Monday

மாவுப்பூச்சிக்கு மணியான தீர்வு!

 மாவுப்பூச்சிக்கு மணியான தீர்வு!
''நானும், என் போலீஸ்கார நண்பர் ஒருத்தரும், கே.வி.கே. ஏற்பாடு பண்ணுன விவசாயப் பயிற்சிக்குப் போயிருந்தோம். நண்பரோட கொய்யாத் தோப்புல மாவுப்பூச்சி பிரச்னை அதிகம். அவர், கே.வி.கே. விஞ்ஞானிகள்கிட்ட, 'மாவுப்பூச்சியை கண்ட்ரோலே பண்ண முடியல. ஏதாவது வழி சொல்லுங்க’னு கேட்டார்.
அந்த விஞ்ஞானி, 'அப்படியா... மாவுப்பூச்சியை கண்ட்ரோல் பண்ண முடியலையா... ஓ, அது அப்படித்தான். சரி பாப்போம்’னு சொன்னார். நாங்களும் விடாம திரும்பத் திரும்ப கேட்டும், அவரால மாவுப்புச்சிக்குத் தீர்வைச் சொல்ல முடியல. 'அவருக்குத் தெரிஞ்சாத்தான சொல்வாரு’னு விட்டுட்டோம். ஆனா, அதுக்கான தீர்வை இந்தப் பயிற்சியில... போற போக்குல ரொம்ப எளிமையா சொல்லிக் கொடுத்துட்டார், செல்வம்''
- பிப்ரவரி 10-ம் தேதி, திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி, பரமகல்யாணி கல்யாண மண்டபத்தில் 'பசுமை விகடன்', பாபநாசம் குடிசை ஆசிரமம் மற்றும் நெல்லை ஜேசீஸ் கிளப் ஆகியவை சார்பில் இயற்கை விவசாயப் பயிற்சி முகாம் ஏற்பாடாகியிருந்தது. அங்கேதான் இப்படி சிலாகித்தார் மதுரையைச் சேர்ந்த 'பசுமை விகடன்' தீவிர வாசகர், பொன்னையா!
'பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் இயற்கை நெல் சாகுபடி’ என்கிற
தலைப்பில், 'கட்டிமேடு’ ஜெயராமன்; 'பணம் காய்க்கும் மரங்கள்’ என்கிற தலைப்பில் 'வனதாசன்’ ஆர். ராஜசேகரன்; 'பூச்சிகளும் உங்கள் நண்பர்களே’ என்கிற தலைப்பில் நீ. செல்வம்; 'எளிமையான இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்கள்’ என்கிற தலைப்பில் 'புளியங்குடி’ கோமதிநாயகம் ஆகியோர் பயிற்சி அளித்தனர். காலை பத்து மணியில் இருந்து, மாலை ஆறு மணி வரை நடைபெற்ற பயிற்சி முகாமில் 275 பேர் பங்கேற்றனர்.
பயிற்சியின்போது மாவுப்பூச்சிக்கு செல்வம் சொன்ன எளிய தீர்வு இதுதான்-
''மாவுப்பூச்சி தென்பட்டாலே பதறிப்போய் உரக்கடைக்காரர்கிட்ட ஓடிப்போய், ஏதாவது ஒரு பூச்சிக்கொல்லி ரசாயனத்தை வாங்கிட்டு வந்து அடிப்பாங்க. ஆனா, பூச்சிங்க ஒழியவே ஒழியாது. அதை ஒழிக்க ஒரே ஒரு சின்னத் தொழில்நுட்பத்தைக் கடைபிடிக்கணும்.
ஒரு லிட்டர் தண்ணிக்கு, ஒரு சிட்டிகைங்கிற கணக்குல ஏதாவது ஒரு சோப்புத்தூளைக் கலந்து, மாவுப்பூச்சி தாக்கியிருக்குற செடிகள் மேல முதல்ல தெளிக்கணும். பிறகு, உங்க இஷ்டம்போல ஏதாவது ஒரு மூலிகைப் பூச்சிவிரட்டி, வேப்பங்கொட்டைக் கரைசல் அல்லது பரிந்துரைக்கிற ரசாயனப் பூச்சிக்கொல்லினு எதை வேணாலும் தெளிக்கலாம்.
மாவுப்பூச்சியோட முதுகுப்புறத்துல ஒரு மெழுகுப்பூச்சு இருக்கும். முதல்ல சோப் தண்ணியைத் தெளிக்கும்போது, அந்த மெழுகுப்பூச்சு கரைஞ்சுடும். அதுக்கப்பறம் பூச்சிவிரட்டியைத் தெளிச்சா... பூச்சிகள் ஒழியும். சோப் தண்ணியைத் தெளிக்காம, எவ்வளவு வீரிய பூச்சிக்கொல்லியை அடிச்சாலும், அதுங்கள கட்டுப்படுத்தவே முடியாது.''
தொடர்ந்து பேசிய செல்வம், ''எந்தப்பயிரா இருந்தாலும், தொடர் கண்காணிப்பு இருக்கணும். முதல்முறையா மாவுப்பூச்சியைப் பாத்ததுமே அந்த செடியை வேரோட பிடுங்கி தீ வெச்சுடணும். அப்படி செய்யலைனா மூணே நாள்ல தோட்டம் முழுக்கப் பரவிடும். இது, இளம்குருத்து, இளம்தண்டுகளைத்தான் அதிகளவுல தாக்கும். அந்த இடங்களை அடிக்கடி கண்காணிச்சா... பூச்சித்தாக்குதலை சுலபமா கண்டுபிடிச்சுட முடியும்.
'கருவாட்டு எண்ணெய் சோப்’ (ஃபிஷ் ஆயில் ரோசின் சோப்)னு ஒரு சோப் இருக்கு. இதை ஒரு லிட்டர் தண்ணிக்கு 5 கிராம்கிற அளவுல கலந்து தெளிச்சா... மாவுப்பூச்சி மாதிரியான சாறு உறிஞ்சுற பூச்சிகளை எளிதா கட்டுப்படுத்தலாம். இது இயற்கை பொருள்ங்கிறதால பக்க விளைவுகள் இருக்கறதில்லை.
இயற்கை விவசாயிகளும்கூட தாராளமா பயன்படுத்தலாம். இதில்லாம வேளாண்மைப் பல்கலைக்கழகம் 3 விதமான ஒட்டுண்ணிக் குளவிகளை வெளியிட்டிருக்கு. இதைப் பயன்படுத்தியும் மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்த முடியும்'' என்று அருமையான யுக்திகளை அள்ளி வைத்தார்!
தொடர்ந்து... பஞ்சகவ்யா, மூலிகைப் பூச்சிவிரட்டி போன்ற இயற்கை இடுபொருட்கள் தயாரிப்புகளின் செயல்முறை விளக்கம்; பயிற்றுநர்களின் அனுபவப் பகிர்வு, படக்காட்சி, தொழில்நுட்ப விளக்கம் என முழுவதும் பயனுள்ள வகையில் நாள் முழுக்க நடந்தது பயிற்சி முகாம்.
'கட்டிமேடு' ஜெயராமன், தான் கையோடு கொண்டு வந்திருந்த 63 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை அரங்கில் பார்வைக்கு வைத்திருந்தார். அனைத்தும் விவசாயிகளைக் கவர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது!  


 ''வாசகர் வட்டம் உருவாக்கணும்!''
பயிற்சியில் கலந்து கொண்டவர்களில் ஒருவரான ஓய்வுபெற்ற தமிழக செய்தி-மக்கள் தொடர்புத்துறை உதவி இயக்குநர் பரதன், ''இந்தப் பயிற்சியில இயற்கை விவசாயத்துக்கான எளிய வழிமுறைகளைத் தெரிஞ்சுக்கிட்டேன். அதுக்கு பசுமை விகடனுக்கு என்னோட நன்றிகள். வாசகர்களை ஒருங்கிணைச்சு, ஒரு வாசகர் வட்டம் உருவாக்கி, அடிக்கடி இந்த மாதிரியான கலந்துரையாடல்களை நடத்தணுங்கிறது என்னோட கோரிக்கை'' என்று சொன்னார்.
அனுபவ அறிவுதான் பெரிசு!
திருத்துறைப்பூண்டியிலிருந்து வந்திருந்த பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் சந்திரசேகர், ''வங்கிப்பணியில இருந்தாலும், என்னோட நினைப்பெல்லாம் விவசாயத்து மேலதான். பாரம்பரிய நெல் ரகங்களைப் பத்தி ஜெயராமன் சொன்ன விஷயங்களைக் கேட்டப்போ ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு. மொத்தத்துல பயிற்சி ரொம்ப உபயோகமா இருந்துச்சு. காலேஜ்ல படிக்கிற புத்தக அறிவைக் காட்டிலும், இது மாதிரியான அனுபவ அறிவுதான் பெரிசு'' என்று சிலாகித்தார்.
 ஜி. பிரபு படங்கள்: எல். ராஜேந்திரன்
Source: pasumaivikatan

No comments: