Friday

கொட்டகையில் கவனம்... கொட்டும் லாபம்!


கொட்டகையில் கவனம்... கொட்டும் லாபம்!

'ஆடு வளர்ப்புக் கொண்டாட்டம்!’ என்ற தலைப்பில், பசுமை விகடன், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் திருப்பூர் மாவட்ட பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், தெற்கு ரோட்டரி சங்கம் திருப்பூர் ஆகியவை இணைந்து, கடந்த மே 14-ம் தேதி, ரோட்டரி அரங்கில் பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சி மற்றும் அதில் கற்றுக்கொடுக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் பற்றி தொடர்ந்து, நம் இதழில் எழுதி வருகிறோம்.
கடந்த இதழில் கால்நடைகளைத் தாக்கும் நோய்கள் மற்றும் தடுப்பு முறைகள் பற்றி எழுதியிருந்தோம். 'கால்நடைகளுக்கான காப்பீடு, கடனுதவிகள் பற்றி அடுத்த இதழில் பார்க்கலாம்' என்றும் அதன் முடிவில் குறிப்பிட்டிருந்தோம். இவற்றைப் பற்றி அடுத்து பார்க்கலாம். இந்த இதழில், கொட்டகை மற்றும் தீவனம் போன்ற முக்கியமான விஷயங்கள் இடம் பிடிக்கின்றன.  நாமக்கல், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் செயல்பட்டு வரும் கால்நடை உற்பத்தி மற்றும் மேலாண்மைத் துறையின் உதவிப் பேராசிரியர், ராமகிருஷ்ணன், கொட்டகை மற்றும் தீவனம் தொடர்பாக, திருப்பூர் பயிற்சி முகாமில் பேசியவை இங்கே இடம் பிடிக்கின்றன.
கொட்டகை கவனம்!
''மேய்ச்சல் நிலங்கள் குறைஞ்சு போன சூழல்ல, அதிகளவுல ஆடு வளர்க்கறவங்களுக்கு கொட்டில் முறைதான் கை கொடுக்குது. அப்படி கொட்டகை அமைக்குறப்ப சில விஷயங்கள மனசுல வெச்சுக்கணும். மேடானப் பகுதியிலதான் கொட்டகை அமைக்கணும். சமதளமான, உறுதியான தரைதளம் முக்கியம்.
அந்த இடத்துல நல்ல வடிகால் வசதி, காற்றோட்டம் இருக்கணும். சூரிய ஒளி அதிகமா தாக்காம இருக்கற வகையில... கிழக்கு, மேற்கா நீண்டிருக்கற மாதிரிதான் கொட்டகையை அமைக்கணும். கல் அல்லது இரும்புத் தூண்களை அமைச்சு, சுற்றுச்சுவர் கட்டாம உறுதியான சங்கிலி வலையைப் (செயின் லிங்க்) பயன்படுத்தி, கொட்டகை அமைச்சா... செலவு குறையும். வலையோட உயரம் 5 முதல் 6 அடி வரை இருக்கலாம். கொட்டகையைச் சுத்தி நிழலுக்காக மரங்களையும் வளர்க்கலாம்.
அதிக அகலம் கூடாது!
நம்ம இடத்துல இருக்கற தீவனத்தோட அளவை வெச்சுதான்... எத்தனை ஆடுகளை வளர்க்கலாம்னு முடிவு செய்யணும். குறைஞ்ச எண்ணிக்கையில ஆடுகள வளர்க்கறவங்களுக்கு தென்னங்கீத்து, பனை ஓலை வேய்ந்த கொட்டகை போதும். சுற்றுச்சுவருக்குப் பதிலா படல், நைலான் வலை, கம்பி வலை, மூங்கில்பட்டை இதுல ஏதாவது ஒண்ணைப் பயன்படுத்தி தடுப்பு ஏற்படுத்திக்கலாம். கொட்டில் முறையில ஆடு வளர்க்கறப்ப... கூரைப்பகுதி எந்த அளவுக்கு அமைச்சுருக்கமோ... அதைப் போல ரெண்டு மடங்கு அளவுக்கு திறந்தவெளி இருக்கணும். இப்படி இருந்தா... ஆடுக காலாற உலாவுறதுக்கு வசதியா இருக்கும். ஆடுகளோட எண்ணிக்கையைப் பொறுத்து கொட்டகையோட நீளத்தை அமைச்சுக்கணும். ஆனா... அகலத்தைப் பொறுத்தவரை 25 அடிக்கு மேல இருக்கக் கூடாது.
கொட்டகை போட்டிருக்கற இடத்துல தடுப்பு தடுப்பா பிரிச்சு, ஆடுகளுக்கு இடத்தை ஒதுக்கணும். ஒரு தடுப்புல அதிகபட்சம் 60 ஆடுகளுக்கு மேல அடைக்கக் கூடாது. ஒரு ஆட்டுக்கு 10 முதல் 15 சதுர அடி அளவுக்கு இடம் தேவை. கிடாக்களுக்கு 30 சதுர அடி வரை தேவை. கிடா, தாய் ஆடுகள் மற்றும் குட்டிகளை தனித்தனி தடுப்புலதான் வளர்க்கணும். கொஞ்சம் பெரிய அளவுல ஆடுகளை வளர்க்க நினைக்குறவங்க ஆஸ்பெஸ்டாஸ் மூலமா கூரைகளை அமைச்சுக்கலாம். கூரையோட மேல்பாகத்தில சுண்ணாம்பு அடிச்சா வெப்பத்தோட தாக்கம் குறையும்.
மண்ணை மாத்தணும்!
பொதுவா ஆடுகளுக்கு மண்தரை போதுமானது. சிமென்ட் தரை இருக்கக் கூடாது. தரைதளம் சுத்தமா இருக்கறது நல்லது. குறிப்பா, இளம் குட்டிகளைப் பராமரிக்கற பகுதி ரொம்பவே சுத்தமா இருக்கணும். இல்லைனா... குட்டிகளுக்கு கழிசல் ஏற்படலாம். தரைப்பகுதியை தினமும் கூட்டி சுத்தப்படுத்தணும். மண்தரையில ஆட்டோட சிறுநீர், சாணம் ஒரு படிமமா படியும். அதுக்காக வருஷத்துக்கு ஒரு தடவை, தரை மண்ணை எடுத்துட்டு, புது மண்ணைப் போடணும்.
மரச்சட்டங்கள பயன்படுத்தி தரைதளம் அமைக்கறவங்க, தரையில இருந்து 4 அடி உயரத்துலதான் அமைக்கணும். ஒண்ணரை முதல் 2 அங்குல அகலமுள்ள மரச்சட்டங்கள அரை அங்குல இடைவெளியில வரிசையா அடிச்சு, அதுக்கு மேல ஆடுகளை விடணும். இப்படிச் செய்றதால ஆடுகளோட புழுக்கை, சிறுநீர் இதெல்லாம் மரச்சட்டங்களுக்கு நடுவுல இருக்கற இடைவெளி வழியே கீழே விழுந்துடும். தினமும் கொட்டகையை சுத்தம் செய்யத் தேவைஇருக்காது. குறிப்பிட்ட அளவு புழுக்கை சேர்ந்ததும்... அதை எடுத்தா போதும். இந்த முறையில வளர்க்கறப்ப... ஆடுகளோட எடை சீக்கிரமாவே அதிகரிக்கும்.
தீவனத் தொட்டிகளை மரத்துலயோ, இரும்புத் தகட்டுலயோ செய்யலாம். ரெண்டு அடி அகலம், 10 அடி நீளமுள்ள தீவனத் தொட்டி... 10 ஆடுகளுக்குப் போதுமானது. ஆடுக ஏறி நின்னு அசுத்தம் செய்யாத அளவுக்கு கொஞ்சம் உயரமா தொட்டியை அமைக்கணும்.
கொட்டகையில பேன், உண்ணி, தெள்ளுப்பூச்சி அதிகமா இருந்தா... கிருமிநாசினி பயன்படுத்தி அழிக்கணும். குட்டிகளை அடைக்குற பகுதியில ஒவ்வொரு குட்டி ஈனும் பருவத்துக்கும் முன்ன, மண் தரையை லேசா சுரண்டி, புது மண்ணைக் கொட்டணும். பெரிய பண்ணைகளா இருந்தா... ஆடு எடை பார்க்கற கருவி, தீவன அறை, புல் வெட்டும் உபகரணங்கள், உடல் நலமில்லாத ஆடுகளைப் பராமரிக்கறதுக்கு தனி அறைனு கூடுதல் வசதிகளை அமைச்சுக்கறது நல்லது
ஒரு ஆட்டுக்கு தினமும் 400 கிராம் அடர்தீவனம், 2 கிலோ பசுந்தீவனம், 500 கிராம் உலர்தீவனம் கொடுக்கணும். இப்படி முறையா பராமரிச்சா ஆட்டுப் பண்ணையில அருமையான லாபம் பாக்கலாம்'' என விவரங்களை அடுக்கி முடித்தார் ராமகிருஷ்ணன்.
படங்கள்: க. ரமேஷ் ஆர். குமரேசன்
Source: pasumaivikatan

1 comment:

Muthukumar said...

சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238