Thursday

சிப்பிக்காளான் வளர்ப்பு 200 சதுர அடி குடிசையில் மாதம் ரூ.10 ஆயிரம்

குறைந்த இடவசதியே போதும். ஒரு படுகையில் இருந்து ஒன்றரை கிலோ. மாதம் ரூபாய் பத்தாயிரம் வருமானம்.

''விவசாயம்தான் எங்க பரம்பரைத் தொழில். ஆனாலும், அதுல தொடர் நஷ்டம் ஏற்படவே, விவசாயத்தை உதறிட்டு வேற வேலைக்குப் போயிட்டேன். அதுக்குப் பிறகு, ஒரு யோசனையோட நண்பர் மோகன்தாஸோட சேர்ந்து மறுபடியும் விவசாயத்துல கால் வெச்சேன்... இன்னிக்கு நல்ல வருமானம் பாக்குறேன். இதுக்கெல்லாம் காரணம்... பசுமை விகடன் கொடுத்த நம்பிக்கையும், வழிகாட்டுதலும், தைரியமும்தான்'' என்று நெகிழ்ந்து போய்ச் சொல்கிறார் திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகேயுள்ள கன்னியாபுரத்தைச் சேர்ந்த ராமசாமி.
         நண்பர் மோகன்தாஸோடு, தோட்டத்திலிருக்கும் காளான் பண்ணையை நமக்குச் சுற்றிக் காட்டியபடியே பேச்சைத் தொடர்ந்த ராமசாமி, ''விவசாயத்தைக் கை விட்டதும், துபாய்ல டிரைவர் வேலைக்குப் போயிட்டேன். இருந்தாலும் அவ்வளவு லேசுல விவசாய அனுபவத்தையும், அதன் மூலமா கிடைச்ச மனநிம்மதியையும் மறக்க முடியல. துபாய்ல இருந்து ஊருக்குத் திரும்பின சமயத்துல, 'பசுமை விகடன்' படிக்கறதுக்கு வாய்ப்பு கிடைச்சுது. அதைப் படிக்க, படிக்க எனக்குள்ள ஏகப்பட்ட நம்பிக்கை ஏற்பட்டுச்சி. திரும்பவும் துபாய் போற முயற்சியைக் கைவிட்டுட்டு, விவசாயத்துலயே மறுபடியும் இறங்கிட்டேன்.


         என்னோட ரெண்டரை ஏக்கர் நிலத்துல, அரை ஏக்கர்ல மட்டும் ஜீவாமிர்தம் கொடுத்து கத்திரிக்காய் போட்டேன். காரல் இல்லாத, பசுமை மாறாத காயா விளைஞ்சு வந்ததால, மார்க்கெட்டுல என் தோட்டத்துக் காய்களுக்கு நல்ல மவுசு. கொண்டு போனதுமே மொத்தமும் வித்துத் தீர்ந்து போற அளவுக்கு எனக்கு பேரு கிடைச்சுது. அதைத் தொடர்ந்து, விவசாயத்துல தீவிரமா கவனத்தைத் திருப்பினேன்.

       ஸ்பின்னிங் மில்லுல வேலை பார்த்துட்டிருந்த நண்பர் மோகன்தாஸ், அடிக்கடி என் தோட்டத்துக்கு வருவார். அவருக்கும் என்னைப் போலவே விவசாயத்துல ஆர்வம் அதிகம். அவரும் 'பசுமை விகடன்' இதழை தொடர்ந்து படிச்சுட்டே இருப்பார். அதுல இருக்கற விஷயங்களையெல்லாம் ரெண்டு பேரும் விவாதிப்போம். அதையெல்லாம் வெச்சு, மேற்கொண்டு ஏதாவது செய்யலாமானு பேசிட்டே இருப்போம். ஒரு தடவை காளான் வளர்ப்புப் பற்றி கட்டுரை வந்துது. அதிக முதலீடு இல்லாம, குறைஞ்ச இடத்துலயே நல்ல வருமானம் பாக்கலாம்னு படிச்சதும்... எங்களுக்கு ஆச்சர்யமா போச்சு. அந்த நிமிஷமே காளான் பண்ணை வைக்கலாம்னு முடிவெடுத்தோம்.

காளான் பண்ணை வெச்சிருக்கற விவசாயிகளோட பண்ணைகளுக்குப் போயி பாத்துட்டு வந்தோம். எங்களுக்கு நம்பிக்கை வந்ததும்... 'இதுதான் நமக்கான தொழில்னு முடிவு செஞ்சு சிப்பிக்காளான் வளர்ப்புல இறங்கிட்டோம். முதல்ல என்னோட தோட்டத்துல சின்னதா ஒரு குடிசை போட்டு உற்பத்தி செஞ்சிப் பாத்தோம். அக்கம்பக்கத்துல இருக்குறவங்களே தேடி வந்து வாங்கிட்டு போகவே... நம்ம முயற்சி வெற்றிதான்னு ரெண்டு பேருக்கும் ஒரே சந்தோஷம்'’ என்று ராமசாமி குஷியோடு சொல்லி நிறுத்தினார்.

        கிடைத்த இடைவெளியில் பேச ஆரம்பித்த மோகன்தாஸ், ''இதன் மூலமா, நம்மளால காளானை நல்லபடியா வளர்த்து லாபம் பார்க்க முடியும்னு எங்களுக்கு நம்பிக்கை வந்துச்சு. உடனே வேலையை விட்டுட்டு, நானும் ராமசாமியோட கைகோத்தேன். எங்க வீடு இருக்கறது திண்டுக்கல், உழவர் சந்தைக்கு பின்னாலதான். வீட்டுக்கு முன்ன கொஞ்சம் காலி இடம் உண்டு. அதுல ஒரு குடிசையைப் போட்டு காளான் வளர்க்க ஆரம்பிச்சோம். அக்கம்பக்கம் இருக்குறவங்களுக்கு அதைக் கொடுத்து பழக்கினோம். இப்ப மூணு குடிசை போட்டு வளர்க்கிறோம். அப்படியிருந்தும்கூட சப்ளை செய்ய முடியல. அந்தளவுக்கு கிராக்கி இருக்கு'' என்று தானும் சந்தோஷம் பொங்கினார்.

குளுகுளுனு இருக்கணும் குடிசை!

 'சிப்பிக்காளான் வளர்க்க 10 அடி அகலம், 20 அடி நீளம், 6 அடி உயரத்தில் தென்னை ஓலை கொண்டு குடிசை அமைக்கவேண்டும். தரைப்பகுதியில் சிமென்ட் மூலம் தளம் அமைத்து, அதற்கு மேல் ஒரு அடி உயரத்துக்கு ஆற்று மணலைப் பரப்ப வேண்டும். இதன்மூலம் அறையின் ஈரப்பதம் ஒரே அளவில் இருப்பதோடு, தண்ணீரும் குறைவாகச் செலவாகும். குடிசைக்குள் 20 முதல் 28 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும், காற்றின் ஈரப்பதம் 85 சதவிகித அளவுக்குக்குக் குறையாமலும் இருப்பது போல் பராமரிக்க வேண்டும். இதற்காக அடிக்கடி தண்ணீர் தெளித்துக் கொண்டே இருக்க வேண்டும். நூல் சாக்குகளை கட்டித் தொங்கவிட்டு, அதை அடிக்கடி ஈரமாக்கிக் கொண்டிருப்பதும் நல்ல பலன் தரும். காற்றோட்டத்தை நன்கு பராமரிப்பதும் முக்கியம். அது இல்லாவிட்டால், அறைக்குள் கரியமில வாயுவின் அடர்த்தி அதிகமாகி காளானின் வளர்ச்சி பாதிக்கப்படும்.

200 கிராம் விதை...3 கிலோ வைக்கோல்!
         அறை தயாரானதும், காளான் படுகைகளை தயார் செய்ய வேண்டும். அதற்கு முன்பாக, காளான் உற்பத்தியாளர்களிடம் இருந்து விதைப்புட்டிகளை (தாய்விதை) வாங்கவேண்டும். காய்ந்த வைக்கோலைத் துண்டுகளாக்கி வேகவைத்து உலரவைக்க வேண்டும். இதை பிளாஸ்டிக் பைகளில் (காளான் வளர்ப்புக்கென்றே பிளாஸ்டிக் பைகள் கடைகளில் கிடைக்கின்றன) ஒரு சுற்று வைக்கோல், அதற்கு மேல் காளான் விதை, மறுபடியும் வைக்கோல், மறுபடியும் விதை என மாற்றி மாற்றி போட்டு உருளைவடிவப் படுகைகளாகத் தயாரிக்க வேண்டும். ஒரு படுகை தயாரிக்க,

            200 கிராம் விதைப்புட்டி, மூன்று கிலோ வைக்கோல் ஆகியவை தேவைப்படும். மேலே சொன்ன அளவுள்ள அறையில் 450 படுகைகள் வரை தொங்க விடலாம், அதாவது ஒரு குடிசையில். அனைத்துப் படுகைகளையும் மொத்தமாகத் தயாரிக்கக் கூடாது. தினமும் பத்து, பத்து படுகைகளாகத்தான் தயாரிக்க வேண்டும். அப்போதுதான் சுழற்சி முறையில் தினமும் காளான் மகசூல் கிடைக்கும்.

25 நாளில் அறுவடை!
                படுகை தயாரித்து முடித்ததும் விதைகளுக்கு நேராக பென்சில் அளவில் ஓட்டை போட வேண்டும். ஒரு படுகையில் அதிகபட்சம் 12 ஓட்டைக்கு மேல் போடக்கூடாது. படுகைகளை உறி மாதிரி கட்டித் தொங்கவிட வேண்டும். ஒரு கயிற்றில் நான்கு படுகை தொங்கவிடலாம். பூஞ்சண இழைகள் படுகையில் பரவ பதினைந்து நாட்களாகும். அது பரவியதும், படுகை முழுக்க வெள்ளை நிறமாக மாறிவிடும். மேல்பக்கம் நனையும்படி தினமும் தண்ணீர் தெளித்து வந்தால், 18 முதல் 20-ம் நாளில் மொட்டு வரும். அதிலிருந்து நான்காவது நாளில் காளான் நன்றாக மலர்ந்து முழுவளர்ச்சி அடைந்துவிடும். இதைப் பறித்து சுத்தம் செய்து விற்பனை செய்யலாம்.

முதல் அறுவடைக்கு 22 முதல் 25 நாட்களாகும். ஒரு அறுவடை முடிந்த பிறகு, தொடர்ந்து தண்ணீர் தெளித்து வந்தால், அடுத்த பத்து நாளில் இரண்டாவது அறுவடை செய்யலாம். இதுபோல ஒரு படுகையிலிருந்து மூன்று முதல் நான்கு தடவை அறுவடை செய்யலாம். ஒரு படுகையின் ஆயுள் அதிகபட்சம் 60 நாட்கள்தான். இந்த 60 நாட்களில் ஒரு படுகையிலிருந்து ஒன்றரை கிலோ காளான் வரை கிடைக்கும். ஒரு படுகை தயார் செய்ய 50 ரூபாய் செலவாகும். 150 ரூபாய்க்கு காளான் கிடைக்கும். கிட்டத்தட்ட 100 ரூபாய் லாபம் கிடைக்கும். பெரிய அளவில் இடவசதி இல்லாதவர்கள்கூட இதைச் செய்யலாம். கணக்குப் போட்டுப் பார்த்தால், ஒரு குடிசையில் இருக்கும் 450 படுகைகள் மூலம் ஒரு மாதத்துக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய் லாபம் பார்க்க முடியும்.

நிறைவாக பேசிய ராமசாமி மற்றும் மோகன்தாஸ், 'இன்னிக்கு இறைச்சியோட விலை அதிகமாயிருக்குறதால, காளான் பக்கம் மக்களோட கவனம் அதிகமா திரும்பியிருக்கு. முன்னைவிட நல்ல வரவேற்பு இருக்கு. நகரம், கிராமம்னு கணக்கில்லாம எங்கயும் காளான் பண்ணை ஆரம்பிக்கலாம். அடுத்ததா காளான் சூப் தயாரிச்சு விக்கலாம்னு இருக்கோம். அதோட, ஜீவாமிர்தம் கொடுத்து காய்கறிகளையும் தயார் செஞ்சிகிட்டு இருக்கோம். 40 சென்ட்ல கோ-4 தீவனப் புல் சாகுபடி செஞ்சிருக்கோம். அடுத்ததா பால் மாடுகளை வாங்கி பால் உற்பத்தி செஞ்சி, நேரடியா மக்கள்கிட்ட விற்பனை பண்ணலாம்னும் முடிவு செஞ்சுருக்கோம்'' என்றார்கள்.

தொடர்புக்கு : ராமசாமி: 96882-16058,
மோகன்தாஸ்: 97889-44907
Source: www.vikatan.com



1 comment:

Unknown said...

nalla muyarchi nanum vivasaya thondanthan yanakum vivasaythin mithu mika aarvam,yangal nilamo vaanam partha boomi,karisalman kadu,aduthathaka yannudaya plan boare thanniyin mulam vivasayam pannalam yantru mudiveduthullen
ungala mudintha idea yathavathu irunthal share pannuga naantri