Monday

இரண்டே ஆண்டுகளில் கொட்டிக் கொடுக்கும் நாட்டு ரகம் !


பெயர் வாங்கித் தந்த, பெயரில்லா எலுமிச்சை... இயற்கை விவசாயியின் எளிய கண்டுபிடிப்பு !
இரண்டே ஆண்டுகளில் கொட்டிக் கொடுக்கும் நாட்டு ரகம் !
விவசாயப் பல்கலைக்கழகங்களும் ஆராய்ச்சி நிலையங்களும் லட்சக்கணக்கில் செலவு செய்து, அவ்வப்போது புதிய ரகப்பயிர்களை அறிமுகப்படுத்தி வருவது வழக்கம். ஆனால், சில விவசாயிகள், தங்களுடைய அனுபவத்தை வைத்தே, பெரிதாக செலவேதும் இல்லாமல், புதுப்புது ரகங்களை சர்வசாதாரணமாக உருவாக்கி விடுவதுண்டு. இத்தகைய ரகங்களுக்கு முன்பாக... விஞ்ஞானிகளின் ரகங்கள் ஈடுகொடுக்க முடியாமல் போய்விடுவதும் உண்டு. அந்தவகையில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 'புளியங்குடி’ அந்தோணிசாமி உருவாக்கியுள்ள புதிய ரக எலுமிச்சையை, தென் மாவட்ட விவசாயிகள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். பின்னே... குறைவான காலத்திலேயே நிறைவான மகசூலைத் தருகிறதே!
இந்த ரக எலுமிச்சையை நடவு செய்து நிறைவான மகசூலை எடுத்து வருபவர்களில் ஒருவராக வெற்றிநடை போடுகிறார்... கடம்பூர் இளைய ஜமீன்தார், மாணிக்கராஜா. தூத்துக்குடி மாவட்டம், கடம்பூரில் இருந்து, கயத்தாறு போகும் வழியில் மூன்றாவது கிலோ மீட்டரில் வருகிறது, ஜமீன் தோட்டம். தோட்டத்திலிருந்த மாணிக்கராஜாவிடம், நாம் அறிமுகப்படுத்திக்கொள்ள, உற்சாகமாகப் பேச்சைத் துவக்கினார்.
''எங்க பாட்டன், பூட்டன் எல்லாருமே ஜமீன்தார்கள்தான். நான் இப்ப கடம்பூருக்கு இளைய ஜமீனா இருக்கேன். எங்க ஜமீனுக்குத் தொழிலே விவசாயம்தான். கடம்பூர் பகுதியைப் பொறுத்தவரை முழுக்க இறவைப் பாசனம்தான். 150 ஏக்கர்ல நெல்லி, 100 ஏக்கர்ல மா, 60 ஏக்கர்ல சப்போட்டா, 100 ஏக்கர்ல தென்னை, 60 ஏக்கர்ல எலுமிச்சைனு மொத்தமா 470 ஏக்கர்ல எங்க குடும்ப வெள்ளாமை நடக்குது.  
இயற்கையில் அதிக மகசூல்!
ஆரம்பத்தில் ரசாயன விவசாயம்தான் செஞ்சுட்டுருந்தேன். முதல்ல நல்ல மகசூல் கிடைச்சாலும், கொஞ்ச காலத்திலேயே படிப்படியா குறைஞ்சு, அதிகளவுல ரசாயனம் பயன்படுத்த வேண்டியதா போயிடுச்சு. மண் வளமும் கெட்டுப் போறது கண்கூடா தெரிஞ்சதால, இயற்கை விவசாயத்துக்கு மாறினேன். இப்படி மாறினப்போ, மகசூல் குறைவாக் கிடைச்சாலும் உற்பத்திச் செலவு குறைஞ்சுட்டதால,  பெருசா பிரச்னையில்ல.
படிப்படியா மகசூல் கூடி இப்போ, ரசாயன விவசாயத்தைவிட அதிக மகசூல் கிடைக்குது. நான் முழுக்க இயற்கை விவசாயத்துக்கு மாறி பதினைஞ்சு வருஷமாகிடுச்சு'' என்று ஆச்சரிய முன்னுரை கொடுத்த மாணிக்கராஜா தொடர்ந்தார்.
''சும்மா கிடந்த கொஞ்ச நிலத்தையும் உழுது, எலுமிச்சை போடலாம்னு முடிவெடுத்தேன். அப்பதான் புளியங்குடி அந்தோணிசாமியைப் பத்தி கேள்விப்பட்டேன். அவரைப் போய் பாத்தப்போ... 'எடுத்தேன்... கவுத்தேன்னு கன்னு கொடுக்கறதுக்கு வியாபாரி இல்லைய்யா நானு. உங்க இடத்துக்கு வந்து பார்த்துட்டு அந்த மண்ணுக்கு எலுமிச்சை வருமானு பார்த்துட்டு சொல்லுதேன்’னார். அதேமாதிரி நிலத்தை வந்து பார்த்துட்டுதான் 1,500 கன்னுகளைக் கொடுத்தார்.
அதை, 15 ஏக்கர்ல நடவு செஞ்சுருக்கேன். அதுலதான் இப்போ ஊரே கண்ணு போடுற அளவுக்கு மகசூல்!'' என்ற மாணிக்கராஜா, எலுமிச்சை சாகுபடி முறைகள் பற்றிச் சொன்ன தகவல்கள், பாடமாக விரிகின்றன!
ஏக்கருக்கு 100 மரங்கள்!
எலுமிச்சைக்கு 20 அடி இடைவெளியில், 3 அடி ஆழம், 3 அடி அகலம் இருக்குமாறு குழிகள் எடுக்க வேண்டும். ஏக்கருக்கு 100 குழிகள் வரை எடுக்கலாம். ஒவ்வொரு குழியிலும் 15 கிலோ திருகுக்கள்ளியை போட்டு, அதற்கு மேல் தலா 25 கிலோ கொழிஞ்சி, ஆவாரை ஆகியவற்றைப் போட வேண்டும். அதற்கு மேல் அடுத்த அடுக்காக, 25 கிலோ தொழுவுரம் போட வேண்டும். அதற்கு மேல், இரண்டு கிலோ வேப்ப முத்து, ஒரு கிலோ மண்புழு உரம் ஆகியவற்றைப் போட்டு, வெட்டி எடுத்த மண்ணைப் போட்டு மூடி... 25 நாட்கள் வரை குளிர விட வேண்டும். பிறகு குழியின் நடுவில் ஒன்றரை அடி ஆழத்துக்குப் பறித்து, எலுமிச்சை நாற்றை நடவு செய்ய வேண்டும் நடவுக்கு முன்பு கவனமாக நாற்று வளர்க்கப்பட்டிருக்கும் பாலிதீன் பையைக் கிழித்து விட வேண்டும். வசதிக்கேற்ற முறையில் பாசனம் செய்து கொள்ளலாம். சொட்டுநீர்ப் பாசனம் அமைத்தால், சீரான மகசூல் கிடைக்கும்.              
பாசனம்... கவனம்!
நடவு செய்து ஒரு வாரம் வரை, செடியின் மூட்டைச் சுற்றி தினமும் காலால் மிதித்து விட வேண்டும். அளவுக்கு அதிகமாகவும் தண்ணீர் பாய்ச்சக் கூடாது. குறைவாகவும் தண்ணீர் பாய்ச்சக் கூடாது.
மண்ணின் ஈரப்பதத்தைப் பார்த்து பக்குவமாகப் பாசனம் செய்ய வேண்டும். நடவு செய்த 40-ம் நாளில் தளிர் வரும். அந்த நேரத்தில் வண்ணத்துப்பூச்சிகள் தாக்குதல் வரலாம். அவை, எலுமிச்சை இலைகளை உண்ணக்கூடும்.10 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் மாட்டுச் சிறுநீர், 100 மில்லி வேப்ப எண்ணெய் என்ற விகிதத்தில் கலந்து, தெளிப்பான் மூலமாகத் தெளித்தால் வண்ணத்துப்பூச்சி தாக்காது. தொடர்ந்து, 20 நாட்களுக்கு ஒருமுறை இப்படி பூச்சிவிரட்டி தயாரித்துத் தெளிக்க வேண்டும்.
அவ்வப்போது தேவைக்கேற்ப களை எடுத்து வர வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மரத்தின் மூட்டில் இருந்து ஒரு அடி தள்ளி, 20 கிலோ ஆட்டு எரு, ஒரு கிலோ வேப்ப முத்து, ஒரு கிலோ மண்புழு உரம் ஆகியவற்றைக் கலந்து இட வேண்டும். வேறு பராமரிப்புகள் தேவையில்லை. அடுத்தது அறுவடைதான்!
இரண்டாம் ஆண்டில் மகசூல்!

சாகுபடிப் பாடம் முடித்த மாணிக்கராஜா, ''20 நாளைக்கு ஒரு தடவை, தானே ரொம்ப பிரயத்தனப்பட்டு, சொந்த செலவுலயே வந்து தோட்டத்தைப் பார்த்து, ஆலோசனை சொல்லிட்டிருந்தார் அந்தோணிசாமி. 2011-ம் வருஷம் சித்திரை மாசம், அக்னி நட்சத்திரம் சமயத்துல நட்டது. முழுசா இரண்டு வருஷம்கூட முடியல... இப்பவே பூ, பிஞ்சு, காய், பழம்...னு கலந்து கட்டி நிக்குது. எங்க பகுதியில வழக்கமா 5 வருஷம் ஆனாத்தான் எலுமிச்சை காய்க்கும். அதனால எல்லாரும் ஆச்சரியமா பாக்குறாங்க. சரியா 600 நாள்ல அறுவடைக்கு வந்துடுச்சு.      
2 லட்சத்து 50 ஆயிரம் லாபம்!
ஒரு செடியில வருஷத்துக்கு சராசரியா 200 காய் முதல் 300 காய் வரை கிடைக்கும். இப்ப காய் பிடிச்சுருக்குறதைப் பார்த்தா... மரத்துக்கு 600 காய்க்கு குறையாம கிடைக்கும்னு நினைக்கிறேன்.
ஒரு ஏக்கர்ல உள்ள 100 மரத்திலிருந்து சராசரியா மரத்துக்கு 200 பழம் மேனிக்கு கணக்குப் போட்டாலே... 20 ஆயிரம் பழங்கள் கிடைக்கும். மொத்தமுள்ள 15 ஏக்கரையும் சேர்த்து, 3 லட்சம் பழங்கள் கிடைக்கும். ஒரு கிலோவுக்கு இருபது பழம் வரைக்கும் பிடிக்கும்.
அந்தக் கணக்குப்படி பாத்தா மொத்தம் 15 ஆயிரம் கிலோ கிடைக்கும். இந்தப் பழங்களை திருநெல்வேலி சந்தையிலதான் வித்துட்டுருக்கேன். ஒரு கிலோ 30 ரூபாய் வரைக்கும் விலை போகுது. கிலோ 25 ரூபாய்னு விலை போனாலே, 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கிடைச்சுடும்.
கன்னு செலவு, பராமரிப்புக் கூலி எல்லாம் போக 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைச்சுடும். எலுமிச்சையை நட்ட ரெண்டாவது வருஷத்துலேயே இப்படியரு லாபம் வருதுனா... அது பெரிய விஷயம்தானே'' என்றார், உற்சாகமாக!

தொடர்புக்கு,
மாணிக்கராஜா, செல்போன்:94434-52767
அந்தோணிசாமி, செல்போன்: 99429-79141.

பெயர் வாங்கிக் கொடுத்த பெயரில்லா ரகம் !


இந்த அதிசய ரகத்தை உருவாக்கிய புளியங்குடி அந்தோணிசாமியிடம் பேசினோம். ''நான் பார்த்தவரை எலுமிச்சை ரகங்கள் வறட்சியைத் தாக்குப் பிடிக்க முடியாமலும், எளிதில் பட்டுப் போறதாகவும் இருந்துச்சு. 45 வருஷமா எலுமிச்சை சாகுபடி பண்ணிட்டு இருக்கேன். அந்த அனுபவத்தில கொத்துக்கொத்தா காய்க்குற நாட்டு எலுமிச்சையில 13 ரகங்களைத் தேர்ந்தெடுத்தேன். அதுல இருந்து ஒண்னை எடுத்துதான் இந்த புதிய ரகத்தை உருவாக்கினேன். இது இரண்டே வருஷத்துல காய்ப்புக்கு வந்துடுது.
இதை மதுரை சேவா அமைப்பைச் சேர்ந்த விவேகானந்தன் அகமதாபாத்துல இருக்கற 'தேசிய அடிமட்ட கண்டுபிடிப்பாளர்கள் சங்க’த்துக்கு அனுப்பி வெச்சாரு. அவுங்க இதைப் பல கட்டமா சோதிச்சுப் பாத்தப்ப, இந்த ரகத்துல எல்லா காய்களும் ஒரே சீரா இருந்ததைப் பாத்து பிரமிச்சுப் போயிட்டாங்களாம். அதிலும் பூ, பிஞ்சு, நடுத்தரக்காய், பெரிய காய், பழம்னு தொடர்ச்சியா இருந்ததால 2004-ம் வருஷம், தேசிய அளவுல எனக்கு 'சிருஷ்டி சல்மான்’ விருது கொடுத்தாங்க. அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கையால அந்த விருதை வாங்கினேன். இன்னிக்கு வரைக்கும் நான் பெயர் வைக்காத இந்த ரகம்தான், இன்னிக்கும் எனக்குப் பெயர் வாங்கி கொடுத்துட்டு இருக்கு.
ஜமீனுக்கு 9 மாசக் கன்னா நடவு செய்யக் கொடுத்தேன். நான் என்னதான் பார்த்துப் பார்த்து பக்குவமா உற்பத்தி செஞ்சாலும், கடம்பூர் இளைய ஜமீன்தார் மாணிக்கராஜாவோட முறையான பராமரிப்புதான் மகசூலைக் கூட்டியிருக்கு'' என்று, ஜமீனுக்கும் பாராட்டு சொன்னார்!
என். சுவாமிநாதன்,படங்கள்: ஏ. சிதம்பரம்
Source: pasumaivikatan

No comments: