Sunday

உழவில்லை... உரமில்லை... செலவில்லை... மணியாய் விளளயும் ஜூரோ பட்ஜெட் நெல் !

உழவில்லை... உரமில்லை... செலவில்லை...
மணியாய் விளளயும் ஜூரோ பட்ஜெட் நெல் !
 'ஜீரோ பட்ஜெட்’ விவசாய முறை என்றாலே... இடுபொருட்களாக பயன்படுத்தப்படும் ஜீவாமிர்தம் உள்ளிட்ட அமிர்தங்கள்... அக்னி அஸ்திரம் உள்ளிட்ட அஸ்திரங்கள்... ஆகியவை முக்கியமாக கவனத்தில் வந்து நின்றுவிடும். இவையில்லாமல்... ஜீரோ பட்ஜெட் இல்லை.
ஆனால், ''இவை மட்டுமே ஜீரோ பட்ஜெட் இல்லை'' என்கிறார் நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கல் பகுதியைச் சேர்ந்த சக்திவேலு.
''அமிர்தங்கள் மற்றும் அஸ்திரங்கள் மூலமே சிறந்தப் பலன்கள் கிடைக்கும் என்றாலும், காற்றுத் தடுப்பு வேலிகள், இயந்திரங்கள் பயன்படுத்தாமை, உயிர்மூடாக்கு... என 'வேளாண் வித்தகர்' சுபாஷ் பாலேக்கர் சொல்லும் அத்தனை வழிமுறைகளையும் கடைபிடித்து, முழுமையாக ஜீரோ பட்ஜெட் வேளாண்மை செய்யும்போது... கூடுதல் பலன் என்பது கண்கூடு'' என்று சொல்லும் சக்திவேலு, பாலேக்கர் சொல்லும் பெரும்பாலான ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பங்களையும் கடைபிடித்து அரை ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்து வருகிறார்.
''எனக்கு மொத்தம் ஆறு ஏக்கர் நிலமிருக்கு. அதுல வீட்டுக்குப் பக்கத்துல அரை ஏக்கரும் தனியா அஞ்சரை ஏக்கரும் இருக்கு.
2007-ம் வருஷம் ஈரோட்டுல 'பசுமை விகடன்’ நடத்தின 'ஜீரோ பட்ஜெட்’ பயிற்சி வகுப்புல கலந்துக்கிட்ட பிறகு, 'இயற்கைக்கு மாறணும்’கிற எண்ணம் வந்தது. பாலேக்கர் சொன்ன அத்தனை விஷயத்தையும் செஞ்சு பாக்கணும்னு முடிவெடுத்தேன்.  
உம்பளாச்சேரிதான் சிறந்தது!
இந்தியாவுல நிறைய வகையான நாட்டு மாடுகள் இருந்தாலும், உம்பளாச்சேரி ரகத்தோட சாணத்துலதான் நுண்ணுயிரிகள் அதிகம்னு பாலேக்கர் சொல்றாரு. அதனாலதான் கொஞ்சம்கூட கலப்பில்லாத, சுத்தமான உம்பளாச்சேரி ரகத்துல ரெண்டு பசுக்களையும் ஒரு காளையையும் வாங்கினேன். சோதனை முயற்சியா வீட்டுப் பக்கத்துல இருந்த அரை ஏக்கர்ல ஜீரோ பட்ஜெட் முறையில விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன்.
காற்றுத் தடுப்பு வேலி!
இந்த நிலத்தைத் தேர்ந்தெடுத்ததுக்கும் காரணம் இருக்கு. 'காத்தோட வேகத்தைக் குறைக்கணுங்கிறதுக்காக, நிலத்தோட தெற்கு, மேற்கு பக்கங்கள்ல மரங்களை வளக்கணும்’னு பாலேக்கர் சொல்வார்.
இயற்கையாவே அந்த நிலத்துல அந்த ரெண்டு திசையிலயும் தேக்கு, தென்னை, மா, சூபாபுல், வேம்புனு நெருக்கமா மரங்கள் இருந்தது. அது வண்டலும் களியும் கலந்த மண்.
2008-ம் வருஷம் அந்த நிலத்துல ரசாயனம் போட்டு உளுந்து சாகுபடி பண்ணியிருந்தேன். உளுந்தை அறுவடை பண்ணிட்டு தக்கைப்பூண்டு விதைகளைத் தெளிச்சு அஞ்சு மாசம் வரைக்கும் நிலத்துலேயே விட்டுட்டேன். நல்லா தளதளனு வளர்ந்து நின்னது. அது நல்ல உயிர்மூடாக்கு. அதோட வெப்பத்தால நிலம் வெடிக்காமலும் பாதுகாக்கும். அதனால, நுண்ணுயிர்கள் அழியாம இருக்கறதோட, மண்ணுல ஈரப்பதம் இருந்துட்டேவும் இருக்கும்.
நோய்கள் இல்லை!
செப்டம்பர் மாசம் சம்பா நடவுக்காக அரை ஏக்கர் நிலத்தைத் தயார் செய்ய ஆரம்பிச்சேன். நிலத்துல தண்ணி கட்டி, அஞ்சு நாள் கழிச்சு 150 கிலோ தொழுவுரம், 50 கிலோ ஆட்டு எருவும் போட்டேன். ஆனா, பதினஞ்சு நாளாகியும் தக்கைப்பூண்டு மக்கவேயில்லை.
அதுவரைக்கும் ரசாயனம் போட்டிருந்ததால மக்க வெக்கிற நுண்ணுயிர்கள் நிலத்துல இல்லை. அதனால, பவர் டில்லர் வெச்சு மடக்கி விட்டேன். அடுத்து 100 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து தண்ணி கட்டி ஒற்றை நாற்று முறையில சம்பா ரகத்தை நடவு செஞ்சேன். தொடர்ந்து 15 நாளுக்கு ஒரு தடவை ஜீவாமிர்தம் மட்டும்தான் கொடுத்தேன். பயிருக்கு எந்த நோயும் வரல. பூச்சிகளும் தாக்கல.
ஊடுபயிராக உளுந்து!
45-ம் நாள் 100 லிட்டர் தண்ணியில 5 லிட்டர் புளிச்ச தயிரைக் கலந்து தெளிச்சேன். அதனால நல்லா கதிர் பிடிச்சு விளைஞ்சுருந்தது. அறுவடைக்கு, பத்து நாள் முன்னயே ஊடுபயிரா உளுந்து விதையைத் தெளிச்சு விட்டேன். அறுவடை பண்ணினப்போ அரை ஏக்கர்ல 12 மூட்டை கிடைச்சது. இது ரசாயன சாகுபடியைவிட மூணு மூட்டை குறைவுதான். இதை நான் எதிர்பாத்திருந்ததால ஏமாற்றம் இல்லை. ஆனா... உளுந்துல 120 கிலோ மகசூல் கிடைச்சுது. இது நல்ல மகசூல். வழக்கமா 90 கிலோதான் கிடைக்கும்.
உழவே இல்லை!
அடுத்த போகத்துல திரும்பவும் தக்கைப்பூண்டு தெளிச்சுவிட்டு வளர்ந்ததும் தண்ணி கட்டினேன். மண்ணுல நுண்ணுயிர்கள் இருந்ததால, பவர் டில்லருக்கு வேலை வெக்காம தானாவே மக்கிடுச்சு தக்கைப்பூண்டு. அடுத்தடுத்த போகத்துல 15 மூட்டை வரை சம்பா நெல்லும் 120 கிலோ உளுந்தும் கிடைச்சுது. இப்போ உழவே ஓட்டாமதான் சாகுபடி பண்றேன்.
நிலத்துல உழவை நிறுத்திட்டு... ஜீவாமிர்தம் அதிகமா விடுறதால நிறைய நுண்ணுயிர்களும், மண்புழுக்களும் பெருகியிருக்கு. அதேமாதிரி, வயல்ல நிறைய நண்டு, நத்தையெல்லாம் தங்கியிருக்கு. அதனால இயற்கையாவே உயிர்சுழற்சி நடக்குது. பறவைகள் அதிகமா வர்றதால பூச்சிப் பிரச்னையும் இல்லை. உயிர்மூடாக்கு போடுறதால, அதிகமா களைகளும் வர்றதில்லை'' என்ற சக்திவேலு...
''அடுத்தபடியா அஞ்சரை ஏக்கர்லயும் ஜீரோ பட்ஜெட் முறையிலதான் இனி விவசாயம் பண்ணப் போறேன்'' என்று உற்சாகமாகச் சொல்லி விடைகொடுத்தார்.
Source:pasumaivikatan