தில் இறங்கிவிட்டனர்.
இதற்கிடையில், கம்பத்தைச் சேர்ந்த பட்டதாரியான கே.பி.ராஜேஸ்வரன் கம்பம் அருகே கே.கே.பட்டியில் கொத்தமல்லி சாகுபடியில் சாதனை படைத்து மற்ற விவசாயிகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார்.
வேதனையில் விளைந்தது
“பி.இ. முடித்துவிட்டுச் சென்னையில் தனியார் ஐ.டி. நிறுவனத்தில் கைநிறையச் சம்பளத்துடன் வேலை செய்துவந்தேன். எங்கள் குடும்பம் பல தலைமுறையாகத் தென்னை விவசாயம் செய்துவந்தனர். ஆனால், தென்னையை நோய் தாக்கி விளைச்சல் குறைந்தது. தென்னை மரங்கள் கருகியதால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்து ஐ.டி. வேலையை உதறிவிட்டுச் சொந்த ஊருக்கு வந்துவிட்டேன். கடந்த 5 ஆண்டுகளாக விவசாயத்தில் ஈடுபட்டுவருகிறேன்” என்கிறார் ராஜேஸ்வரன்.
தன்னுடைய நண்பர்கள், தோட்டக்கலை துறை அதிகாரிகள் ஆலோசனையின்படி கடந்த ஆண்டு 15 ஏக்கரில் முதன்முறையாகக் கொத்தமல்லி சாகுபடி செய்துள்ளார். ஒரு ஏக்கரில் கொத்தமல்லி சாகுபடி செய்ய விதை, நடவு கூலி, களைக்கொல்லி தெளித்தல் என ரூ.20 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம்வரை செலவு ஏற்பட்டது. இயற்கை உரம் வைத்துச் சொட்டு நீர் பாசன முறையைக் கையாண்டபோது, 45 நாட்களில் அறுவடைக்குத் தயாராகிவிடுகிறது.
நேரடி கொள்முதல்
ஒரு ஏக்கருக்கு 5 ஆயிரம் கிலோவரை கொத்தமல்லி கிடைத்தது. மார்க்கெட்டில் தற்போது சராசரியாக ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரை விலை போகிறது. செலவு போக ஏக்கருக்கு ரூ.70 ஆயிரம் லாபம் கிடைத்தது. சென்னை, மதுரை, கேரளம் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் இங்கு வந்து மொத்தமாகக் கொத்தமல்லி வாங்கிச் செல்கின்றனர்.
கொத்தமல்லி சாகுபடியில் நோய் தாக்குதல் குறைவு. சந்தைப்படுத்துவது மிகவும் எளிது. கொத்தமல்லிக்கான தேவை எப்போதும் இருப்பதால் ஆண்டு முழுவதும் இதைச் சாகுபடி செய்யலாம். கோடை காலத்தில் சாகுபடி செய்தால் செலவைக் கணிசமாகக் குறைக்க முடியும். செம்மண், வண்டல் நிலங்கள் கொத்தமல்லி சாகுபடிக்கு ஏற்றவை. செம்மண் பூமியில் நன்கு செழித்து வளரும். விதை வாங்கும்போது தரமான விதைகளைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.
“தென்னை விவசாயத்தில் நஷ்டம் அடைந்த எனக்குக் கொத்தமல்லி சாகுபடிதான் இப்போது கைகொடுக்கிறது” என்கிறார் ராஜேஸ்வரன்.
கொத்தமல்லி சாகுபடி பற்றி கூடுதல் விவரங்களை அறிய: 97896 40999

Source: tamil.thehindu.com

No comments: