Friday

கவுரவத்தை விட்டோம்.... கை நிறைய சம்பாதிக்கிறோம்...

கலக்கும் மகளிர் சுய உதவிக்குழு உழைக்கவேண்டும் என்ற உறுதியும், சாதிக்கவேண்டும் என்ற உணர்வும் இருந்தால் போதும் எந்த தொழிலாக இருந்தாலும் கை நிறைய சம்பாதிக்க முடியும். கவுரவம் பார்க்காமல் வீடு, வீடாக குப்பை சேகரிப்பதில் தொடங்கி அடுத்த கட்டமாக மண்புழு உரம் தயாரித்தல், காளான் வளர்ப்பில் இறங்கி மாதம் தோறும் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். இப்போது எங்களில் பலர் கடன் வாங்காமல் குடும்பத்தை நடத்துகிறோம் என பெருமை பொங்க கூறுகின்றனர் கோவை பெரியநாயக்கன் பாளையம் கூடலூர் சுயம் சுத்தா ஸ்ரீசெல்வநாயகி மகளிர் சுய உதவிக்குழுவினர்.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கூடலூர் கிராமத்தில் பெரிய அளவிலான தொழில் ஏதும் இல்லை. அருகில் உள்ள விவசாய தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லவேண்டும்; அல்லது நகர்ப்புறங்களில் வேலை தேடி வரவேண்டும். இது தான் 15 ஆண்டுகளுக்கு முன் அந்த கிராமத்தின் எதார்த்த நிலை. குடும்பத்தை நடத்தும் அளவுக்கு வருமானம் ஏதும் பெரிதாக கிடைப்பதில்லை. பல வீடுகளில் மாத தேவைக்கே கடன் வாங்கவேண்டிய நிலை.
இந்த சூழலில் மகளிர் சுய உதவிக்குழு தொடங்கினால் கடன் பிரச்னையை தீர்த்துக்கொள்ளலாம் என தன்னார்வ குழு மூலம் தெரியவந்தது. இதையடுத்து ஒரு குழுவை தொடங்கி தலா ரூ.100 முதலீடு செய்தனர். பின்னர் அதையே குறைந்த வட்டிக்கு சுழற்சி முறையில் விட்டனர்.

அப்போது தான் புதிய எண்ணம் இவர்கள் மனதில் பளிச்சிட்டது. மக்கும் குப்பை, மக்காத குப்பையை தனித்தனியாக பிரித்தெடுப்பது குறித்து ஊரெல்லாம் பரவலாக பேசப்பட்டது. இதை சாதகமாக பயன்படுத்திய மகளிர் சுய உதவிக்குழுவினர் டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்தை அணுகினர். சுய உதவி குழுவின் திட்டம் டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்திற்கும் பிடித்து போகவே உடனடியாக பணி ஆரம்பமானது. எப்படி அந்த திட்டம் நிறைவேறியது என்பதை இக்குழுவை சேர்ந்த சரோஜினி தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

‘‘வீடு, வீடாக போய் குப்பை அள்ளுவது தினமும் நடக்கிற காரியமா என ஒரு தயக்கம் இருந்தது. இருந்தாலும் முயற்சி செய்வோம் என்ற நம்பிக்கையில் வீடு, வீடாக துண்டு நோட்டீஸ் கொடுத்தோம். பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைச்சது. டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் வண்டி வசதியை செய்து கொடுத்தனர். ஆரம்பத்தில் ஓரிரு நாள் கஷ்டப்பட்டோம். பின்னர் எல்லா வீடுகளிலும் குப்பையை நாங்கள் போய் கேட்பதற்கு முன்பாகவே எடுத்து தயாராக வைத்தனர். ஆரம்பத்தில் ஒரு நபருக்கு தினமும் 60 ரூபாய் சம்பளமாக பகிர்ந்து கொண்டோம்.

பின்னர் 150 ரூபாய் வரை சம்பளம் அதிகரித்தது. தினமும் 3 டிராக்டர் குப்பை எடுத்து பிரித்தோம். நல்ல வருமானம் கிடைத்தது. அடுத்த கட்டத்திற்கு முன்னேறினோம். குப்பை எடுப்பதோடு நிற்காமல் அதில் இருந்து மண்புழு தயாரிப்பில் இறங்கினோம். தற்போது மாதம் ஆயிரம் கிலோ மண்புழு உரம் தயாரித்து விற்பனையில் ஈடுபடுகிறோம். ஒரு கிலோ உரம் 10 ரூபாய்க்கு  விற்பனை செய்கிறோம். மாதம் குறைந்தபட்சம் 10 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது. நாங்கள் சேகரிக்கும் குப்பையை தான் உரத்திற்கு மூலப்பொருளாக பயன்படுத்துகிறோம்.

காளான் வித்து வாங்கி உற்பத்தி செய்கிறோம். தினமும் 5 கிலோ உற்பத்தியாகிறது. அதை கிலோ ரூ.125 வீதம் விற்பனை செய்கிறோம். இதற்கு செலவிடும் நேரம் 4 மணி நேரம் மட்டுமே. இதனால் நாங்கள் வழக்கமாக செய்யும் எந்த வேலையும் கெடுவதில்லை,’’‘ என்றார். கூடலூர் பேரூராட்சிக்குட்பட்ட சாமிசெட்டிபாளையத்தில் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. இதில் அரை ஏக்கருக்கு காய்கறி பயிரிடுகின்றனர். மண்புழு உரம் தயாரிக்கப்படும் இடத்திலேயே சேகரமாகும் இயற்கை உரத்தை இதற்கு பயன்படுத்துகின்றனர். மீதி இடத்தில் காளான் வளர்க்க தனியாக கூரை அமைத்துள்ளனர்.


ஆரம்பத்தில் வங்கியில் 25 ஆயிரம் கடன் வாங்கினர். கடனை திருப்பி செலுத்தியதில் இவர்களுடைய நேர்மையை அறிந்த வங்கி நிர்வாகம் தற்போது 5 லட்சம் வரை கடன் அளிக்க தயாராக உள்ளது. ‘‘கடன் வாங்கி தொழிலை விரிவு செய்வதை காட்டிலும் எங்களிடம் உள்ள நிதியை மேலும் அதிகரித்து தொழிலை விரிவாக்கம் செய்யவேண்டும் என்பதே எங்ளது அடுத்த இலக்கு என்கின்றனர் சாதனை பெண்கள்.

Source:www.dinakaran.com

2 comments:

Unknown said...

Hats off sisters. Kaalan valarppu details venum. Send me to rajadirectu@gmail.com

Rifath Maryam said...

kaalan valarppu details please,, girls, superb