Friday

அன்னாசி சாகுபடி


மலைச்சரிவுகளில் மட்டுமே நல்ல விளைச்சல் தரக்கூடிய அன்னாசிப் பயிரை, தட்ப வெப்பநிலை இயைந்து வரும் சமவெளிப் பகுதிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சாகுபடி செய்வது வழக்கம். ஆனால், ஆற்றுப்படுகை கிராமங்களில் ஒட்டுமொத்தமாக நெல் சாகுபடி செய்வது போல், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு கிராமம் முழுக்கவே அன்னாசியை சாகுபடி செய்து வருகிறார்கள்!

தலைமுறைகளைக் கடந்த அன்னாசி சாகுபடி!
தக்கலையிலிருந்து பேச்சிப்பாறை செல்லும் சாலையில் மலவிளையைத் தாண்டியதும் வருகிறது, கொட்டூர் எனப்படும் மலையடிவார கிராமம். ஊருக்குள் நுழையும் போதே  அன்னாசிப் பழ வாசனை மூக்கைத் துளைக்கிறது. அன்னாசிக்கு ஊடாகத்தான் வீடுகளை எழுப்பி இருக்கிறார்களோ.. என நினைக்கும் வகையில், அன்னாசித் தோட்டங்களால் சூழப்பட்டுள்ளது. கிராமம்! தலைமுறைகளைக் கடந்து அன்னாசி சாகுபடியைக் கொண்டாடி வருகிறார்கள், மக்கள். காரணம் , அது கொடுக்கும்
வளமான வருமானம்தான்.
தனி மவுசு!
கொட்டூர் பகுதியைச் சோந்தவரும் அப்பகுதியை உள்ளடக்கிய அயக்கோடு பஞ்சாயத்தின் முன்னாள் தலைவருமான நெப்போ புஷ்பராஜ், பெருமையோடு ஆரம்பித்தார்.
இந்த கிராமத்தில் இருநூறு வீடுகள் இருக்கு. எல்லாருமே அன்னாசிப்  பழ சாகுபடிதான் செய்றாங்க. இந்த மாவட்டத்திலேயே கல்குளம், விளவங்கோடு தாலூகாவில் அன்னாசிப் பழ சாகுபடி அதிகம். அதிலும் குறிப்பாக ‘கொட்டூர் அன்னாசி’ என்றால் சந்தையில் தனி மவுசு. செம்மண்ணும், பாறையும் கலந்த மண்ணில் அன்னாசி அருமையாக வரும். அதற்கேற்ற மாதிரி மண் வாகும், சீதோஷ்ண நிலையும் இயல்பாகவே எங்க ஊருக்கு அமைந்திருக்கு. அதனால்தான், உலகத்திலேயே ருசியான அன்னாசிப் பழம் எங்க ஊரில் உற்பத்தியாகிறது.  எங்கள் ஊருடைய நில அமைப்பு வித்தியாசமானது. அதாவது, ஒரு பக்கம் மலைப் பகுதியும், மறுபக்கம் சமவெளியுமாக இருக்கும். இதில், மலை பகுதியில் ரப்பரும், சமவெளியில் அன்னாசியும் சாகுபடி செய்கிறோம்.
அன்னாசிக்கு அடுத்தபடியாக எங்க ஊரில் ரப்பர் சாகுபடியும் அதிகமாக செய்றாங்க. ரப்பரைப் போட்டாலும் ஊடுபயிராக, அன்னாசியையும் போட்டுருவாங்க. அன்னாசியை ஒரு முறை நட்டாலே போதும். வாழை மாதிரியே வெட்ட வெட்ட வாரிக் கொடுக்கும். அதனால், அன்னாசிதான் எங்க ஊரு மக்களை வாழ வைக்கும் அண்ணாச்சி என்றார்.
எங்க வீடுகளுக்கு விருந்தாளிங்க வந்தார்கள் என்றால்… விருந்தில் கட்டாயம் அன்னாசி இருக்கும். பிருத்திக்காய், பிருத்திப் பழம் என்று பல பேர்களில் அன்னாசியைச் சொல்வாங்க. எங்க பகுதியில் விவசாயிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து, இயந்திரங்கள் வாங்கி மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்தும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறோம் என்று சொன்னார் அன்னை தெரசா அன்னாசிப் பழ உற்பத்தியாளர் உழவர் மன்ற தலைவர் ஹென்றி.
முன் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் அன்னாசியை தோட்டகலைப் பயிரோடு சேர்த்து மானியம் கொடுக்கணும் என்று கேட்டு மனு கொடுத்தோம். அதன்பிறகு, முதல் முறை நடவு செய்ய ஒரு ஹெக்டேருக்கு இருபதாயிரம் ரூபாய் மானியமும், அடுத்த வருடம் அதில் நான்கில் ஒரு பங்கும்  மானியமாக கொடுத்திட்டு இருந்தாங்க. இப்ப மானியத்தை ரத்து பண்ணிட்டாங்க. திரும்பவும் மானியம் கொடுத்தால் எங்க ஊர் மட்டுமில்லாமல் இந்த மாவட்டம் முழுவதுமே அன்னாசி சாகுபடி அதிகரிக்கும் என்றார்.
விவசாயி வியாபாரியாக மாறணும்!
இந்தப் பகுதியில் விளையும் அன்னாசியை சந்தைப்படுத்தும் நேசமணி, நான் பத்து ஏக்கரில் அன்னாசி சாகுபடி செய்கிறேன். நிறைய பேர் எங்க பகுதியில் சாகுபடி செய்வதால் வருடம் முழுக்க அன்னாசிப் பழம் கிடைக்கும். இந்தப் பகுதிகளில் அறுவடையாகும் அன்னாசியை மொத்தமாக கொள்முதல் செய்து.. நாகர்கோவிலில் இருக்கும் வடசேரி சந்தையிலும், மாவட்டம் முழுக்க இருக்கும் மற்ற சந்தைகளிலும் விற்று கொண்டிருக்கிறேன்.
விவசாயிகள், இடைத்தரகர் இல்லாமல் நேரடியாக வியாபாரம் செய்தால்தான் நல்ல வருமானம் கிடைக்கும். அதனால்தான் விவசாயியாக இருந்த நானே வியாபாரியாக மாறிவிட்டேன். சீசன் இல்லாத நேரங்களில் ஒரு கிலோ 80 ரூபாய் வரைக்கும் விலை போகும். மற்ற நேரங்களில் 15 ரூபாய்க்குக் குறையாமல் போகும். சிலபேர் அன்னாசியை மதிப்புக்கூட்டி, ஜாம், ஜீஸ் என்று தயாரித்தும் விற்கறாங்க என்றார்.
இப்படித்தான் சாகுபடி!
அன்னாசி சாகுபடி பற்றிப் பேசிய ஹென்றி, ஒரு ஏக்கரில் அன்னாசி சாகுபடி செய்ய  முதல் வருடம் செடி பராமரிப்பு என்று ஒரு லட்ச ரூபாய்  செலவாகும். வருடம் ஒரு லட்ச ரூபாய்க்கு காய் வெட்டலாம். இதனால் முதல் வருடம் லாபமும் இருக்காது, நஷ்டமும் இருக்காது. அடுத்த வருடத்திலிருந்து 20 ஆயிரம் ரூபாய் மட்டும்தான் செலவாகம். அதனால் வருடத்திற்கு 80 ஆயிரம் ரூபாய் வரைக்கும் லாபமாக கிடைக்கும்.
இந்தப் பகுதியில் ரசாயன முறையில்தான் அன்னாசியை சாகுபடி செய்கிறோம். செடியில் 40 இலை வரும்போது, ஒரு மருந்து கொடுக்க வேண்டும். யூரியா – ஒரு கிராம், எத்திரான் -2 மில்லி. இது இரண்டையும் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து ஒவ்வொரு செடியிலும் குருத்துப் பகுதியில் 20 மில்லி அளவிற்கு ஊற்ற வேண்டும். அதிலிருந்து 35-40 நாளைக்குள் பூ பூக்கும். பூத்ததிலிருந்து 90 நாளில் காயை வெட்டலாம் என்றார்.
இயற்கையிலும் இருக்கிறது வழி!
இயற்கை விவசாய முறையில் அன்னாசி சாகுபடி செய்வது சாத்தியமில்லையா? என்று மார்த்தாண்டம் அருகிலுள்ள காஞ்சிரங்கோடு கிராமத்தைச் சோந்த, முன்னோடி இயற்கை விவசாயி கிரேஸ் ராணியிடம் கேட்டோம்.
கண்டிப்பாக இயற்கை முறையில் அன்னாசி சாகுபடி சாத்தியமே! நானே அதை செய்து கொண்டிருக்கிறேன். நடவிலிருந்து 4-ம் மாதக் கடைசி அல்லது 5-ம் மாதத் தொடக்கத்தில்… ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 100 மில்லி பஞ்சகவ்யா என்ற விகிதத்தில் கலந்து, ஒவ்வொரு செடியின் குருத்துப் பகுதியிலும் 100 மில்லி அளவிற்குத் தெளித்துவிட வேண்டும். இப்படிச் செய்வதால் காய் நன்றாகத் திரண்டு வரும். ரசாயன சாகுபடியைவிட, நான்கைந்து நாட்கள் தாமதாமாக காய் அறுவடைக்கு வந்தாலும், நல்ல சுவையான, ஆரோக்கியமான காய்கள் கிடைக்கும். ரசாயன விவசாயத்தில் ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் செலவானால், இயற்கை முறையில் அதிகபட்சம் 5 ஆயிரம் ரூபாய் தான் செலவாகும் என்று சொன்னார்.
இத்தகவலை உழவர்மன்றத் தலைவர் ஹென்றியின் காதுகளில் சேர்த்தபோது… சீசன் காலத்தில் ரசாயனத்தைத் தெளிக்காமலே காய் வந்துவிடும். ஆனால், சீசன் இல்லாத காலத்திலும் காய் வரவேண்டும் என்றால்தான் ரசாயனம் தெளிக்கிறோம். நீங்க சொன்னபடி இயற்கை முறை விவசாயத்தை என் வயலில் சோதனை அடிப்படையில் செய்து பார்க்கிறேன். செலவு குறைந்து, நல்ல மகசூல் வந்தால்… எங்களுக்கும் சந்தோஷம்தான். சோதனை வெற்றியடைந்தால் ஒட்டுமொத்த விவசாயிகளும் இயற்கைக்கு மாறிவிடுவோம் என்றார்.
தொடர்புக்கு
ஹென்றி, செல்போன் : 94424-06393
நேசமணி, செல்போன் :94424 -75251
ராணி, செல்போன் : 95669-43803


Source: 25 Jan 2013- www.vikatan.com

No comments: